Published:Updated:

முதல்வரின் உறவினர்களுக்காக நடக்கிறதா ஊழல்?

சாலை
பிரீமியம் ஸ்டோரி
News
சாலை

கொந்தளிக்கும் சாலை ஒப்பந்ததாரர்கள்

கடந்த 10.05.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி’ என்ற தலைப்பில் கழுகார் விவரித்திருந்த தகவல்கள் இப்போது தமிழகத்தில் கடும் விவாதமாக மாறியுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலைப் பராமரிப்புக்கான டெண்டரில் விதிமீறல் நடைபெற்றிருப்பது குறித்தும் அதன் பின்னணி குறித்தும் அதில் விவரித்திருந்தார் கழுகார். இந்தப் பிரச்னை குறித்து நீதிமன்ற படியேறியுள்ள தஞ்சாவூரைச் சேர்ந்த முதல்நிலை ஒப்பந்ததாரர்களிடம் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தஞ்சாவூரைச் சேர்ந்த தி.மு.க பிரமுகரும் முதல்நிலை ஒப்பந்ததாரருமான குமார் என்கிற துரை.ஜெயக்குமார், ‘‘தஞ்சாவூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளை (சுமார் 833 கிலோமீட்டர் நீளம்) ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். இந்தப் பராமரிப்புப் பணிக்காக பி.பி.எம்.சி (performance based maintenance contract) அடிப்படையிலான ஒப்பந்த முறையை, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நெடுஞ்சாலைத் துறை மானிய கோரிக்கையின்போது அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த அறிவிப்பு, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த முதல்நிலை ஒப்பந்ததாரர் களான எங்களை அதிர்ச்சியடைய செய்தது. இதுகுறித்து முதல்வரிடம் பேசுவதற்காக சென்னை சென்றோம். ஆனால், அவர் எங்களைச் சந்திக்கவில்லை.

முதல்வரின் உறவினர்களுக்காக நடக்கிறதா ஊழல்?

பல கோடி ரூபாய் முதலீடு செய்து சாலை அமைப்பதற்கான இயந்திரங்களை வாங்கிவைத்துள்ளோம். மொத்த பணிகளையும் ஒரே நிறுவனத்துக்கு தூக்கிக் கொடுத்தால் முப்பதுக்கும் மேற்பட்ட முதல்நிலை ஒப்பந்ததாரர் களின் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும். நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என, முதல்வருக்கும் நெடுஞ் சாலைத் துறைக்கும் மனு அனுப்பினோம். தொடர்ந்து, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் புகார் கடிதம் அனுப்பினோம். எந்தப் பலனும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒப்பந்தப் பணிகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து மதிப்பீடு தயார்செய்து தந்திரமாக ஒப்புதல் பெற்றனர். கடந்த பிப்ரவரி மாதம் அதற்கான அரசாணை வெளியிடப் பட்டது. மார்ச் மாதம் ஆன்லைன் டெண்டரும் அறிவிக்கப்பட்டது.

இந்தச் சாலைப் பராமரிப்புப் பணிக்கு, 1,947 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பு தயார்செய்து நிதி ஒதுக்கியுள்ளனர். அதாவது ஒரு கிலோமீட்டருக்கு சராசரியாக 2 கோடியே 33 லட்சம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கியுள்ளனர். இது மிக மிக அதிகமான தொகை. ஒரு கிலோமீட்டருக்கான பணியை இதுவரை நாங்கள் 1 கோடி ரூபாய் அளவிலேயே செய்துவந்தோம். ஆனால், தற்போது கிலோ மீட்டருக்கு 1 கோடியே 33 லட்சம் ரூபாய் கூடுதலாக ஒதுக்கியுள்ளனர். எங்கள் கணக்குப்படி மொத்த பணிகளுக்குமே சுமார் 833 கோடி ரூபாய்தான் செலவாகும். ஆனால் 1,947 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளனர்.

இந்த டெண்டரை, முதல்வருடையை உறவினர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் பங்குதாரர்களாக உள்ள சென்னை எஸ்.பி.எல் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ், மதுரை ஆர்.ஆர் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ், புதுச்சேரியைச் சேர்ந்த ஓம்சக்தி கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்குக் கொடுப்பதற்காக அரசு பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டுவருகிறது. இதில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, மே 5-ம் தேதி நடக்கவிருந்த ஏலத்தை தள்ளிவைத்து விட்டனர். மே 29-ம் தேதி ஒரு டெண்டருக்கான ஏலமும், ஜூன்-5 தேதி மற்றொரு டெண்டருக்கான ஏலமும் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

டெண்டரை எதிர்த்து தஞ்சையைச் சேர்ந்த 21 முதல்நிலை ஒப்பந்ததாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். வரும் மே 14-ம் தேதி அன்று இந்த மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன” என்றார்.

துரை.ஜெயக்குமார் -  செல்வேந்திரன்
துரை.ஜெயக்குமார் - செல்வேந்திரன்

மற்றோர் ஒப்பந்ததாரரான செல்வேந்திரன், “இதற்கான திட்ட மதிப்பு தயார்செய்யப்பட்ட பிறகு, தார் விலை டன்னுக்கு 9,000 ரூபாய் வரை குறைந்துள்ளது. இதனால் மொத்த மதிப்பில் 20 சதவிகிதம் செலவு குறையும். அதையெல்லாம் கணக்கில் கொள்ளாமலேயே டெண்டர் விடுவதற்கு முயன்றுள்ளனர்.

நெடுஞ்சாலைத் துறை விதிகளின்படி ஒரு நிறுவனம் டெண்டரில் பங்குபெற, அந்த டெண்டரின் மொத்த மதிப்பில் அதே மாதிரியாக 40 சதவிகிதப் பணிகளைச் செய்திருக்க வேண்டும். ஆனால், முதல்வர் தரப்புக்கு நெருக்கமானவர்களுக்கு இந்தப் பணியைக் கொடுக்க வேண்டும் என ‘மொத்த மதிப்பில் 20 சதவிகிதப் பணிகளைச் செய்திருந்தாலே போதும்’ என விதிமுறைகளை வளைத்துள்ளனர். டெண்டர் மதிப்பீட்டுப் பணியிலும் விதிமீறல்கள் நடந்துள்ளன. அதற்கான ஆதாரங்களை நாங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்போம்” என்று தகித்தார்.

இதுதொடர்பான விளக்கம் பெற, நாம் முதல்வரின் செயலாளர் விஜயகுமாரையும், மக்கள் தொடர்பு அலுவலகத்தையும் தொடர்புகொள்ள முயன்றும் பலனில்லை. முதல்வர் வட்டாரங்களில் விசாரித்தபோது “வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இதுகுறித்து யாரும் எதுவும் பேச மாட்டார்கள்” என்று முடித்துக்கொண்டனர். நமது கேள்விகளை முதல்வரின் அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரிகளான cmcell@tn.gov.in, mlaedappadi@tn.gov.in ஆகியவற்றுக்கு அனுப்பியுள்ளோம். அவரிடமிருந்து பதில் வரும்பட்சத்தில் பிரசுரிக்க தயாராகவுள்ளோம்.

முதல்வர் என்பவர் சந்தேகத்துக்கு அப்பாற்றப்பட்டவராக இருக்க வேண்டும். ஆனால், அவரைச் சுற்றியே சந்தேக மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. விரைவில் முதல்வர் பதில் சொல்வார் என நம்புவோம்.