வெளியிடப்பட்ட நேரம்: 13:24 (31/08/2017)

கடைசி தொடர்பு:14:20 (31/08/2017)

வாய்தா மேல் வாய்தா வாங்கும் அரசு வழக்கறிஞர்... வெளியே வரும் திருமுருகன் காந்தி!

திருமுருகன் மீது  குண்டர் சட்டம்

'பிரியங்கா' திரைப்படத்தில், வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது... அந்தப் படத்தில் பாதிக்கப்பட்ட பிரியாங்காவுக்குச் சாதகமான தீர்ப்பு வந்துவிடும் என ருத்ரய்யாவாக வரும் நாசர் வாய்தா மேல் வாய்தா வாங்குவார். அப்போது அதனை ஏற்காத பிரியங்கா தரப்பு வழக்கறிஞரான நடிகர் பிரபு நீதிபதியிடம், ''வாதத்தைவைக்கத் திறனற்றவர்கள் பயன்படுத்தும் ஒரே துருப்புச் சீட்டு 'வாய்தா'தான் என்று உணர்வுபூர்வமாகக்  குறிப்பிட்டு, ''வாய்தாவை வாரிவாரி வழங்குங்கள்'' என்று முறையிடுவார். தற்போது, அந்தப் படத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை.

இந்த வழக்கில் அரசுத் தரப்பிலிருந்து ஆஜரான வழக்கறிஞர், தனது எதிர்வாதத்தை வைக்க முடியாமல் திணறி வருவதாகவும், தொடர்ந்து வாய்தா வாங்கிக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேருக்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ளதால், நாளை திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேர் வெளியில் வரலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

2009-ம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது, இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மே 17 இயக்கம் உள்ளிட்ட தமிழீழ ஆதரவாளர்கள் ஆண்டுதோறும் 'நினைவேந்தல்' நிகழ்ச்சியை நடத்திவருகின்றனர். சென்னை மெரினாவில், கடந்த மே 21-ம் தேதி, 'நினைவேந்தல்' நிகழ்ச்சி நடத்த அந்த இயக்கம் திட்டமிட்டிருந்தது. ஆனால், மெரினாவில் நினைவேந்தல் நடத்துவதற்கு காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது. போலீஸாரின் தடையை மீறி அஞ்சலி செலுத்த முயன்ற திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் உள்பட பலர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர். திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்குபேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டது அரசு நிர்வாகம். அரசின் இந்த நடவடிக்கைக்கு, மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்த நிலையில் திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இதன்மீதான விசாரணை நடைபெற்று வந்தது.இறுதி விசாரணையாக இன்று இந்த மனு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், திருமுருகன் காந்தியைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது சரிதான்  என்பதற்குத் தேவையான ஆதாரங்கள் இதுவரை அரசுத் தரப்பிலிருந்து சமர்பிக்கப்படவில்லை. அதே நேரத்தில், திருமுருகன் காந்தி தரப்பிலிருந்து வைக்கப்பட்ட வாதத்துக்கும் எதிர்வாதமும் வைக்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் அரசுத் தரப்பிலிருந்து ஆஜரான வழக்கறிஞர் ராஜேந்திரன் தனது கவுண்டரைப் போடுவதாகவும் அதன்மீது நாளை வாதத்தை வைப்பதாகவும் நேற்று(30-8-2017) நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இதனைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் செல்வம், கலையரசன் அமர்வு வாதத்தை முடிக்குமாறு கண்டிப்போடு கூறியதோடு வாய்தா வழங்கி உத்தரவிட்டுள்ளனர். 

லேனாகுமார்  மே 17 இயக்கம் இதுகுறித்து பேசிய மே 17 இயக்கத்தின் மற்றோர் ஒருங்கிணைப்பாளர் லேனா குமார்,  "திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேரும் வெளியில் வருவதற்கான நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. விசாரணையின்போது நீதிபதிகள் சொன்ன கருத்தும், திருமுருகன்  வெளியில் வருவதற்கான போக்கைக் காட்டுவதாக அமைந்திருந்தது. அரசுத் தரப்பில் இருந்து வாதத்தைவைக்க முடியாமல் திணறி வருகிறார் வழக்கறிஞர். தொடர்ந்து பப்ளிக் பிராசிகியுட்டர் வாய்தா வாங்கிக்கொண்டிருக்கிறார். அரசுத் தரப்பின் இந்த நடவடிக்கைகள் திருமுருகன் காந்திக்குச் சாதகமானச் சூழலை உருவாக்கியுள்ளது" என்றார் 

திருமுருகன் காந்தியைக் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருப்பது தொடர்பாக அறிவுரை குழுமத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அந்த அறிவுரை குழுமத்தில் நடைபெற்ற விசாரணையில், திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டதில் காவல் துறை சட்டத்தைமீறிச்  செயல்பட்டிருப்பதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றைக் கேட்டுக் கொண்ட அறிவுரை குழுமம், ''திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டது சரிதான் என்றும், எந்தச் சட்டமீறலும் இல்லை'' என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கில் சாதகமானச் சூழல் உருவாகியிருப்பதாக மே 17 இயக்கம்  சார்பில்  சொல்லப்படும் வேளையில், அரசுத் தரப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதே பலருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. 


டிரெண்டிங் @ விகடன்