Published:Updated:

“காட்டுக் கொடிகளை அகற்றியதில் முறைகேடு!”

குமரி வனத்துறையைச் சுற்றும் சர்ச்சை

பிரீமியம் ஸ்டோரி
காட்டு மரங்களில் படரும் களைக்கொடிகளை அகற்றியதாகக் கணக்குகாட்டி, ஒப்பந்ததாரர்கள் மூலம் அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளதாக எழுந்துள்ள புகார், குமரி மாவட்ட வனத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் மணலிக்கரை அருகே மணக்காவிளையைச் சேர்ந்தவர் சேம் பெனட் சதீஷ். வனத்துறை ஒப்பந்ததாரரான இவர், கொற்றிக்கோடு காவல்நிலையத்தில் கொடுத்த புகார்தான் பிரச்னையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

“காட்டுக் கொடிகளை அகற்றியதில் முறைகேடு!”

அந்தப் புகாரில், ‘எனது வங்கிக்கணக்கில் 2.4.2020 அன்று களியல் வனச்சரகரால் 9,06,167 ரூபாய் வரவுவைக்கப்பட்டது. பிறகு, என்னைச் சந்தித்த களியல் வனச்சரகர் கணேசன், உதவி வனப்பாதுகாவலர் ஷா நவாஸ்கான் ஆகியோர், ‘உங்கள் வங்கிக்கணக்கில் போடப்பட்ட பணத்தில் ஏழு லட்சம் ரூபாயை எடுத்துக் கொடுங்கள். அதற்கு வேறு ஒப்பந்தப் பணியில் செட்டில் செய்கிறோம்’ என்றார்கள். அதற்கு நான், ‘ஐந்து லட்சம் ரூபாய் தருகிறேன். அதற்காக காசோலை தர வேண்டும்’ என்று கேட்டேன். அவர்கள் சம்மதித்ததால் 9.4.2020 அன்று வங்கியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் எடுத்தேன். அந்தப் பணத்தை வாங்க வந்த வனத்துறை ஊழியர்கள் காசோலை தராததால், நான் பணத்தைக் கொடுக்கவில்லை.

பிறகு என் வீட்டுக்கு வந்த வனத்துறையினர், என்னை மிரட்டி ஐந்து லட்சம் ரூபாய் பணமும், 2,06,167 ரூபாய்க்கான காசோலையும் வாங்கிக் கொண்டனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதுடன், ஐந்து லட்சம் ரூபாய் மற்றும் காசோலை ஆகியவற்றை மீட்டுத் தர வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகார் குறித்து சேம் பெனட் சதீஷிடம் பேசினோம். “காவல்துறை விசாரணை நடப்பதால் பேச முடியாது” என்று மறுத்துவிட்டார். இதுகுறித்து விவரம் தெரிந்த சிலர் நம்மிடம் பேசினார்கள். ‘‘காட்டில் உள்ள அரிய மரங்கள் மற்றும் ரப்பர் மரங்கள் மீது களைக்கொடிகள் படர்ந்து வளரும். அவற்றை அழிக்காவிட்டால் அந்தக் கொடிகள் மரங்களை முற்றிலும் அழித்துவிடும். வனத்துறையினரே கொடிகளைப் பெயரளவுக்கு அகற்றிவிட்டு, அந்தப் பணியை ஒப்பந்ததாரர்கள்மூலம் செய்ததாகக் கணக்கு காட்டுவார்கள். இதற்காக ஒப்பந்ததாரர் வங்கிக்கணக்கில் வரவுவைக்கும் பணத்தை, வனத்துறையினர் வாங்கிக்கொள்வார்கள்.

அந்த வகையில், காட்டுக்கொடிகளை அகற்றும் ஒப்பந்தத்தை சேம் பெனட் சதீஷுக்குக் கொடுத்துள்ளனர். அந்தப் பணிகளை தாங்கள் செய்வதாகவும், அதற்கான பில் கிளைம் ஆனதும் கமிஷன்போக மீதியை தங்களுக்குத் தந்துவிடுங்கள் என வனத்துறை அதிகாரிகள் சிலர் கூறியுள்ளனர். சேம் பெனட் சதீஷும் சம்மதித்துள்ளார்.

அவர் ஏற்கெனவே செய்த இரண்டு பணிகளுக்கான தொகை வராத நிலையில், காட்டுக்கொடிகள் அகற்றிய பணிக்காக 9,06,167 ரூபாய் அவரது வங்கிக்கணக்குக்கு வந்துள்ளது. பழைய இரண்டு பணிகளுக்கான தொகை வராமலேயே போய்விடுமோ என்ற அச்சம் சேம் பெனட் சதீஷுக்கு ஏற்பட்டுவிட்டது. அதனால், வங்கிக்கணக்குக்கு வந்த பணத்தை, பேசியபடி வனத்துறை அதிகாரிகளுக்குக் கொடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த வனத்துறை அதிகாரிகள், சேம் பெனட் சதீஷை மிரட்டி பணம் வாங்கியிருக் கிறார்கள்’’ என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷிடம் பேசினோம். ‘‘விசாரணை இப்போதுதான் தொடங்கியுள்ளது. அதுபற்றி எதுவும் சொல்ல முடியாது’’ என்றார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் ஷா நவாஸ்கானிடம் பேசினோம்.

‘‘சேம் பெனட் சதீஷ் ஏற்கெனவே இரண்டு ஒப்பந்தப் பணிகளைச் செய்திருக்கிறார்தான். கொரோனா காரணமாக அதற்கான பணம் வர தாமதமாகிறது. இந்த நிலையில், காட்டுக்கொடிகள் அகற்றும் பணிக்கான தொகை சேம் பெனட் சதீஷின் வங்கிக்கணக்கில் போடப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பணத்தை தனக்குக் கீழே வேலைசெய்த தொழிலாளர்களுக்குக் கொடுக்காமல் வைத்திருக்கிறார். பணம் கேட்டவர்களிடம், ‘ரேஞ்சர்தானே வேலை கொடுத்தார். அவரிடமே பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள்’ எனக் கூறியிருக்கிறார்.

“காட்டுக் கொடிகளை அகற்றியதில் முறைகேடு!”

தொழிலாளர்கள், வனச்சரகரிடம் முறையிட்டனர். எனவே, பணத்தைக் கொடுக்குமாறு சேம் பெனட் சதீஷிடம் தெரிவிக்கப்பட்டது. ‘கொரோனா காரணமாக வீட்டைவிட்டு வர முடியாது’ என அவர் கூறினார்.

அதனால், பணம் வாங்க அவரது வீட்டுக்கு வனத்துறை ஊழியர்கள் சென்றுள்ளனர். அங்கு சென்றபோது, ‘பணம் பெறுவதாக எழுதித் தாருங்கள்’ என்று பிரச்னை செய்துள்ளார். அதன் பிறகு போலீஸில் புகார் அளித்துள்ளார். நடந்தது இதுதான். முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை’’ என்றார்.

கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் அசோக்குமாரிடம் பேசினோம். ‘‘இதுதொடர்பாக பழைய ரெக்கார்டுகளை சரிபார்த்துவருகிறோம். விசாரணை நடந்துவருகிறது. தவறு நடந்திருப்பது உண்மையென்றால், நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

அகற்றப்பட வேண்டியவை களைக்கொடிகள் மட்டுமல்ல... முறைகேடு செய்பவர்களையும்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு