Published:Updated:

பட்டா கிடையாது, புறம்போக்கு நிலம்.. லட்சங்கள் சுருட்டல்!- பழங்குடி மக்களை ஏமாற்றிய மோசடிக் கும்பல்

வேலியே பயிரை மேய்ந்த கதையாய், சினிமா பாணியில் முதுமலை பழங்குடி மக்களை வனத்தை விட்டு வெளியேற்றும் மறுகுடியமர்வு திட்டத்தில் வனச்சரகர், வழக்கறிஞர், இடைத்தரகர்கள் என கூட்டாக இணைந்து பல கோடி ரூபாயை மோசடிசெய்து அபகரித்துள்ளனர்.

Mudumalai Tribes
Mudumalai Tribes

வனப்பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில், வனங்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் வனத்தில் வாழும் பழங்குடி மக்களை வெளியேற்றும் முயற்சி, கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. இதற்கு சூழலியல் ஆய்வாளர்கள், பழங்குடி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். காட்டின் உண்மைக் காவலர்களான பழங்குடிகளை மறு குடியமர்வில் ஆளுக்கு 10 லட்சம் பணம் வழங்கப்படும், வீடுகள் கட்டித்தரப்படும் எனப் பல்வேறு ஆசை வார்த்தைகளைக் கூறி, கோல்டன் ஹேண்ட்ஷேக் என்ற பெயரில் கட்டாயப்படுத்தி வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.

Near Mudumalai
Near Mudumalai

முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பென்னை, நெல்லிக்கரை, நாகம்பள்ளி, மண்டக்கரை, புலியம்பாளையம், முதுகுழி, குடித்தகன் ஆகிய 7 கிராமங்கள் உள்ளன. மறு குடியமர்வு திட்டத்தின் கீழ் இந்த 7 கிராம மக்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவந்தது. மூன்று கட்டமாக இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதனிடையே, மறு குடியமர்வில் ரூ.10 லட்சம் பெற்ற பழங்குடியின மக்களை ஏமாற்றி, பட்டா நிலத்தை வாங்கித் தராமல், மச்சக்கொல்லி பகுதியில் பிரிவு 17 புறம்போக்கு நிலத்தை விற்பனைசெய்ய திட்டம் தீட்டி, ஒரு கும்பல் களமிறங்கியது. பழங்குடி மக்கள்தானே வெளியில் சொல்ல மாட்டார்கள் என கணக்குபோட்டது அந்தக் கும்பல். இந்த விஷயம் போலீஸார் காதுக்கு வந்தது.

மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்மணி தலைமையிலான போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மறு குடியமர்வு திட்டத்தில் பழங்குடியின மக்களிடம் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இவ்விவகாரத்தில் தொடர்புடைய வனச்சரகர் சுரேஷ்குமார் உட்பட 9 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Group House
Group House

இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``முதுமலை புலிகள் காப்பகத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களை வேறு இடத்துக்கு மாற்றும் வகையில் மறு குடியமர்வு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் புளியம்பாளையம் பகுதியில் வசித்த பழங்குடியின மக்களுக்கு ரூ.10 லட்சம் நிதி, அவர்களது வங்கிக் கணக்கில் அரசு சார்பில் செலுத்தப்பட்டது. அவர்களை அணுகிய சிலர், வீடுகள் கட்ட நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, வங்கிக் கணக்கு புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டனர். பின்னர், மச்சக்கொல்லி பகுதியில் ஒவ்வொருவருக்கும் இடம் வாங்கிக் கொடுத்துள்ளனர். இதற்கு ஈடாக அவர்களிடம் கைநாட்டு பெற்று, பழங்குடியினரின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை வேறு கணக்கிற்கு மாற்றியுள்ளனர். பின்னர், நோட்டரி வக்கீல் ஒருவர் மூலம் போலியாக ஆவணங்கள் தயாரித்து, சம்பந்தப்பட்ட பழங்குடியின மக்களிடம் வழங்காமல் அவர்களிடமே வைத்திருந்தனர். நிலத்தை வாங்கிய பழங்குடியின மக்கள் அங்கு வீடு கட்டியுள்ளனர். அடுத்து, மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அப்போது தான் அது புறம்போக்கு நிலம் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக, கண்ணன் என்பவர் தலைமையில் 21 பேர் எஸ்.பி-யிடம் புகார் அளித்தனர்.

இப்புகார், குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், முதுமலை மறு குடியமர்வு திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இதில் தொடர்புடைய வனச்சரகர் சுரேஷ்குமார், வக்கீல் சுகுமாரன், நிலத் தரகர்கள் பேபி, ராதாகிருஷ்ணன், சீனிவாசன், புறம்போக்கு நிலத்தை சொந்தம்கொண்டி பழங்குடி மக்களுக்கு விற்பனைசெய்த ஜோசப், பாபு, தாமஸ் மற்றும் நோட்டரி வக்கீல் ஜெயாஜோசப் ஆகியோர்மீது கூட்டு சதி செய்து ஏமாற்றுதல், போலி ஆவணம் தயாரித்து உண்மை எனக் கூறி ஏமாற்றுதல் என்பன உள்ளிட்ட 8 பிரிவுகள் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருப்பின், ஊட்டியில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீஸை அணுகி புகார் அளிக்கலாம்'' என்றனர்.

Mudumalai Tribes
Mudumalai Tribes

இதுகுறித்து முதுகுழி சுரேஷ் கூறுகையில், “முதுமலை வனப்பகுதிகளில் உள்ள பணியர், காட்டு நாயக்கர், மவுண்டாடன் செட்டி ஆகிய மக்களை மறு குடியமர்வு என்ற பெயரில் அரசு அதிகாரிகள், சில வழக்கறிஞர்கள் இடைத்தரகர்களுடன் கூட்டாக இணைந்து, அரசு நிலத்தையே விற்றுள்ளனர். மேலும், பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட பல கோடி ரூபாய் பணத்தையும் ஏமாற்றி உள்ளனர். இந்த கூட்டுக் கொள்ளையில் தொடர்புடைய அனைவரின் மீதும் வழக்குபதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.