Published:Updated:

`பண்ணை வீடு டு இன்ஜினீயரிங் கல்லூரி'- அதிகாரிகளின் கலெக்‌ஷன் ரிப்போர்ட் #Endcorruption

 எழிலகத்தில் செயல்படும் வணிக வரித்துறை கமிஷனர் அலுவலகம்
எழிலகத்தில் செயல்படும் வணிக வரித்துறை கமிஷனர் அலுவலகம்

வணிக வரித்துறை மூலம் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைத்தாலும், அரசை ஏமாற்ற புதுப்புது டெக்னிக் இந்தத் துறையில் பின்பற்றப்படுகிறது.

தமிழக அரசுக்குக் கிடைக்கும் வருவாயை அள்ளிக்கொடுக்கும் அமுதசுரபியாக இருக்கும் துறை, வணிக வரித்துறை. இந்தத் துறையில் நடக்கும் ஊழல்கள் வெட்டவெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய வணிக வரித்துறை அலுவலர்கள், ``தமிழகத்தில் சென்னை வடக்கு, கிழக்கு, சென்ட்ரல், மேற்கு, வேலூர், சேலம், திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, ஈரோடு என 11 கோட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதில் நிர்வாகம், நுண்ணறிவு என இரண்டு பிரிவுகள் உள்ளன. இதனால், 22 கோட்ட அலுவலகங்கள்மூலம் வணிகர்களின் வரிவிதிப்புகள் கண்காணிக்கப்படுகின்றன.

வணிகவரித்துறை அலுவலகங்கள்
வணிகவரித்துறை அலுவலகங்கள்

ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குப் பிறகு, மாநில அரசின் வரி வருவாய் குறித்த முழுமையான தகவல்கள் தெரியவில்லை. ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன், ஒவ்வோர் ஆண்டும் தமிழக வணிக வரித்துறைக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும். அந்த இலக்கைவிட அதிக வருவாயை ஈட்டிக்கொடுத்த துறையாக இந்தத் துறை செயல்பட்டது. ஆனால் இன்று, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு கணக்குகளைத் தாக்கல் செய்வதிலும் பல்வேறு குளறுபடிகள் நீடித்துவருகின்றன. குறிப்பாக, 2017-18-ம் ஆண்டுக்குரிய வரி தாக்கல் விவரங்களைச் சமர்பிக்க, 2019 ஆகஸ்ட் மாதம்வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் நேரடி கட்டுப்பாடு இல்லாத காரணத்தால், வரி வசூலிப்பதிலும் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. கர்நாடகாவில் இறந்துபோன ஒருவரின் ஆதார் நம்பரைக் கொண்டு வணிகம் நடத்திய ஒரு நெட்வொர்க், அதன்மூலம் பல கோடி ரூபாயை அரசுக்கு செலுத்தாமல் ஏமாற்றியுள்ளது.

ஒரு போட்டோ, பான் கார்டு நம்பர் இருந்தால் போதும், வணிகம் செய்வதற்கான அனுமதியை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. அதன்மூலம், போலியான அனுமதியைப் பெற்று வரி ஏய்ப்பு நடக்கிறது. முன்பெல்லாம் வணிக வரித்துறையில் என்ஃபோர்ஸ்மென்ட் என்ற பிரிவு, வரி வசூல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும். தற்போது அந்தப் பிரிவு, 'நுண்ணறிவு' என்று மாற்றப்பட்டுள்ளது. இதனால் வரிவசூல் கண்காணிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

வணிக வரித்துறையில் உள்ள 4 இணை கமிஷனர்களின் கை ஓங்கியுள்ளது. அவர்கள், நேரடியாக டீலர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு ஊழலில் கொடிக்கட்டிப் பறக்கின்றனர். அதில் மூன்று பேருக்கு வணிக வரித்துறை மெமோ கொடுத்துள்ளது. அந்த அளவுக்கு அவர்களின் மீதான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி

ஆந்திர எல்லையையொட்டி உள்ள பகுதியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், அமைச்சர் தரப்புக்கு மிகவும் நெருக்கமானவர். இதனால் அவர், வணிக வரித்துறையில் அரசின் கஜானாவுக்குச் செல்ல வேண்டிய வருவாயைத் தன்னுடைய சொந்த பாக்கெட்டில் நிரப்பி வருவதாக, அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அந்த அதிகாரி, தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள விளைநிலங்களைப் பினாமி பெயரில் வாங்கிக் குவித்துவருகிறார். சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரைக்கொண்ட அந்த அதிகாரிக்கு, துறையில் நேர்மையானவர் என்ற இமேஜ் உள்ளது. ஆனால், திரைமறைவில் அவர் செய்யும் தில்லாலங்கடி வேலைகள் அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். முருகனின் அறுபடை வீடுகளில், தென் மாவட்டத்திலிருக்கும் இடத்தை சொந்த ஊராகக்கொண்டிருக்கும் அந்த அதிகாரி, தி.மு.க கூட்டணியிலிருக்கும் கட்சியின் தலைவருக்கு நெருக்கமானவர். அவர், முருகனின் அறுபடை வீடு இருக்கும் இடத்தில் பிரமாண்டமாய் பண்ணை வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். இதற்குத் தேவையான சிமென்ட், இரும்புக் கம்பிகள் மற்றும் கட்டடப் பொருள்கள், சம்பந்தப்பட்ட டீலர்கள்மூலம் அந்த அதிகாரிக்கு சப்ளை செய்யப்பட்டுவருகிறது.

பலாப்பழத்துக்கு பெயர்போன ஊரைச் சேர்ந்த அந்த அதிகாரி, சென்னையையொட்டி உள்ள புறநகர்ப் பகுதியில், சத்தமில்லாமல் இன்ஜினீயரிங் கல்லூரி கட்டிவருகிறார். இதனால் இவரும் டீலர்மூலம் கட்டடப் பணிகளுக்குத் தேவையான பொருள்களை அதிகாரத்தைப் பயன்படுத்தி பெற்றுவருகிறார். இவர்கள் 4 பேரைக் குறித்து தகவல் அறிந்த வணிக வரித்துறை உயரதிகாரி ஒருவர், 3 பேரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறார்" என்றனர்.

முருகனின் அறுபடை வீடு இருக்கும் இடத்தில், பிரமாண்டமாய் பண்ணை வீடு ஒன்றைக் கட்டிவருகிறார். இதற்குத் தேவையான சிமென்ட், இரும்புக் கம்பிகள் மற்றும் கட்டடப் பொருள்கள், சம்பந்தப்பட்ட டீலர்கள்மூலம் அந்த அதிகாரிக்கு சப்ளை செய்யப்பட்டுவருகிறது.
வணிக வரித்துறை அலுவலர்

வணிக வரித்துறையில் பவர் ஃபுல் போஸ்ட்டாகக் கருதப்படும் இணை ஆணையர், நிர்வாகப் பதவிகளுக்கு இடமாறுதல் நடைபெற உள்ளது. இதனால் இந்தப் பதவியைப் பெற விரும்புவர்கள், பணத்தை மூட்டையாகக் கட்டி வைத்துக்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்துவருகின்றனர். நிர்வாகப் பிரிவு இணை ஆணையர் பதவி இடமாறுதலுக்கு ஒரு கோடி ரூபாய் என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையர் பதவிக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. துணை ஆணையர் இடமாறதலுக்கு, நிர்வாகப் பிரிவுக்கு 50 லட்சம் ரூபாயும், நுண்ணறிவுப் பிரிவுக்கு 75 லட்சம் ரூபாயும் உதவி ஆணையர் இடமாறுதலுக்கு 25 லட்சம் ரூபாய் எனவும் வசூலிக்கப்படுகிறது. வணிக வரித்துறையில் பணியாற்றுபவர்கள், இடமாறுதல் மூலம் கணிசமான தொகை ஒவ்வோர் ஆண்டும் கைமாறுகிறது. இந்தச் சூழ்நிலையில், சமீபத்தில் நடந்த மாநில வரி அலுவலர், துணை மாநில வரி அலுவலர் பதவிகளுக்கான இடமாறுதல், கவுன்சலிங் மூலம் நடத்திமுடிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு இடமாறுதலுக்கு குறிப்பிட்ட தொகை பேரம் பேசப்படவில்லை. ஆனால், அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் பதவிகளின் இடமாறுதலுக்குத்தான் குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வணிகவரித் துறையில், இடமாறுதல் தொடங்கி ஒவ்வொன்றுக்கும் ஒரு ரேட் உள்ளது" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு