Published:Updated:

50 லட்சம் டெபாசிட்... 15 லட்சம் லஞ்சம்... புலம்பும் ஆவின் பால் டீலர்கள்!

``ஆவின் நிர்வாகத்தில் உள்ள நிர்வாகச் சீர்கேடுகளைச் சரி செய்தாலே அனைத்தையும் சரி செய்துவிட முடியும்" என்கிறார்கள், சில நேர்மையான ஊழியர்கள்.

ஆவின்
ஆவின் ( விகடன் )

தமிழக அரசு, ஆவின் பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தியது மக்களிடம் பெரும் கொதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதிலிருந்தும் பல எதிர்ப்புகள் ஆரம்பித்துள்ளன. ஆவின் பால் விலை உயர்வைத் தொடர்ந்து, பல தனியார் நிறுவனங்களும் பால் விலையினை உயர்த்திவருகின்றன.

ஆவின்
ஆவின்
விகடன்

“பால் உற்பத்தியாளர்களுக்கான தொகையை உயர்த்தி வழங்கப்படும்போது, நிச்சயமாக நுகர்வோருக்கும் விலை உயர்த்தப்படும். ஏனெனில் நிர்வாகம் நஷ்டத்தில்தான் இயங்கு கிறது” என்பதுதான் பால் விலையின் உயர்வுக்குச் சொல்லப்படுகிற காரணம். ஆவின் நிர்வாகம் மட்டுமல்ல, அரசுப் போக்குவரத்துத் துறையும் கிட்டத்தட்ட இதே காரணங்களைத்தான் முன்வைக்கின்றன. ஆனால், ஆவின் நிர்வாகத்தில் உள்ள நிர்வாகச் சீர்கேடுகளைச் சரி செய்தாலே இவை அனைத்தையும் சரி செய்துவிட முடியும் என்கிறார்கள், சில நேர்மையான ஊழியர்கள்.

ஆவின் நிர்வாகத்தில் மாதாந்திர பால் விநியோக அட்டையில் நடந்து வரும் முறைகேடுகள் தொடர்பான கட்டுரையை, 01-09-2019 ஜூனியர் விகடனில் வெளியிட்டிருந்தோம். இந்த முறைகேடுகளைப்போல, ஆவின் பால் மொத்த விநியோகஸ்தர் முறையில் டீலர்ஷிப் வழங்குவதில் உள்ள முறைகேடுகள் பற்றிய தகவல்கள் நமக்குக் கிடைத்தன.

தினமும் 2 ஆயிரம், 3 ஆயிரம் லிட்டர் மட்டுமே பால் எடுத்து சிறிய அளவில் தொழில் செய்யும் டீலர்களால், அதிகாரிகள் கேட்கும் கமிஷன் தொகையைத் தர முடிவதில்லை.

இதுதொடர்பாக நம்மிடம் தொடர்புகொண்டு பேசிய சில ஆவின் ஊழியர்கள், “ஆவின் பால் விநியோகமானது சென்னையைப் பொறுத்தவரை சோழிங்கநல்லூர், மாதவரம், அம்பத்தூர் ஆகிய மூன்று பால்பண்ணைகள் மூலமாகத்தான் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு பால்பண்ணையிலும் குறைந்தபட்சம் 20 டீலர்கள் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த டீலர்களுக்கு முதன்முதலாக டீலர்ஷிப் வழங்கப்பட்டபோது 1 லட்ச ரூபாய் டெபாசிட் பெற்றுக்கொண்டு வழங்கினர். மூன்றரை வருடங்களுக்கு முன்பு புதிதாக இரண்டாவது முறையாக டீலர்ஷிப் வழங்கப்பட்டது. அப்போது 2 லட்சம் ரூபாய் டெபாசிட் பெற்றுக்கொண்டு டீலர்ஷிப்பை வழங்கினர். இந்த டீலர்களிடம் இருந்துதான் அதிகாரிகள் கமிஷன் தொகையைக் கேட்டுப் பெற்றுவந்தனர். ஆனால் தினமும் 2 ஆயிரம், 3 ஆயிரம் லிட்டர் மட்டுமே பால் எடுத்து சிறிய அளவில் தொழில் செய்யும் டீலர்களால், அதிகாரிகள் கேட்கும் கமிஷன் தொகையைத் தர முடிவதில்லை.

இதனால் இப்போது வழங்கப்பட்டுள்ள டீலர்ஷிப் முழுவதையும் ரத்து செய்துவிட்டு, ஒரு சிலர் மட்டும் பயனடையும் வகையில் பெரிய டீலர்கள் மட்டும் பங்குபெறும்படி, இதில் மாற்றம் கொண்டுவர ஆவின் நிர்வாகம் தயாராக உள்ளது" என அவர்கள் தெரிவித்தனர்

இதுகுறித்துப் பேசிய சிறிய அளவில் தொழில் நடத்தும் ஆவின் டீலர்கள் சிலர், ”ஒருவேளை டீலர்ஷிப்பில் இந்தப் புதிய முறையானது நடைமுறைப்படுத்தப்பட்டால், இனிவரும் காலங்களில் 50 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையும், 15 லட்சம் லஞ்சப் பணமும் சேர்த்து மொத்தம் 65 லட்ச ரூபாய் முதலீடு செய்பவர்களால் மட்டும்தான் இனி ஆவினில் டீலராக முடியும் எனும் நிலை உருவாகும். இதன்மூலம் சிறு டீலர்கள் பெரும் பாதிப்புகளுக்குள்ளாவார்கள். இந்தத் திட்டத்தால் வரும் காலங்களில் மொத்த ஆவின் நிர்வாகமும் ஒரு சில பெரிய டீலர்களின் கைகளுக்குச் சென்றுவிடும் அபாயமுள்ளது" என்றனர்.

ஆவின்
ஆவின்
விகடன்

இதுகுறித்து பேசிய ஆவின் பொது மேலாளர் ( விற்பனைப் பிரிவு ) ரமேஷ், “இதுவரை தற்போது நடைமுறையில் உள்ள டீலர்ஷிப் முறையில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பான எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை” என்றார்.

“மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு ஏதுவாகப் பால் உற்பத்தியைத் தொடர்ந்து அதிகரிப்பதில் பணியாற்றி வருகிறோம்” எனப் பால்வளத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவித்திருக்கிறது, அரசு. ஆனால், அதிகாரிகளின் செயல்பாடுகள் என்னவோ அலட்சியமானதாகவே இருக்கிறது. கொள்கைகளை வார்த்தைகளில் மட்டும் வைக்காமல் நடைமுறைப்படுத்தினால் அனைவருக்கும் நலமே.