வெளியிடப்பட்ட நேரம்: 10:13 (30/08/2017)

கடைசி தொடர்பு:10:13 (30/08/2017)

விவேகம் பட செயற்கை பூகம்பம் உண்மையா? அமெரிக்காவைக் கைக்காட்டும் கான்ஸ்பிரசி தியரி! #HAARP

உலக நிகழ்வுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தி கொண்டிருப்பது இல்லுமினாட்டிகள் என்ற குழு. மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வருமானம் வரவும், புதுப் புது நோய்கள், பூகம்பம் முதலிய இயற்கை சீற்றங்கள் எனக் கலந்து கட்டி அடித்து கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். பல தலைவர்கள் இதற்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். இவர்கள் உலக நாடுகளில் எல்லாம் முக்கிய பொறுப்புகளில் இருந்து கொண்டு உலகையே ஆண்டு கொண்டிருக்கிறார்கள். மோடி முதல் கமல் வரை எல்லோருமே இல்லுமினாட்டிகள் தான்.

அமெரிக்கா நிலாவில் தரையிறங்கவே இல்லை. தடை செய்யப்பட்ட மிலிட்டரி பகுதியான ஏரியா 51 என்ற இடத்தில் ஒரு திரைப்படத்தை போல அந்தக் காட்சியை படமாக்கினார்கள். பின்பு கிராபிக்ஸ் செய்து நிலவுக்குச் சென்றுவிட்டு வந்ததாக உலகத்தையே நம்ப வைத்தார்கள்.

இரட்டைக் கோபுர தாக்குதலை ஒசாமா நிகழ்த்தவில்லை. இரண்டு விமானங்கள் மோதி அவ்வளவு சேதம் ஏற்படாது. அமெரிக்காவே குண்டுகள் வைத்து தகர்த்திவிட்டு ஒசாமா மீது பழிபோட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் போர் நடத்தக் காரணம் வேண்டாமா?

பூகம்பம் கான்ஸ்பிரசி தியரிகள்

“போதும் பாஸ், இப்பவே கண்ணக் கட்டுது” என்கிறீர்களா? இவையெல்லாம் வாட்ஸ் ஆப் முதல் Quora வரை செம ஹாட்டாக பகிரப்படும் செய்திகள்(?). ஆனால், இதற்கெல்லாம் முறையான ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால், புரியாத புள்ளிவிவரங்கள், சித்தரிக்கப்பட்ட காட்சிகளை காட்டிவிட்டுத் தெறித்து ஓடிவிடுவார்கள் இந்தக் கதையை கட்டவிழ்த்து விட்டவர்கள்.

ஆங்கிலத்தில் இவற்றை “Conspiracy Theory” என்று அழைப்பார்கள். ஆதாரமற்ற சதிக் குற்றச்சாட்டுகள். எதிர்பாராத நிகழ்வுகள் நிகழும் போது, ”இது ஒரு திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி. இதற்கு பின்னாலிருந்து ஒரு ரகசிய நிறுவனம் இதை எல்லாம் இயக்கிக் கொண்டிருக்கிறது” என்று சொல்லவே ஒரு கும்பல் இப்போதெல்லாம் தயாராக இருக்கிறது. அது என்னவோ தெரியவில்லை, பெரும்பாலான தியரிகள் அமெரிக்காவின் தலையை போட்டுத் தான் உருட்டுகின்றன

செயற்கை பூகம்பங்கள் மற்றும் சீற்றங்கள்

விவேகம் படத்தில் செயற்கையாகப் பூகம்பங்களை உருவாக்க ஒரு சீக்ரெட் சொசைட்டி (ஒருவேளை இல்லுமினாட்டிகளோ?) முயல்வதாகச் சொல்லப்பட்டிருக்கும். இதற்காகவே புளூட்டோனியத்தால் செய்த ஆயுதங்களைப் பூமிக்குள் புதைத்து வைத்திருப்பதாகக் கூறியிருப்பார்கள். இதை வைத்து நில அதிர்வு மண்டலத்தில் (Seismic zone) இல்லாத இடங்களில் கூட பூகம்பங்களை வரவழைக்கலாம் என்று அதிர்ச்சி ஏற்படுத்தி இருப்பார்கள். ஆனால், இதற்கெல்லாம் முன்னரே இந்தச் செயற்கை பூகம்பங்கள், சுனாமி, புயல் போன்றவற்றை பற்றி நிறைய நம்பத் தகுந்த வதந்திகள் (அதாங்க “Conspiracy Theories”) வலம் வந்து கொண்டு தான் இருந்தன.

HAARP திட்டம்

HAARP திட்டம்

அலாஸ்கா பல்கலைக்கழகம் ஃபேர்பேங்க்ஸ் (University of Alaska Fairbanks) அமெரிக்காவின் மற்றொரு முனையான அலாஸ்காவில் ஒரு சர்ச்சைக்குரிய ஆராய்ச்சியில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. High Frequency Active Auroral Research Program (HAARP) என்றழைக்கப்படும் அது அயன்மண்டல (மேல் வளிமண்டலம்) ஆராய்ச்சி திட்டமாக கூறப்படுகிறது. கலக்காரர்களான கான்ஸ்பிரசி தியரிஸ்ட்ஸ் (Conspiracy Theorists) உள்பட ஐரோப்பிய யூனியனும் பலமுறை இது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால் உடல்நலம் மற்றும் சுகாதார கேடுகள் வருமா எனக் கூடுதல் விளக்கங்கள் கேட்டு தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டன. ஆனால், அப்படி எதுவும் நாங்கள் செய்யவில்லை, இது ஒரு உயர் அதிர்வெண்கள் மற்றும் ரேடியோ அலைகள் குறித்த அறிவியல் ஆராய்ச்சி மையம் மட்டுமே என்று விளக்கம் அளித்தது.

அமெரிக்கா விமானப்படை, கடற்படை, அலாஸ்கா பல்கலைக்கழகம் ஃபேர்பேங்க்ஸ், DARPA என்று அழைக்கப்படும் அமெரிக்க தற்காப்பு கருவிகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் மையம் ஆகியன இணைந்து இந்த HAARP திட்டத்தில் செயல்பட்டு வருகின்றன. அலாஸ்காவின் கக்கோனா (Gakona) என்ற இடத்தில் 40 ஏக்கர் நிலத்தில், சுமார் 180 கனரக ஆன்டென்னாக்கள் அணிவகுத்து நிற்கின்றன. பலமுறை கேட்டும் அதைப் பார்வையிட யாரையும் அனுமதித்ததில்லை என்று அமெரிக்காவின் ஊடகங்களே பலமுறை அதைச் சாடியுள்ளது. இது குறித்து பல பிரபல தொலைக்காட்சி சேனல்களான CBC, History போன்றவை பல ஆவணப்படங்களைச் செய்து ஒளிபரப்பியுள்ளது. அவற்றில் காட்சிப்படுத்தப்பட்ட சில முக்கிய அதிர்ச்சி தகவல்கள்…

HAARP திட்டம்

“மின்காந்த ஆயுதங்கள் ஒரு மின்னலில் இருக்கும் மின்சாரத்தை விட அதிக வீரியம் உள்ள மின்சாரத்தைக் கடத்த உதவும். இதை வைத்து எதிரிகளின் படை என்ன... அவர்கள் நாட்டையும் அதிலிருக்கும் அப்பாவி மக்களையும் அழிக்க முடியும். இதையே மேல் வளிமண்டலத்தில் பாய்ச்சினால் வெப்பநிலை உட்பட ஒரு நாட்டின் மொத்த வானிலையும் கட்டுப்படுத்த முடியும், மாற்றியமைக்க முடியும். இதன் மூலம் அவர்களை எளிதில் அடிமைப்படுத்தி விட முடியும். அந்த நாட்டின் ஒட்டுமொத்த எலக்ட்ரானிக் பொருட்களையும் பொசுக்கிவிட முடியும்.”

“இரண்டாம் உலகப்போரின் போதே அமெரிக்காவும் நியூசிலாந்தும் சேர்ந்து சுனாமி பாம்களை உருவாக்கத் தீவிரம் காட்டின. டெக்டோனிக் ஆயுதமாக இதைப் பிரயோகிக்க துடித்தன. அப்போதே இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்தது என்றால், இப்போது என்ன செய்து கொண்டிருக்கும்? இப்போது நிச்சயம் அவர்களால் புயல், சூறாவளி, பூகம்பம், சுனாமி போன்ற சீற்றங்களை உருவாக்க முடியும். அதைத் தான் HAARP தளத்தில் செய்து கொண்டு இருக்கிறார்கள். இதுவரை இந்தத் திட்டத்திற்கு $300 மில்லியன் டாலர்களுக்கு மேல் ஒதுக்கியுள்ளார்கள். சாதாரண ஆராய்ச்சி திட்டத்திற்கு எதற்கு இவ்வளவு பணம்?”

இது மட்டுமின்றி, பல ஆராய்ச்சியாளர்கள் ஹைட்டி (Haiti) பூகம்பம், இந்தோனேசியா சுனாமி, கத்ரீனா சூறாவளி போன்றவை உருவானதில் HAARP திட்டத்திற்கும் பங்கு உண்டு என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

 

அமெரிக்காவின் விளக்கம்

இந்த HAARP திட்டம் குறித்து கேள்விகள் எழுப்பப்படுவதும், அமெரிக்கா இதற்கு விளக்கம் அளிப்பதும் வருடா வருடம் நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றாகிவிட்டது. “ரேடியோ சமிக்ஞைகள் போரின் போதும் மட்டுமல்ல,போர் இல்லாத போதும் அமெரிக்க ராணுவத்திற்கு மிகவும் உதவும் ஒன்று. அவ்வகை ரேடியோ விட்டங்களை விண்ணில், அதாவது அயன்மண்டலத்தில் செலுத்தி அது எப்படிச் செயல்படுகிறது என்பது குறித்து ஆராய்ச்சிகள் மட்டுமே இங்கே நடைபெறுகிறது. இதன் மூலம், அந்த மேல் வளிமண்டலம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும் முடியும். சூரிய கதிர்கள் அவ்வப்போது அதிக வீரியத்துடன் வந்து நமது தகவல் பரிமாற்றங்களையும், மின்சார கிரிட்களையும் இடையூறு செய்கின்றன. இதைத் தடுக்கவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்” என்று விளக்கம் அளித்துள்ளது.  

அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும், இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்பதை ஆராய்ச்சி செய்ய போதுமான ஆதாரங்கள் யாரிடமும் இல்லை. அதற்கும் ஆதாரங்கள் கிடைக்கும் போதெல்லாம் ஊடகங்களின் வாயை அமெரிக்கா அடைத்து விடுகிறது, ஆதாரங்கள் அளிக்கப்படுகின்றன என்றெல்லாம் வாதங்கள் வைக்கப்படுகின்றன.

கடந்த 2016ஆம் ஆண்டில், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் உமர்ரான் இனான் (Umaran Inan)  பாப்புலர் சயின்ஸ் (Popular Science) என்ற பிரபல ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்தார். அதில், “HAARP திட்டத்தில் இந்தக் கட்டுக்கதைகள் கூறும்படி எதுவும் .நடக்கவில்லை. மின்னலை விடச் சக்திவாய்ந்த எதுவும் அங்கே தயாரிக்கப்படவில்லை. இயற்கையை மீறிய சக்தியை மனிதனால் நிச்சயம் உருவாக்க முடியாது. என்ன செய்தாலும், பூமியின் செயலை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அறிவியல் புரியாதவர்களுக்கு இந்த ஆராய்ச்சி அச்சத்தை தான் ஏற்படுத்தும். இந்த கான்ஸ்பிரசி தியரிஸ்ட்ஸ்களுக்கு வேறு வேலை இல்லை” என்று போட்டு உடைத்துள்ளார்.

பாஸ், உங்களை நம்பலாமா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்