எடப்பாடி ஆட்சியைக் கவிழ்க்கக் காத்திருக்கும் அந்த '10 அமைச்சர்கள்'!

எடப்பாடி

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் ஆனதில் இருந்து எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் 10 அ.தி.மு.க அமைச்சர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள், எந்நேரமும் எடப்பாடி அரசுக்கு எதிராகத் திரும்பலாம் என்பதுதான் இப்போது கோட்டை வட்டாரத்தில் ஹாட் டாபிக். அந்த அமைச்சர்களோடும் அவர்களுக்கு நெருங்கியவர்களோடும் டி.டி.வி.தினகரன் டீம் பேசி வருகிறது.

சசிகலா குடும்பத்துக்கு எதிராகத் தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் விதித்த மூன்று நிபந்தனைகளில், ‘ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை, போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லம் ஆக்குவது’ என்ற கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், சசிகலா குடும்பத்தை நீக்கும் பிரச்னையில் எடப்பாடியால் உறுதியான நடவடிக்கையை எடுக்க முடியவில்லை. டி.டி.வி.தினகரனைக் கட்சியைவிட்டு ஒதுக்கிவைக்க தீர்மானம் போட்ட அவரால், சசிகாவை நீக்க தீர்மானம் போடமுடியவில்லை. அந்த இழுபறி காரணமாகத்தான் ஆகஸ்ட் 21-ம் தேதி இரு அணிகளின்  இணைப்புக்கு ஓ.கே சொல்ல காலதாமதம் ஆக்கினார் பன்னீர்செல்வம். 

தீர்மானம் போட எடப்பாடி ரெடி என்றாலும் அந்த அணியில் இருக்கும் மூன்று அமைச்சர்கள், அந்தத் தீர்மானத்துக்கு எதிராக இருந்தார்கள். கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் என்கின்றனர் அ.தி.மு.க தலைமைக் கழகத்தின் உள்விபரம் அறிந்தவர்கள். அதனால்தான் அன்று அந்தத் தீர்மானத்தைப் போடாமல், இணைப்பு முடிந்த பிறகு வைத்திலிங்கம், “பொதுக்குழு கூடி சசிகலா நீக்கப்படுகிறார்” என்று அறிவித்தார். “அது தனிப்பட்ட கருத்து'' என்று கூட்டம் முடிந்தவுடன் வெளியே வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறிவிட்டார். மேலும், அவர் கூறுகையில், “ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஆசையை நிறைவேற்றிக்கொள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கட்சியில் எதிர்பார்க்கக் கூடாது' என்று தடாலடியாகச் சொன்னார்.

பன்னீர்செல்வம்

அதுபோலவே, அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் அளித்த பேட்டி ஒன்றில், ''டி.டி.வி.தினகரன் மீண்டும் கட்சிக்குள் வருவார். அவரை இணைத்தால்தான் கட்சிக்கும் நல்லது; ஆட்சிக்கும் நல்லது'' என்று போட்டுடைத்தார். மேலும், அமைச்சரவை மாற்றத்தில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். தொழில் துறையோடு கனிமவளத் துறையையும் கவனித்துவந்தார் எம்.சி.சம்பத். இந்தக் கனிமவளத் துறைதான், 'ஜல்லி உடைத்து எடுக்க அனுமதிக்கும். கிரானைட், கிராபைட், சவுடு மண்' போன்றவை எடுக்க அனுமதி கொடுப்பதும் இந்தத் துறைதான். இதுவும் டாஸ்மாக் துறைபோல வளம் கொழிக்கும் துறை. அதைப் பிடுங்கி, சிறைத்துறை அமைச்சர் விழுப்புரம் சி.வி.சண்முகத்திடம் கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஒருகாலத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் நம்பிக்கைக்குரியவராக இருந்த எம்.சி.சம்பத் இலாகா பறிக்கப்பட்டுள்ளதைக் கவலையோடு பார்க்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த உடுமலை ராதாகிருஷ்ணன், எப்போதுமே சசிகலா குடும்பத்துக்கு நம்பிக்கைக்குரியவர் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு போட்டுக் கொடுத்துள்ளது உளவுத்துறை. கோவை மண்டலத்தில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவருக்கும் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கும் மோதல் இருந்துவருகிறது. எனவே, பன்னீர்செல்வம் இணைப்பைப் பயன்படுத்தி உடுமலை ராதாகிருஷ்ணனை கால்நடைத் துறை அமைச்சராக்கிவிட்டார்கள். அதுபோலவே, மதுரை, தஞ்சைப் பகுதிகளில் உள்ள அமைச்சர்கள் மனது டி.டி.வி.தினகரன் பக்கம் எந்நேரமும் சாயலாம் என்று முதல்வர் காதுக்குப் போய் இருக்கிறது. டி.டி.வி.தினகரன் சொன்னதுபோல, எடப்பாடி அணிக்கு உள்ளேயே ஸ்லீப்பர் செல்கள் இருக்கின்றன. அவர்கள் எந்நேரமும் எடப்பாடி, பன்னீர் அணிக்கு எதிராகக் கிளம்புவார்கள் எனச் சொல்லப்படுகிறது. மொத்தம் 10 அமைச்சர்கள் தங்கள் பக்கம் வருவார்கள் என்று நம்பிக்கையோடு இருக்கிறார் டி.டி.வி.தினகரன்.

தினகரன்

தஞ்சை மற்றும் மதுரை மண்டலங்களைச் சேர்ந்த அமைச்சர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன் டீம், “எடப்பாடி ஆட்சி எப்படியும் இந்த டிசம்பர் மாதத்துக்குள் கவிழ்ந்துவிடும். அதன்பிறகு கண்டிப்பாக கவர்னர் ஆட்சி ஓர் ஆண்டு நடக்கும். 2018 இறுதியில்தான் சட்டமன்றத் தேர்தல் வரும். ஆட்சி அதிகாரம் இல்லை என்றால், எடப்பாடி பழனிசாமி அரசியலைவிட்டே ஓடிவிடுவார். நீங்கள், திரும்பவும் எங்களிடம்தான் வர வேண்டும். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு முடிவெடுங்கள்” என்று அன்பாகச் சொல்லி வருகிறார்கள். இதையே, எடப்பாடி அணியில் இருக்கும் டி.டி.வி.தினகரன் ஆதரவு ஸ்லீப்பர் செல்கள் மூலம் அங்கு பரப்பப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!