வெயிலில் காய்ந்த தமிழகம் தென்மேற்குப் பருவமழையால் குளிர்ந்தது.... சென்னையில் சாதனை மழை!

தென்மேற்கு பருவமழை

2016-ம் ஆண்டு தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை இரண்டும் ஏமாற்றிவிட்டதால், சுட்டெரிக்கும் வெயிலில் தவித்தோம். ஆனால், இந்த முறை தமிழகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை காலத்தில் பரவலாக மழைப்பொழிவு இருந்திருக்கிறது.

சென்னை வானிலை மையம் தரும் புள்ளிவிவரத்தின்படி ஜூன் ஒன்று முதல் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை தமிழகத்தில் 244 மி.மீ மழை பெய்திருக்கிறது. இது வழக்கத்தை விட 21 சதவிகிதம் அதிகமாகும். ஐந்து வருடத்தில் இதுதான் அதிக அளவு என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது தமிழகத்தின் ஒட்டு மொத்தமான சராசரி அளவுதான். ஆனால், கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் மழை குறைவாகத்தான் பெய்திருக்கிறது. இன்னும் சில நாள்களில் மேலும் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையத்தின் கணிப்பாக இருக்கிறது.

சென்னையில் சாதனை

சென்னையைப் பொறுத்தவரை ஆகஸ்ட் மாதம்தான் ஈரமான மாதமாக இருந்திருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் இது இரண்டாவது சாதனையாகும். சென்னையில் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் இதுவரை 373.1  மி.மீ மழை பெய்திருக்கிறது. இது வழக்கமான அளைவை விட 18 சதவிகிதம் அதிகமாகும். இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் 368 மி.மீ மழை பெய்திருக்கிறது.

Rain

மழை அளவு

தென்மேற்குப் பருவமழை கடந்த ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கியது. அது முதல் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை உள்ள மழை அளவுகளை சென்னை வானிலை மையம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி தமிழகத்திலேயே மிக அதிக மழை கோவை மாவட்டத்தில்தான் பதிவாகி உள்ளது. இங்கு 246.4 மி.மீ மழை பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 106 சதவிகிதம் அதிகமாகும். மிக, மிக குறைவாக மழை பதிவாகி உள்ள மாவட்டம் கன்னியாகுமரி. இங்கு 217.4 மி.மீ மழைதான் பெய்திருக்கிறது. இது வழக்கத்தை விட 42 சதவிகிதம் குறைவாகும்.
பெரம்பலூர், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட மிக, மிக அதிகமாக மழை பெய்திருக்கிறது. விருதுநகர், விழுப்புரம், திருவாரூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருப்பூர்,  ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிக மழை பதிவாகியிருக்கிறது. சென்னை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, நாகை, நாமக்கல், சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் வழக்கமான அளவுக்கு மழை பெய்திருக்கிறது.

இன்னும் ஒரு மாதம்

தென்மேற்குப் பருவமழை வரும் செப்டம்பர் 30 வரை இருக்கிறது. அதுவரை இன்னும் போதுமான அளவுக்கு மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு சில நாள்கள் இடைவெளிக்குப் பிறகு அக்டோபர் 21-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது. வடகிழக்குப் பருவமழைகாலத்தில்தான் தமிழகத்தில் அதிக அளவு மழை பெய்யும். கடந்தாண்டு வடகிழக்குப் பருவமழை ஏமாற்றி விட்ட நிலையில் இந்த ஆண்டாவது மழை பெய்யும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

புதுச்சேரியில்...

தென்மேற்குப் பருவமழை காலத்தில் புதுச்சேரி மாநிலத்தில் 296.6 மி.மீ மழை பெய்துள்ளது. இது வழக்கமான அளவை விட 27 சதவிகிதம் அதிகமாகும். புதுச்சேரி மாவட்டத்தில் 383.2 மி.மீ மழை பெய்திருக்கிறது. இது வழக்கத்தை விட 49 சதவிகிதம் அதிகம். காரைக்கால் மாவட்டத்தில் 137.9 சதவிகிதம் மழை பதிவாகி உள்ளது. இது வழக்கத்தை விட 28 சதவிகிதம் குறைவாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!