சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் செல்வராஜன், டாக்டர் சீட் வாங்கித் தருவதாகப் பண மோசடி செய்த விவகாரம் குறித்து 04.03.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘‘டாக்டர் சீட் வாங்கித்தருவதாகச் சொல்லி ஏமாற்றி விட்டார்’’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டி ருந் zதோம். இந்த நிலையில், ஓய்வு பெறுவதற்கு இரண்டு வாரங்கள் முன்னதாக பேராசிரியர் செல்வராஜன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் அன்வர்தீன். இவர் கடந்த 2011-ம் ஆண்டு தன் மகன் சித்திக் ஹாசினுக்கு அண்ணா மலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் பெறுவதற்காக அங்கு பொருளாதாரத்துறைப் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர் செல்வராஜனுக்கு 26.5 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், ஆனால் சீட் கிடைக்கவில்லை என்றும் புகார் தெரிவித்திருந்தார். கொடுத்த பணத்தைக் கேட்டு அன்வர்தீன் சென்றபோது, பலமுறை அலைக்கழித்து 6 லட்ச ரூபாயை மட்டும் செல்வராஜன் திருப்பிக் கொடுத்தாராம்.
இது தொடர்பாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து, கமிட்டி அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. பணம் வாங்கியதை எழுத்துபூர்வமாக செல்வராஜன் ஒப்புக்கொண்டார். இருப்பினும், செல்வராஜன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தச் சூழலில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்றது. பின்னர் 21.12.2014 அன்று செல்வராஜன்மீது சிதம்பரம் நகர் காவல் நிலையத்தில் அன்வர்தீன் புகார் கொடுத்தார். தொடர்ந்து அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு நீதிமன்றம் சென்றும், சம்மனைப் பெறாமல் இழுத்தடித்துவந்தார் செல்வராஜன். இவற்றையெல்லாம் விரிவாக ஜூ.வி-யில் எழுதியிருந்தோம்.
அதன் பிறகு நடந்த சம்பவங்களை அன்வர்தீன் விவரிக்கிறார்... ‘‘ஜூ.வி-யில் செய்தி வெளியான பிறகு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். சிதம்பரம் கோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்கை மூன்று மாதங்களுக்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு செல்வ ராஜனும், அவருடைய மனைவியும் திருத்துறைப் பூண்டிக்கே வந்து நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து சமாதானம் பேசி, இறுதியில் 14 லட்சம் ரூபாய் திருப்பித் தருவதாக ஒப்புக்கொண்டனர்.

பணத்தை எடுத்து வருவதாகக் கூறிச் சென்றவர்கள், அதன் பிறகு என்னைத் தொடர்புகொள்ளவே இல்லை. எனவே, மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினேன். இதன் காரணமாக ஜூன் 30-ம் தேதி செல்வராஜன் பணி ஓய்வுபெற இருந்த நிலையில், உயர்கல்வித்துறையின் உத்தரவின் பேரின் ஜூன் 16-ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்குப் பெரிதும் துணைநின்ற ஜூ.வி-க்கு மனமார்ந்த நன்றி’’ என்றார்.
பல்கலைக்கழக பதிவாளரை அலைபேசியில் தொடர்புகொண்டு, விஷயத்தைச் சொல்லிக் கேட்டோம். நமது குரலைக் கேட்ட உடனேயே தொடர்பைத் துண்டித்துவிட்டார். மீண்டும் எடுக்கவே இல்லை.
தாமதமாக நடவடிக்கை என்றாலும் பல்கலைக்கழகத்தின் இந்த முடிவை ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் வரவேற்கிறார்கள்.