Published:Updated:

லஞ்சம் வாங்குவதில் காவல் துறை டாப்... ஆனால், மருத்துவமனையில்தான் அதிகம் கொடுக்கிறோம்! #EndCorruption

ரஞ்சித் ரூஸோ
எஸ்.மகேஷ்

லஞ்சம் வாங்குவதில், கொடுப்பதில் மக்களின் கருத்து என்ன, தனியார் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு.

#EndCorruption
#EndCorruption

உலகளவில் ஊழலுக்கு எதிராக இயங்கும் 'டிரான்பரன்ஸி இன்டர்நேஷனல்' எனும் நிறுவனம், கடந்த ஆண்டு 16 நாடுகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பை நடத்தியிருக்கிறார்கள்.

#EndCorruption
#EndCorruption
Image by OpenClipart-Vectors from Pixabay

இதில், இந்தியாவில் ஊழல் அதிகரித்திருப்பதாக 41 சதவிகிதம் மக்கள் கூறியுள்ளார்கள். மொத்தம் எடுக்கப்பட்ட 16 நாடுகளிலிருந்து இந்தியாவின் சர்வே முடிவுகளை மட்டும் இன்ஃபோகிராபிக்ஸாகத் தொகுத்துள்ளோம்.

இந்தக் கருத்துக்கணிப்பில் நான்கில் ஒருவர் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு லஞ்சம் கொடுத்திருப்பதாகக் கூறியுள்ளார்கள். இந்த சர்வேயில், லஞ்சம் வாங்குவதில் காவல் துறையின் கையே ஓங்கியிருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

#EndCorruption
#EndCorruption

இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவில், இளைஞர்களிடம் லஞ்சம் அதிகம் கேட்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. 35 வயதுக்குட்பட்ட 34 சதவிகிதம் பேரிடம் லஞ்சம் வாங்கப்படுகிறதாம். ஆனால், 55 வயதுக்கு அதிகமாக இருப்பவர்களில் 19 சதவிகித மக்களிடம் மட்டுமே லஞ்சம் கேட்கப்படுகிறது என்கிறார்கள். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட வயதில் இருப்பவர்களில் 29 சதவிகிதம் பேர் மட்டும் எங்களிடம் லஞ்சம் கேட்கிறார்கள் எனச் சொல்கிறார்கள்.

இந்தக் கையூட்டுகள் ஆண்-பெண் என இருபாலரிடமும் சரிசமமாகவே வாங்கப்படுகிறது. கடைசி ஒரு வருடத்தில் லஞ்சம் கொடுத்தீர்களா என்ற வேள்விக்கு ஆண்கள் 30 சதவிகிதம் பேர் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். பெண்களில் 27 சதவிகிதம் பேர் ஆம் என்கிறார்கள்.

#EndCorruption
#EndCorruption

ஊழல் அதிகம் எங்கே நடைபெறுகிறது என்ற கேள்விக்கு காவல்துறை என்று 50 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் கூறியிருக்கிறார்கள். காவல்துறைக்கு அடுத்தபடியாக அதிக ஊழல் நடக்கும் இடம் அரசு அலுவலகங்கள் மற்றும் கவுன்சிலர்கள் அலுவலகம் எனவும் பதிவுசெய்துள்ளார்கள். லஞ்சம் இன்னும் அதிகம் புழங்காத துறைகளாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகம் என்பதை டிக் அடித்திருக்கிறார்கள். இதற்கு அடுத்தபடியாக நீதித்துறை உள்ளதாம்.

காவல்துறையில் அதிக ஊழல் இருப்பதாக வெளிப்படையாகக் கூறும் நிலையில், உண்மையில் லஞ்சம் அதிகம் கொடுக்கப்படும் இடமாக இருப்பது மருத்துவமனையும், ஆவணங்கள் வாங்கும் இடங்கள் மற்றும் பள்ளிகளும்தான். கடைசி ஓர் ஆண்டில் நீங்கள் எந்த இடங்களில் லஞ்சம் கொடுத்தீர்கள் என்ற கேள்விக்கு 59 சதவிகிதம் மக்கள் இந்த மூன்று இடங்களில்தான் லஞ்சம் கொடுத்தாகக் கூறியிருக்கிறார்கள். இதற்கு அடுத்தபடியாக பள்ளிகளிலும் காவல்துறையிலும் லஞ்சம் கொடுத்தாக கூறியுள்ளார்கள். இதில் குறைவாகக் கொடுக்கப்பட்டது நீதிமன்றங்களில்தான்.

#EndCorruption
#EndCorruption

லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுப்பதாக வெறும் 2 சதவிகிதம் மக்களே கூறியுள்ளார்கள். எங்களுக்கு அதுக்கெல்லாம் டைம் இல்லை பாஸ் என 11 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கிறார்கள். 11 சதவிகித மக்கள் எவ்வளவுதான் புகார் கூறினாலும் எதுவுமே மாறப்போவதில்லை எனக் கருத்துக்கணிப்பில் டிக் அடித்திருக்கிறார்கள். லஞ்சம்/ஊழலை ஏன் வெளியே அறிவிப்பதில்லை, புகார் கொடுப்பதில்லை என்ற கேள்விக்கு அதிகப்படியான மக்கள் எங்களுக்கு எந்த பிரச்னையும் வந்துவிடக் கூடாது என்பதனால்தான் என்பதையே தேர்வுசெய்துள்ளார்கள்.

அரசு ஊழல்/லஞ்சத்தை எதிர்ப்பதில் எந்த அளவுக்கு முனைப்புக் காட்டுகிறது என்பதற்கு 50 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் லஞ்சத்தை ஒழிப்பதில் அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள். இந்த முறைகேடுகளை முடக்குவதற்கான சிறந்த வழி என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. இதற்குப் பெரும்பாலானோர் லஞ்சம் கொடுப்பதை நிறுத்தினாலே போதும் என்பதையே முன்வைத்திருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக பெரும்பாலானோர் இதை நிறுத்ததே முடியாது என்று கூறியுள்ளார்கள்.

நம் விகடன் நிருபர்கள் #EndCorruption என்ற பெயரில் எடுத்த கருத்துக்கணிப்பிலும் பெரும்பாலானோர் இதே பதில்களைத்தான் கூறியிருந்தார்கள்.
ஊழல் இருக்கு... ஆனா இல்லை! விகடன் சர்வேயில் மக்களின் பதில் #EndCorruption

உங்களிடம் லஞ்சம் கேட்டால் அதைப்பற்றி வெளியே சொல்வீர்களா, புகார் தெரிவிப்பீர்களா என்ற கேள்வி வரும்போது 61 சதவிகிதம் பேர் சொல்வேன் என்றும் 17 சதவிகிதம் பேர் கூறமாட்டேன் என்றும் சொல்கிறார்கள். உண்மையில் 61 சதவிகிதம் பேர் லஞ்சம் கேட்பதையும் லஞ்சம் கொடுப்பதையும் பற்றி வெளியே தெரியப்படுத்தியிருந்தால் வெளிப்படையாக நடைபெறும் ஊழல் மற்றும் முறைகேடுகளைக் குறைத்திருக்கலாம். ஆசியா கண்டத்தில் மட்டுமல்லை, பிரிக்ஸ் நாடுகளிலேயே ஊழல் அதிகம் நடைபெறும் நாடாக இந்தியா பெயர் எடுத்திருக்காது.