Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

இரு மாநிலங்கள், 31 உயிர்கள்... குர்மீத் ராம் ரஹீம் எனும் ஆன்மிக பிக்பாஸின் கதை! #WhyInGodsName

ராம் ரஹீம்

சாமியோ... ஆசாமியோ தனி மனித துதி எவ்வளவு ஆபத்தானது என அரியானாவில் ரத்தச் சிதறல்களுக்கு மத்தியில் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. 

அஹிம்சையும், அமைதியும் நிலவவேண்டிய அவசியத்தை மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டிய ஒரு மதத் தலைவரின் கைது சம்பவத்துக்கு, அவரது ஆதரவாளர்கள் ஆற்றிய எதிர்வினை எதிர்பாராத திசையிலிருந்து வந்த எமனைப் போன்று, இந்திய அரசுக்கு மிகப்பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. 

மத தத்துவங்களை, கலாசாரங்களை அடுத்தடுத்த தலைமுறைகளிடம் கொண்டுசெல்ல மத குருமார்கள் காலம்காலமாக இயங்கிவருகிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முன் சாமியார்களின் கொள்கைகள்தான் மக்களிடையே உரை நிகழ்த்தின. பக்தர்களின் ஆன்மாவுடன் அவை அந்தரங்கமாக உரையாடின. தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டதோடு, பக்தர்கள் அந்த எல்லையைத் தாண்டாமல் சாமியார்களை விட்டு ஒதுங்கி நின்றார்கள். பக்தர்களிடம் சாமியார்களும் அந்த எல்லையை மீறாமல் இருந்தனர். ஒருவேளை உணவு, துாய்மையான மனம், எளிமையான வாழ்க்கை இதுதான் அன்றைய மத பிரசாரகர்களின் வாழ்க்கை.

ராம் ரஹீம்

தமிழகத்தின் புகழ்பெற்ற மடத்தின் மூத்த மதத்தலைவர் 90 வயதிலும் ஒரு மாட்டுவண்டியின் பின்னே கைகளை தாங்கியபடி நகரின் வீதிகளில் ஆசீர்வதித்தபடியே செல்வார். ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி எல்லோரையும் மடத்தில் நிறுத்தி ஆசி வழங்குவார். எதிரில் நிற்பவர் பிரச்னையைச் சொல்லும் முன்னே அவனுக்குத் தீர்வைச் சொல்லி அனுப்பி வைப்பார். மடம் எத்தனை விமர்சனங்களுக்கு ஆளானபோதும் அந்த மதத்தலைவர் மாற்றுக்கருத்துக்கு ஆளானதில்லை. 

மக்களுக்கு தத்துவங்களையும் இன்னபிற மதக்கோட்டுபாடுகளையும் போதித்துவந்த மடங்கள் கார்ப்பரேட் அலுவலகங்களைப் போல் கட்டி எழுப்பப்பட்டபின் சாமியார்கள் அரசியல்வாதிகளைப்போல் அவதாரம் எடுக்க ஆரம்பித்து விட்டனர். இறைவனின் புகழை மக்களிடம் பேசியவர்கள், பின்னாளில் தாங்களே அந்த இறைவனின் அவதாரம் என்று சொல்லிக்கொள்ள ஆரம்பித்தனர். இந்த போலிகளுக்கு ஆன்மீக அந்தஸ்து ஒருகட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தியது. ஆள்பவர்களுக்கு ஆலோசனை சொல்பவர்களாக மாற விரும்பினர். இறைவனைத் தேடிப்போய் வணங்கிய அரசியல்வாதிகளின் இல்லத்திற்கே இவர்கள் நேரில் சென்று ஆசி வழங்கினார்கள். பகுத்தறிவுக் கொள்கைகளை முழங்கியவர்களேகூட இந்த மாயையில் சிக்கினர்.  அரசியல்வாதிகளுடன் உறவாடத்தொடங்கி அவர்களால் பாத பூஜைகளுக்கு ஆளானபின் இந்த கார்ப்பரேட்டுகள் தங்களை ஆண்டவர்களாக கருதத் துவங்கினர். 

இந்திய அரசியலில் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால், அதன் பின்னணியில் ஒளிந்து கிடப்பது தனிமனித ஆராதனை. அரசியல்வாதிகளுடனான நெருக்கத்தினால் ஆன்மீகவாதிகள் தங்களை மனிதர்களால் கொண்டாடப்பட வேண்டியவர்களாக கருதிக் கொண்டனர். டெல்லி அரசியலில் கடந்த காலத்தில் சந்திரா சாமியாரில் தொடங்கி.. திருவண்ணாமலையில் இட ஆக்கிரமிப்பு புகாரில் சிக்கியிருக்கும் இன்றைய நித்தியானந்தா வரை இந்தப் பட்டியல் நீளும். திரும்பத் திரும்ப ஒருவன் ஒரு பொய்யைச் சொல்லிக்கொண்டு இருக்கும்போது அவனே அந்தப் பொய்யை முதலில் நம்புபவனாக ஆகிறான். தான் கடவுள் என மக்களை நம்பவைக்க முயலும் இந்த கார்ப்பரேட் சாமியார்கள், கொஞ்ச காலத்தில் தங்களையே கடவுளாக பாவிக்கத் தொடங்கி கடவுளுக்கு டஃப் கொடுக்கத் தொடங்குகிறார்கள். மறைந்த தனது அரசியல் குருவின் படத்தை சிறியதாகப் போட்டு, தன் படத்தை பேனரில் வியாபிக்கச்செய்யும் நடப்பு அரசியல்வாதிகளைப்போல இவர்களும் பேனரில் 32 பற்களும் தெரிய படபடக்கிறார்கள். மோடியில் தொடங்கி எடப்பாடி வரை தொடரும் இந்த கலாசாரத்தை அச்சுபிசகாமல் பின்பற்றுகிறார்கள் இன்றைய கார்ப்பரேட் சாமியார்கள். 

அரசியல்வாதிகள் அனுசரணையாக இருப்பதால் சாமியார்கள் என்ற போர்வையில் இவர்கள் நிகழ்த்தும் குற்றச்செயல்கள் மன்னிக்கப்படுகின்றன. அரிதாகவே வழக்குகள் பதிவாகின்றன. அதுவும் நீதிமன்றத் தலையீட்டினால் இருக்கலாம். 

குர்மீத் ராம் ரஹீம் சிங் இந்தப் பின்னணியில் வளர்ந்த ஒரு சாமியார்தான். இந்திய தண்டனைச் சட்டத்திற்கு விதிவிலக்காக இங்கு யாரும் கிடையாது. அது தெரிந்தும் பாலியல் குற்றத்திற்காக தண்டனை பெற்ற ஒரு சாமியாருக்காக, ராணுவத்தை எதிர்த்து நின்று மரணத்தைத் தழுவியிருக்கின்றனர் இவரது பக்தர்கள். வளமான காலத்தில் தாங்கள் செய்கிற தவறுகளை எதிர்காலத்தில் மறைத்து சட்டத்தின் சந்துபொந்துகளில் ஒளிந்துகொள்ள வசதியாகவே தங்கள் பக்தர்களை மனிதக் கேடயங்களாகத் தயார்படுத்துகின்றனர் இதுபோன்ற கார்ப்பரேட் சாமியார்கள். 'தங்களின் இறைவன் யாரோ அல்ல; இவர்தான்' என மக்களை நம்பவைப்பதில் இவர்கள் அடைந்த வெற்றிக்குக் கிடைத்த பரிசுதான் அரியானாவில் இன்று உயிரைவிட்ட 30 பேர். 

தண்டனைக் கைதியாக குர்மீத் ராம் ரஹீம் சிங் இப்போது சிறையிலடைக்கப்பட்ட பின்னரும், பஞ்சாப் மாநிலமும், அரியானாவும், சண்டிகர் யூனியன் பிரதேசமும் பயம் குறையாத பதற்றத்திலேயே உள்ளன. இந்திய தண்டனைச்சட்டத்தின் கீழ் வருகிற ஒரு குற்றத்திற்காக பல்வேறு கட்ட விசாரணைக்குப்பின் ஒரு தீர்ப்பின் அடிப்படையில் கைதாகும் ஓர் சட்டப்படியான செயலை எதிர்த்து, மாநில அரசின் சட்டம்- ஒழுங்கை கேள்விக்குறியாக்கிய குர்மீத் ராம் ரஹீம் சிங் என்பவர் யார்....?

ராம் ரஹீம்

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் உள்ள கர்சார் மோடியா என்ற கிராமத்தில் ஜாட் பிரிவைச் சேர்ந்த சீக்கிய குடும்பத்தில் 1967-ம் ஆண்டு பிறந்தவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். சிறுவயதிலேயே சீக்கிய மதப்பிரசாரங்களில் ஆர்வம் இருந்திருக்கிறது. ஏழாவது வயதில் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பில் இணைந்தார். அடுத்த 15 ஆண்டுகளில் அதன் தலைமைப் பொறுப்புக்கு வரும் அளவுக்குத் தீவிரமாகப் பணியாற்றினார். இந்த அமைப்பில் மிக இளம்வயதில் தீக்சை பெற்றவர் என்ற பெருமையும் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு உண்டு. 

திராவிட இயக்கங்கள் இன்றுவரை மக்களிடம் மறுக்க முடியாத இடத்தைப்பெற்று அடுத்தடுத்து ஆட்சி அதிகாரங்களை பங்கிட்டுக்கொள்ள ஆதாரமானது, அண்ணா சொன்ன “மக்களை சந்தி, மக்களோடு இரு, மக்களுக்காக உழை” என்ற மூன்று முழக்கங்கள்தான். ரஹீம் சிங்கின் வெற்றி தொடங்கியதும் அப்படி ஓர் முழக்கத்தினால்தான். தலைமைப் பொறுப்புக்கு வந்தபின் தேரா சச்சாவின் செயல்பாடுகளை முற்றிலும் மாற்றியமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார் ரஹீம் சிங். 'ஒரு மதப் பிரசாரத்தைத் தாண்டி, தன் எல்லையை சமூகப்பணியில் விரிவடையச் செய்தார்' என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். தேரா சச்சா அமைப்பு பல்வேறு நேரடியான மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டது. இந்த பணிகளால் தன் பக்தர்கள் மத்தியில் புகழடைந்தார் ரஹீம் சிங். நுணுக்கமான சில வித்தியாசங்களுடன் சீக்கிய மதத்திலிருந்து பிரிந்துவந்த ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக தன்னை திட்டமிட்டு கட்டமைத்துக் கொண்டார். மதப் பிரசாரங்களின் ஊடே சாதிகளை புறந்தள்ளிய சமூக நீதியை ஒட்டிய பிரசாரம் இவருடையது. 

தன் அமைப்பின் மூலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, கிரிக்கெட் மைதானம் என மக்களுக்கு ஏற்படுத்தித் தந்தார். பாலியல் தொழிலாளிகளை மீட்பதும் தேரா சச்சாவின் சமூகப் பணிகளில் ஒன்று. ஆனால் இந்த விவகாரத்தில் மற்ற அமைப்புகளிலிலிருந்து இது மாறுபட்டது என்பதற்கு, 2010-ம் ஆண்டு தேரா சச்சா சவுதாவின் பல நுாறு தொண்டர்கள் பாலியல் தொழிலாளிகளை மீட்டு, அவர்களை திருமணம் செய்துகொண்டது ஆச்சர்ய உதாரணம். 

ரஹீம்சிங் அத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை. தனது அமைப்பின் மூலம் குறைந்த விலைக்கு உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்கினார். ஓர் அரசுக்கு இணையாக பல திட்டங்களை மக்களுக்கு அவர் செயல்படுத்தினார் என்கிறார்கள். மாநிலத்தில் இயற்கைப் பேரிடர் சமயங்களில் வேட்டியைத் தூக்கி கட்டியபடி, மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுபவர்களாக தன் தொண்டர்களை 24 மணி நேரமும் தயார் நிலையில் வைத்திருந்தார். மாநில அரசு நிர்வாகம், அங்கு வருவதற்கு முன் தேரா சச்சா தொண்டர்கள் அங்கு களப் பணியாற்றிக் கொண்டிருப்பார்கள். அரசின் மெத்தனங்களால் புறக்கணிப்புகளால் அடித்தட்டு மக்கள் பாதிப்புக்குள்ளாகிற தருணங்களில் தங்களுக்கு ஆபந்பாந்தவனாக வருபவனை காலம் எப்போதும் ஏற்கவே செய்யும். இதுதான் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் வெற்றியின் ரகசியம். அந்த வெற்றிக்கான சாட்சியைத்தான் பஞ்சாப், அரியானா என இரு மாநிலங்களின் வீதிகளிலும் உள்ள சாலைகளில் தெறித்துக் கிடக்கும் மனித ரத்தத் துளிகளில் காண்கிறோம்.  

சாமியார்கள் மக்களிடையே அதீத புகழ்பெறத் துவங்குகிறபோது, சர்ச்சைகள் எழுவதும் வாடிக்கைதான். நம்மூரில் சில 'கடவுளர்கள்' திரைப்படங்களில் நடித்ததுண்டு. தெய்வங்களை பின்னுக்குத்தள்ளி தங்களை முன்னிறுத்திக் கொள்ளும், இந்த யுக்தியை ரஹீம் சிங்கும் கையாண்டிருக்கிறார். கடவுளின் துாதுவன் எனப் பெயரிடப்பட்ட ஐந்து திரைப்படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். 2000-வது ஆண்டுகளின் மத்தியில் கிட்டத்தட்ட கடவுளாகவே பக்தர்களால் கொண்டாடப்பட்டார் ரஹீம் சிங். அரசியல் கட்சிகளிடையேயும் பெரும் ஆதரவு இருந்தது அவருக்கு. மாநிலத்தில் 2012-ல் காங்கிரசும், 2014 தேர்தலில் பி.ஜே.பி-யும் இவரது ஆதரவைக் கேட்டுப்பெற்று தேர்தலில் போட்டியிட்டன. 

ராம் ரஹீம்

இந்த ஆராதனையின் உச்சக்கட்டமாக, கடந்த 2007-ல் சீக்கிய மத குருவான குரு கோவிந்த் சிங் போன்று தன்னை சித்தரித்துக் கொண்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மற்ற சீக்கிய மதக் குருக்களிடம் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நிலைமை போனது. 2015-ம் ஆண்டில் விஷ்ணுபோன்று தன்னை சித்தரித்துக் கொண்டதிலும் இந்து அமைப்புகளின் கண்டனத்திற்கு ஆளாகினார். 

கடந்த 2002-ம் ஆண்டு ரஹீம்சிங் தன் ஆசிரமத்தின் இரண்டு பெண் சிஷ்யர்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகியதாக சர்ச்சை எழுந்தது. அந்த பெண்களில் ஒருவர் இளம் சிறுமி. மக்களிடையே முதன்முறையாக குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு எதிரான அலை எழுந்தது. ஆனாலும் பக்தர்கள் அவரை நம்பினர். இந்தக் காலக்கட்டத்தில் ஆசிரமத்தின் ஊழியர் ரஞ்சித் என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். ஆசிரமம் குறித்த மர்மங்களை தொடர்ந்து எழுதி வந்த ராம் சந்தர் சத்ரபதி என்ற பத்திரிகையாளரும் கொலை செய்யப்பட்டார். உச்சக்கட்டமாக தேரா சச்சா சவுதா ஆசிரம சீடர்கள் 400 பேருக்கு ஆண்மைநீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இதனிடையே பாலியல் வழக்கினை தாமாகவே முன்னெடுத்த நீதிமன்றம், சி.பி.ஐ- யிடம் அதை ஒப்படைத்தது. இந்தத் தீர்ப்பில்தான் தண்டனையை 28-ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துவிட்டு, குர்மீத் ராம் ரஹீம் சிங்கை ‘குற்றவாளி’ என அறிவித்துள்ளது சி.பி.ஐ நீதிமன்றம். இந்தத் தீர்ப்பின் எதிரொலியாக நடந்த கலவரத்தில் 30 மனித உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இன்னமும் பதற்றம் குறைந்தபாடில்லை. 

ராம் ரஹீம்

ரஹீம் சிங்கின் பராக்கிரத்தை அறிந்திருந்ததாலேயே 150 பட்டாலியன் ராணுவமும் வரவழைக்கப்பட்டிருந்தது என்கிறார்கள். மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் தகவல் தொடர்பு சாதனங்களை முற்றாக முடக்கி வைத்திருந்தது மாநில அரசு. தனக்கு இருந்த மக்கள் செல்வாக்கைக் கருதி ரஹீம்சிங் எந்த பதற்றமுமின்றி 200-க்கும் மேற்பட்ட கார்களின் அணிவகுப்போடுதான் தீர்ப்பு தினமான வெள்ளிக்கிழமை பஞ்ச்குலா நீதிமன்றத்துக்கு வந்தார். சட்டத்திற்கும் தங்களின் தனிப்பட்ட செல்வாக்குக்கும் இடையேயான வேறுபாட்டை உணராதபடி புகழ்போதையில் விழுந்து கிடப்பவர்களின் தவறு இதுதான். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காக பெங்களுரு சென்றபோது ஜெயலலிதா சென்ற விதமும் இப்படித்தான். ஒரு முதல்வராக தேசியக்கொடி பறந்த காரில் நீதிமன்றத்துக்குள் சென்றார். ஒருநாள் முன்னதாகவே பெங்களுரு சென்று, ஜெயலலிதாவின் கார் கடந்துசென்ற வீதிகளில் கையசைத்து நம்பிக்கை அளித்தனர் அவரது தொண்டர்கள். ஆனால், பிற்பகலுக்கு மேல் குன்ஹாவின் தீர்ப்பினால் காரிலிருந்த தேசியக்கொடியை கழற்ற வேண்டியதானது.

ரஹீம் சிங்குக்கும் அப்படித்தான் நிகழ்ந்தது. தீர்ப்பு நாளன்று லட்சக்கணக்கில் அவரது தொண்டர்கள் இரண்டு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் இருந்து திரண்டு வந்திருந்தனர். இவர்களில் பெண்கள் குழந்தைகளும் அடக்கம். இவர்களில் எளிய மனிதர்கள், மட்டுமின்றி மெத்தப் படித்த, மேல்குடி மக்களும் இருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு நாட்களுக்கு முன்னதாக ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டன. 

ராம் ரஹீம்

பிற்பகலில் 'ரஹீம்சிங் பாலியல் வழக்கில் குற்றவாளி' என தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது கோபத்தின் உச்சிக்குப்போன அவரது ஆதரவாளர்கள் ஆங்காங்கே வன்முறைகளில் ஈடுபட்டனர். ரயில் நிலையங்கள், பெட்ரோல் பங்க்-களும் அடித்து நொறுக்கப்பட்டன. வன்முறையாளர்களை கலைக்க ராணுவம் எடுத்த பதில் நடவடிக்கைகளால் ஆதரவாளர்கள் பலர் செத்து விழுந்தனர். 

இப்போது பதற்றம் குறையாத நிலையிலேயே குர்மீத் ராம் ரஹீம் சிங் ரோதக்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனிடையே சாமியாரின் பலத்தை அறிந்தும் மெத்தனமாக இருந்து மாநிலத்தில் பெரிய வன்முறை நிகழ அரசு காரணமாகி விட்டதாக, இவ்விவகாரம் குறித்து, அரியானா உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இருமாநிலங்களிலும் நிகழ்ந்த வன்முறை குறித்த விவரங்களை இருமாநில முதல்வர்களிடமும் கேட்டுப்பெற்றுள்ள உள்துறை அமைச்சகம் அதுகுறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

தண்டனை குறித்த விவரம், வரும் 28-ம் தேதி வர இருப்பதால், இப்போது நடைபெற்றுள்ள வன்முறைச் சம்பவங்களை பகுதி-ஒன்றாகத்தான் கணக்கிட்டுள்ளது. மாநில காவல்துறை. அதனால் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து உஷார் நிலையிலேயே வைக்கப்பட்டு உள்ளனர். முக்கிய இடங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தங்கள் சுயநலத்துக்காக ஒரு ஆபத்தான மனிதரை வளர விட்டதற்காகவும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உணராமல் அதில் மெத்தனம் காட்டியதற்குமான விலையை மொத்தமாக தந்திருக்கின்றன இரு மாநிலங்களும். தர இருக்கின்றன இனியும்!

ஆன்மீகவாதி, ஆன்மீகவாதியாக இருப்பதிலேயே இத்தனை விபரீதங்கள் என்றால் அரசியல்வாதியாகும்போது விளைவுகள் என்னவாக இருக்கும் என்ற அதிபயங்கர சிந்தனையை ஏற்படுத்தியிருக்கிறார் குர்மீத் ராம் ரஹீம் சிங்... 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement