Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மத்திய அமைச்சரவை... இருப்பவர்களும், செல்லப்போவதும் யார்... யார்?

அமைச்சரவை

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு பதவி ஏற்றதிலிருந்து மூன்றாவது முறையாக மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாக செய்யப்படும் கடைசி அமைச்சரவை மாற்றம் இது என சொல்கிறார்கள். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க ஆகிய கட்சிகளை இணைப்பதற்காகவும் இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.

துணை முதல்வராகும் ரூடி ?

பிரதமர் மோடி சீனா மற்றும் மியான்மருக்கு செப்டம்பர் 6-ம் தேதி பயணம் மேற்கொள்கிறார். எனவே, அதற்கு முன்னதாக வரும் சனிக்கிழமை அன்று அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முதல் கட்டமாக ராஜிவ் பிரதாப் ரூடி தமது திறன் மேம்பாட்டுத்துறை மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பீகார் மாநிலம் சாரன் தொகுதியிலிருந்து ராஜிவ் பிரதாப் ரூடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராஜிவ் பிரதாப் ரூடி இப்போது அவர் பீகார் துணை முதல்வராக நியமிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்போது பீகார் துணை முதல்வராக இருக்கும் சுஷில் மோடி மத்திய அமைச்சரவையில் இடம் பெற உள்ளார் என்று டெல்லித் தகவல்கள் கூறுகின்றன. மூத்த பி.ஜே.பி தலைவரும், மத்திய அமைச்சருமான உமாபாரதி உள்ளிட்டோரும் ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குடியரசுத் தலைவர்தான் அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். இவர், ஆந்திராவுக்கு இரண்டு நாள் பயணமாக செல்கிறார். அவர் சனிக்கிழமை அன்று டெல்லி திரும்புவார். எனவே, சனிக்கிழமை மாலைதான் அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என்கின்றனர்.

மோடி, அமித்ஷா ஆலோசனை

அமைச்சரவை மாற்றம் குறித்து  பிரதமர் நரேந்திர மோடியும், பி.ஜே.பி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அமித்ஷாவும் அமைச்சரவை மாற்றம் குறித்து ஏற்கெனவே ஆலோசனை செய்திருக்கின்றனர். அவர்கள் இருவரும், மத்திய அமைச்சர்கள் சிலரிடம் அவர்களின் செயல்பாடுகள் குறித்து பேசி உள்ளனர். இது தவிர முன்னணி ஆர்.எஸ்.எஸ் தலைவர்களிடமும் இது குறித்து மோடியும், அமித்ஷாவும் ஆலோசித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், யார் அமைச்சரவைக்குள் வருவார், யார் வெளியேற்றப்படுவார்கள் என்பது குறித்து பி.ஜே.பி எம்.பி-க்களிடையே பரபரப்பான விவாதங்கள் எழுந்திருக்கின்றன.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி பதவி ஏற்றது. 23 கேபினட் அந்தஸ்து உள்ள அமைச்சர்களும், மத்திய இணை அமைச்சர்(தனிப்பொறுப்பு)களாக10 பேரும், இணை அமைச்சர்களாக 12 பேரும் அப்போது பதவி ஏற்றனர்.
அதன் பின்னர் முதல் அமைச்சரவை மாற்றம் 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி நடந்தது. அப்போது 21 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர். (இவர்களில் நான்குபேர் கேபினட் அந்தஸ்து அமைச்சர்கள், மூன்று பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், 14 பேர் இணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.) மனோகர் பாரிக்கர், சுரேஷ் பிரபு, ஜே.பி.நட்டா, ராஜிவ் பிரதாப் ரூடி, முத்தர் அப்பாஸ் நக்வி ஆகியோர் முதல் அமைச்சரவை மாற்றத்தில் இடம் பிடித்தனர்.

இரண்டாவது முறையாக மத்திய அமைச்சரவை கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி மாற்றப்பட்டது.  பிரகாஷ் ஜவ்டேகர் கேபினெட் அந்தஸ்துள்ள அமைச்சராக தரம் உயர்த்தப்பட்டார். இணை அமைச்சர்களாக 19 பேர் பதவி ஏற்றனர். மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சராக ஜவ்டேகர் நியமிக்கப்பட்டதை அடுத்து, ஸ்ம்ருதி இராணிக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பதவி தரப்பட்டது.

மூன்று காரணங்கள்

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக இந்த அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளது. முக்கியத் துறைகளில் அமைச்சர்கள் இல்லாமல் இருப்பது, அமைச்சர்களின் செயல்பாடு, வர இருக்கும் சட்டமன்றத்தேர்தல் ஆகிய மூன்று அம்சங்களைக் கணக்கில் கொண்டுதான் அமைச்சரவை மாற்றம் நடைபெறுகிறது. இப்போது வரை மோடியின் அமைச்சரவையில் கேபினெட் அந்தஸ்து உள்ள அமைச்சர்கள் 24 பேர், தனிப்பொறுப்புடன் கூடிய மத்திய இணை அமைச்சர்களாக 12 பேரும், இணை அமைச்சர்களாக 36 பேரும் என 72 அமைச்சர்கள் உள்ளனர். இப்போது 9 பேரை அமைச்சர்களாக மோடி நியமிக்க முடியும். மத்திய அமைச்சரவை என்பது 81 பேருக்கு அதிகமாக நியமிக்கப்படக் கூடாது என்பது மரபாகும்.

இப்போது நான்கு மூத்த அமைச்சர்கள் கூடுதல் துறைகளைக் கையில் வைத்திருக்கின்றனர். நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பாதுகாப்புத்துறையையும் வைத்திருக்கிறார். நரேந்திர சிங் தோமர், கிராம வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ், குடிநீர், ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதே போல மத்திய அமைச்சராக இருந்த வெங்கைய்யா நாயுடு குடியரசு துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். அவர் பார்த்து வந்த துறைகளும் காலியாக உள்ளன. அணில் தவே கடந்த மே 18-ம் தேதி இறந்ததைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பொறுப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, கூடுதல் பொறுப்புகளைப் பகிர்ந்து அளிக்கும் வகையில் அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என்று கருதப்படுகிறது.

ரயில்வே, சாலை இரண்டும் இணைப்பு?

கடந்த சில மாதங்களில் தொடர்ந்து ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இதன் காரணமாக தாம் பதவி விலக விரும்புவதாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, மோடியிடம் கூறினார். ஆனால், கொஞ்சகாலம் காத்திருக்கும்படி அவரிடம் மோடி அறிவுறுத்தி இருக்கிறார்.
நிதின் கட்காரி இப்போது சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கிறார். ரயில்வே துறை, சாலைப் போக்குவரத்து இரண்டையும் இணக்கலாம் என்று மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. எனவே, இந்த இரண்டு துறைகளுக்குமான ஒரே மத்திய அமைச்சராக நிதின் கட்காரி நியமிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. இது தவிர ரயில்வே அமைச்சர் பதவி ஐக்கிய ஜனதா தளத்துக்குச் செல்லும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே ரயில்வே மத்திய அமைச்சராக அங்கம் வைத்திருக்கும் நிதிஷ்குமார், தமது கட்சி சார்பில் நியமிக்கப்படுபவருக்கு ரயில்வே அமைச்சர் பதவி தர வேண்டும் என்று கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அதிருப்தியான செயல்பாடுகள்

செயல்பாடுகள் அடிப்படையில் சில மத்திய அமைச்சர்கள் பதவி விலகப் போவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா இருவரும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது. பியூஸ் கோயசல், தர்மேந்திர பிரதான், நிர்மலா சீத்தாராமன்,மனோஜ் சின்ஹா, ஜிதேந்திரா சிங் ஆகியோர் கேபினெட் அந்தஸ்து உள்ள மத்திய அமைச்சர்களாகப்பொறுப்பேற்க உள்ளனர்.. சத்ய பால்சிங் எம்.பி. முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் ஆக இருந்திருக்கிறார். இவரும் அமைச்சரவையில் இடம் பெற உள்ளார். மனித வளமேம்பாட்டுத்துறை மத்திய இணை அமைச்சர் மகேந்திர ராத் பாண்டே,  உ.பி மாநிலத்தின் பி.ஜே.பி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரது அமைச்சரவையும் காலியாக உள்ளது. பாதுகாப்புத்துறை இணை அமைச்சராக இருக்கும் சுபாஷ் ராமராவ் சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசாம் அமைச்சரவையில் இருக்கும் பிஸ்வா சர்மாவுக்குப் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பதவி தரப்படும் என்று தெரிகிறது.

ஐக்கிய ஜனதா தளத்துக்காக...

கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு மத்திய அமைச்சரவையில் பதவி கொடுக்கப்பட உள்ளது. ஐக்கிய ஜனதா தள எம்.பி, சின்ஹாவுக்கு ரியல்வே அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுரேஷ் பிரபு ஏற்கெனவே பதவி விலகுவதாகச்சொல்லி விட்டார். பீகார் முன்னாள் முதல்வர் கார்பூரி தாக்கூரின் மகன் ராம் நாத் தாக்கூரும் மோடி அமைச்சரவையில் இடம்பெற உள்ளார்.அ.தி.மு.க-வுக்கு இரண்டு  மத்திய அமைச்சர் பதவிகள் தரப்பட உள்ளது. சிவசேனா, தெலுங்கு தேசம் போன்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல்கள்

2018-ம் ஆண்டு சில மாநிலங்களுக்குச் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் ஜே.பி நட்டா, இமாசலபிரதேசத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார். அவருக்குப் பதில் முன்னாள் முதல்வர் பிரேம் குமார் தோமல் சுதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார். குஜராத் மாநிலத்திலும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், படேல் சமூகத்துக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த எம்.பி-க்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்க உள்ளன. எனவே, இதைக் கருத்தில் கொண்டு இரண்டுபுதிய அமைச்சர்களும் இடம் பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஆளுநர்கள்

ஏழு மாநிலங்களில் ஆளுநர்கள் இல்லாத நிலை உள்ளது. எனவே, இப்போதைய அமைச்சரவையில் இருக்கும் சிலர், ஆளுநர்களாக நியமிக்கப்பட உள்ளனர். சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா மகாராஷ்டிரா ஆளுநர் ஆக நியமிக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறார். இதன் மூலம் வித்தியா சாகர் ராவ், தமிழகத்தின் முழுநேர ஆளுநர் ஆக்கப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது.
அமைச்சரவை மாற்றத்துக்கு முன்பு இன்னொரு முறை ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் மோடியும், அமித்ஷாவும் ஆலோசனை செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement