Published:Updated:

கூட்டுறவு கடனுக்கு கமிஷன்... ஊழியர்கள் சந்தாவில் முறைகேடு...

தொடர் சர்ச்சையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்!

பிரீமியம் ஸ்டோரி
‘சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு சர்ச்சைகள் புதிதல்ல’ என்று சொல்லிச் சொல்லியே அலுத்துவிட்டது. அந்த அளவுக்கு சர்ச்சைகள் தொடர்கின்றன.

உரிய கல்வித் தகுதி இல்லாமலும், தேவைக்கு அதிகமாகவும் நடந்த பேராசிரியர் பணி நியமனங்கள், குளறுபடியான நிர்வாகம், எண்ணற்ற முறை கேடுகள் ஆகிய காரணங்களால் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை, கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு கையகப்படுத்தியது. அதன் பிறகும் முறைகேடுகள் அதிகரித்திருக்கின்றனவே தவிர குறைந்தபாடில்லை!

அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவமனையின் ஊழியரான சேகர் என்பவர், ‘ `அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஊழியர் சங்கம்’ என்ற பதிவு செய்யப்படாத சங்கத்தின் மூலம் மனோகரன் என்பவர் முறைகேடுகளில் ஈடுபடுகிறார். அவருக்கு உடந்தையாக, பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கிருஷ்ண மோகன், விதிமுறைகளை மீறி ஊழியர்களின் சம்பளத்தில் சந்தாவைப் பிடித்தம் செய்து கொடுக்கிறார்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சேகர் - கிருஷ்ண மோகன் - கபில்தேவ் - மனோகரன்
சேகர் - கிருஷ்ண மோகன் - கபில்தேவ் - மனோகரன்

சேகரிடம் பேசினோம். “2015-ம் ஆண்டு நடைபெற்ற சங்கத் தேர்தலில் தற்போது தலைவராக இருக்கும் மனோகரன் வெற்றி பெற்றதும், ஏற்கெனவே சங்க நிர்வாகிகளாக இருந்த மதியழகன் உள்ளிட்ட ஏழு பேரை தன்னிச்சையாக நீக்கினார். அப்போது சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்த 8,000 பேரிடம் வசூல் செய்த சந்தா தொகை 8 லட்சம் ரூபாயை மறைத்துவிட்டு, வெறும் 97 பேர் மட்டும்தான் உறுப்பினர்களாக இருப்பதாகப் பதிவுசெய்தார். அதற்கான தொகை 9,700 ரூபாயை மட்டும் மாவட்ட சங்கங்களின் பதிவாளரிடம் கணக்கு காட்டினார். அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கில் சந்தா வசூலித்துக்கொண்டு வெறும் 9,700 ரூபாயை மட்டும் கணக்கில் காட்டிவருகிறார் மனோகரன்.

இந்தநிலையில்தான் கடந்த 2018-ம் ஆண்டு மீண்டும் ஊழியர்கள் சங்கத் தேர்தல் நடந்தது. 8,000 பேர் உறுப்பினர்களாக இருந்த சங்கத்தில், தமக்கு எதிரானவர்கள் என்று இவர் நினைத்த 4,000 பேரை நீக்கிவிட்டு, தேர்தலை நடத்தினார். அதில் 300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரது அனைத்து முறைகேடு களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் துணை போகிறது.

பல்கலைக்கழகத்தின் பதிவாளராக (பொறுப்பு) இருக்கும் கிருஷ்ண மோகன், ஊழியர்களின் சம்பளத்திலிருந்து சந்தா தொகையைப் பிடித்து மனோகரனிடம் கொடுக்கிறார். சங்கத்துக்கு சந்தா பிடித்துக் கொடுப்பதுதான் பதிவாளரின் வேலையா? வடலூரிலிருக்கும் சங்கத்தின் முகவரியில் கடந்த மூன்று ஆண்டுகளாக முடிதிருத்தும் கடைதான் இயங்கி வருகிறது. ‘இந்தச் சங்கம் பல்கலைக்கழகத்தின் தடையில்லாச் சான்றிதழைப் பெறவில்லை’ என்று எழுத்துபூர்வமாகக் கூறியிருக்கும் பல்கலைக்கழகத்தின் பதிவாளரே அதற்குச் சந்தாவும் வசூலித்துக் கொடுப்பதுதான் வேடிக்கை” என்றார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

நம்மிடம் பேசிய ஊழியர்கள் சிலர், “இது மட்டுமல்ல... பல்கலைக்கழகத்தில் இயங்கும் கூட்டுறவு கடன் சங்கம், ஊழியர்களின் சம்பளத்தின் அடிப்படையில் 7 லட்சம் ரூபாய் வரை கடன் கொடுக்கும். அந்தச் சங்கத்தின் தலைவராக இருப்பவர் கபில்தேவ். அங்கும் முறைகேடுகள் நடக்கின்றன. ஒரு லட்சம் ரூபாய் கடன் வேண்டுமென்றால் 5,000 ரூபாய் கமிஷன் கொடுக்க வேண்டும். அதை வசூல் செய்ய தனியாக ஐந்து புரோக்கர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் மாதந்தோறும் லட்சக்கணக்கான தொகையை கமிஷன் அடிக்கிறார்கள்” என்றார்கள்.

பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கிருஷ்ண மோகனைச் சந்தித்து, இது குறித்துக் கேட்டோம். “இது சங்கம் தொடர்பான பிரச்னை. இதற்கும் பல்கலைக்கழகத்துக்கும் தொடர்பு கிடையாது. இது தொடர்பான வழக்கில் அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டோம். இத்தனை ஆண்டுகளாக ஊழியர்களின் சம்பளத்தில் சந்தா தொகையைப் பிடித்துக் கொடுத்தோம் என்பது உண்மைதான். ஆனால், இப்போது புகார் கிளம்பியிருப்பதால் இந்த ஆண்டு பிடிக்கவில்லை” என்றார்.

கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் கபில்தேவ், “என்மீது களங்கம் கற்பிப்பதற்கான பொய்க் குற்றச்சாட்டு இது. சீனியாரிட்டி அடிப்படையில் மட்டுமே கடன் வழங்குகிறோம்” என்றார்.

ஊழியர் சங்கத்தின் தலைவர் மனோகரனிடம் பேசினோம். “எல்லா கணக்குகளையும் முறையாக வைத்திருக்கிறோம். போராட்டங்கள், விழாக்கள் என நிறைய செலவு செய்கிறோம். ஊழியர்களிடம் அனுமதிக் கடிதம் பெற்றுத்தான் அவர்களின் சம்பளத்தில் சந்தா பிடிக்கப் படுகிறது. சங்கத்தில் உறுப்பினராக இருந்தவர்கள் பணியிட மாறுதலில் சென்றதால், 4,000 பேராகக் குறைந்து விட்டனர். புகாரை சட்டப்படி எதிர்கொள்வோம்” என்றார்.

எளிய குடும்பத்து மாணவர்களை மனதில்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆனால், பணம் பண்ணும் நோக்கம் மட்டுமே இப்போது மேலோங்கி நிற்கிறது. நிர்வாகமே இந்தச் சுழலில் சிக்கியிருக்கும் போது, மாணவர்களின் நிலையை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு