வெளியிடப்பட்ட நேரம்: 20:48 (28/08/2017)

கடைசி தொடர்பு:20:48 (28/08/2017)

நேற்று சென்னை…இன்று ஹியூஸ்டன்... சதுப்புநில அழிப்பால் தொடரும் அவலங்கள்! #Houston

“ஹியூஸ்டன்! வி காட் எ ப்ரோப்ளம்!” என்று விண்வெளிப் பயணம் மேற்கொண்டவர்கள் மேலிருந்து கதறுவார்கள். விண்வெளி தொடர்பான பல ஆங்கில படங்களில் இந்தக் காட்சியை, இந்த வசனத்தை நீங்கள் நிச்சயம் கடந்து போயிருப்பீர்கள். காரணம், ஹியூஸ்டனில் தான் நாசாவின் அதிகாரபூர்வ பார்வையாளர் மையம் உள்ளது. ஆனால், இன்று அந்த ஹியூஸ்டன் எனும் மாநகரத்துக்கே ஒரு மிகப் பெரிய பிரச்னை.  

ஹியூஸ்டன் ஹார்வி புயல்

மேலும் படங்களுக்கு

தொடர் கனமழையால் கடந்த சில நாள்களாகத் தத்தளிக்கிறது ஹியூஸ்டன். மழை, கனமழை, வெள்ளம், பெரும்வெள்ளம் எனப் பரிணாம வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கும் இந்த இயற்கை சீற்றத்துக்கு பெயர் ஹார்வி புயல். எப்போது அடங்கும், எப்போது இயல்பு வாழ்க்கை திரும்பும் என திக்குத் தெரியாமல் திணறிப் போயிருக்கிறார்கள் மக்கள். அமெரிக்காவின் நான்காவது பெரிய நகரமான ஹியூஸ்டனுக்கே இன்று இந்த நிலை.

தற்போதைய நிலவரப்படி, ஃபோர்ட் பெண்ட் கவுண்டியைச் சேர்ந்த 50,000 மக்களை 55 கி.மீ. தொலைவில் இருக்கும் ஹியூஸ்டனின் தென்-மேற்குப் பகுதிக்கு இடம்பெயருமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். காரணம், பிரேசோஸ் நதி இந்த வாரத்துக்குள் 59 அடிகளை (18 மீட்டர்கள்) தொட்டு விடும் என்ற பீதி நிலவுகிறது. இது அந்த ஆற்றின் வெள்ள அபாய நிலையை விட 14 அடிகள் (4.3 மீட்டர்கள்) அதிகம். கடந்த 800 வருடங்களில் இப்படி ஓர் அசாதாரண நிலை ஏற்பட்டதே இல்லை என்று அதிர்ந்து போயிருக்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.

2,20,000 மக்கள் மின்சாரம் இல்லாமல் இருக்கிறார்கள். இரண்டு முக்கிய விமான நிலையங்களான ஜார்ஜ் புஷ் இண்டர்காண்டினென்டல் விமான நிலையம் (நாட்டின் மிகப்பிரசித்தமான ஒன்றாகும்) மற்றும் வில்லியம் பி ஹாபி விமான நிலையம் ஆகியவை மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறந்தே ஒரு வாரம் ஆகிவிட்டது. துயரம் என்னவென்றால், இந்த வாரம் முழுக்க மழை இருக்கும் எனவும், இதைவிட நீர்மட்டம் உயரலாம், வெள்ளம் பெருகலாம் என்று எச்சரித்துள்ளது தேசிய வானிலை சேவை மையம்.

ஹியூஸ்டன் ஹார்வி புயல்

மேலும் படங்களுக்கு

சதுப்புநில அழிப்பும், நீர்புகா இடங்களும்

சென்னையில் பெருமழை பெய்தபோது வெள்ளம் ஏற்பட முக்கிய காரணம் என்ன? நகரத்தில் உள்ள சதுப்பு நிலங்களைப் பாதுகாக்காமல், மணற்பரப்புகளே இல்லாத கான்க்ரீட் தீவாக மாற்றியதுதான்! கொஞ்சம் கூடுதலாக இங்கே ஹியூஸ்டனில் அழிக்கப்பட்ட மணற்பரப்புகளில் சதுப்பு நிலங்கள், கரையோரப் பகுதிகள் மற்றும் காடுகள் ஆகியனவும் அடங்கும். இதெல்லாம் இல்லாமல் நீர் எங்கே போய் வடியும்?

ஆங்கிலத்தில் ‘Impervious surfaces’ என அழைக்கப்படும் நீர்புகா இடங்கள் ஹியூஸ்டன் போன்ற பெருநகரங்களில் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது. மக்கள் தொகை கூடிவிட்டது, டிராஃபிக் அதிகமாகிவிட்டது, பயண நேரத்தைக் குறைக்க வேண்டாமா என்றெல்லாம் காரணங்களை அடுக்கி சாலைகள், நடைபாதைகள், வாகன நிறுத்தம், கருங்காரைகள் மற்றும் கான்கிரீட் தளங்கள் என அடுக்கிக் கொண்டே போனதால்தான், இன்று ஒதுங்கக் கூட இடமில்லாத நிலை.

ஹியூஸ்டன் மேம்பட்ட ஆராய்ச்சி மையம் சமீபத்தில் வெளியிட்ட செயற்கைக்கோள் தரவுகளின் படி 2011-ம் ஆண்டில், ஹாரிஸ் கவுண்டியின் 1.1 மில்லியன் ஏக்கர்களில் 337,000 ஏக்கர்கள்  நீர்புகா இடங்களாக ஆகிவிட்டது கண்டறியப்பட்டுள்ளது. இந்த 6 வருடத்தில், அதன் சுற்றளவு நிச்சயம் இன்னமும் அதிகரித்திருக்கும். எதிர்பார்த்ததுபோல், தற்போது பெய்யும் பெருமழையில், ஏற்படும் வெள்ளத்தில் பெருமளவு பாதிக்கப்பட்டது என்னவோ இந்த ஹாரிஸ் கவுண்டிதான்.

ஹியூஸ்டன் ஹார்வி புயல்

மேலும் படங்களுக்கு

மக்களை இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கும் இடங்களில் ஒன்றான ஃபோர்ட் பெண்ட் கவுண்டியில் மட்டும் 2001லிருந்து 2011 வரை நீர்புகா இடங்கள் 53 சதவிகிதம் அதிகமாயிருக்கிறது. புகழ்பெற்ற கேட்டி புல்வெளிகள் அமைந்துள்ள வாலர் கவுண்டியிலோ 17 சதவிகிதம் அதிகமாயிருக்கிறது. ஹியூஸ்டன் மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் மற்றொரு புள்ளி விவரம் மேலும் ஒரு அதிர்ச்சித் தகவலை தருகிறது. சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அரசின் ஆணையும் மீறி, 1996லிருந்து 2010க்குள் கிட்டத்தட்ட 54,000 ஏக்கர் சதுப்பு நிலங்கள் மொத்த ஹியூஸ்டனிலும் அழிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் மட்டுமே காரணமா?

இப்படிப்பட்ட நிலைக்குப் பருவநிலை மாற்றம்தான் காரணம் என்று மிகச் சாதாரணமாக கூறி விடுவார்கள். அதற்குக் காரணம் கேட்டால் தொழில்நுட்ப வளர்ச்சி, வாகனப் புகை, தொழிற்சாலைகள் என்றெல்லாம் கைகாட்டுவார்கள். தண்ணீர் பஞ்சத்துக்குக் கூட அதே பதில்தான்! அதெல்லாம் உண்மைதான். ஆனால், அவையெல்லாம் வெள்ளம் ஏற்படாமல் இருக்க உதவும் காரணிகள் மட்டுமே. பெருமழை வந்துவிட்டது. அது வெள்ளமாக மாறவும், அது வடியாமல் இருக்கவும் அதே தட்பவெப்பம்தான் காரணமா? இல்லை, நிச்சயம் நாம்தான்! தற்போது அங்குப் பெய்திருக்கும் மழை சென்னையில் 2015ல் பெய்த மழையை விடப் பல மடங்கு அதிகம். அடித்த புயல் நம் வர்தா புயலை விடப் பல மடங்கு அதிகம். அதற்கே ஆடிப்போய்விட்ட சென்னையை, ஹியூஸ்டன் ஹார்வி புயல் தாக்கினால் என்னவாகும்? பூமியின் மேற்கு நமக்குப் பாடம் எடுக்கிறது. கற்றுக்கொண்டு, விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்