பெனாசிர் கொலை வழக்குத் தீர்ப்பு, விடை தெரியாமல் தொடரும் மர்மங்கள்..! | Benazir bhutto murder case verdict, unanswered questions reamind

வெளியிடப்பட்ட நேரம்: 17:32 (01/09/2017)

கடைசி தொடர்பு:17:32 (01/09/2017)

பெனாசிர் கொலை வழக்குத் தீர்ப்பு, விடை தெரியாமல் தொடரும் மர்மங்கள்..!

பாகிஸ்தானுக்கும், ஜனநாயகத்துக்கும் எப்போதுமே வெகுதூரம். ஜனநாயகத்தைக் கொண்டுவர முயற்சித்தவர்களை எல்லாம் ஏதோ ஒரு வகையில் பலியாகி இருக்கிறார்கள். பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் துணிச்சலான பெண்ணாக அறியப்பட்டவர் பெனாசிர் பூட்டோ. இவரும், பாகிஸ்தானின், கொலை கலாசாரத்துக்கு கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி பலியானார்.

பெனாசிர்

தலைமறைவு குற்றவாளி

ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பெனாசிர் படுகொலை வழக்கில் தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. குற்றவாளிகள் என்று கைது செய்யப்பட்ட 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணையில் அலட்சியமாக செயல்பட்டதாகவும், ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும், இரண்டு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தலா 17 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. பெனாசிர் படுகொலையின்போது அதிபராக இருந்த முஷாரப் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். பெனாசிர் படுகொலை சம்பம் குறித்த வழக்கில் தீர்ப்பு வெளியாகி விட்டாலும், கூட அவரது மரணத்தில் பல விடை தெரியாத கேள்விகள் உள்ளன.

பாகிஸ்தான் கொலை வழக்கை அப்போதைய முஷாரப் அரசு விசாரணை செய்தது. பாகிஸ்தான் தாலிபான் தலைவர் பெய்துல்லா மெஹ்சுத் தான் பெனாசிர் படுகொலைக்கு காரணம் என்று குற்றம் சாட்டியது. ஆனால், தமக்கு பெனாசிர் கொலைக்கும் தொடர்பில்லை என்று மறுத்தார். அமெரிக்க ஏவுகனைத் தாக்குதலில் கடந்த 2009-ம்ஆண்டு இவர் இறந்து விட்டார்.

தீவிரவாத எதிர்ப்பு

பெனாசிர் பூட்டோ  தீவிரவாதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். தேர்தல் பிரசாரத்தின்போது, பாகிஸ்தான் பழங்குடியினப்பகுதிகளில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசி வந்தார். அல்கைய்தா, தாலிபான் அமைப்புகளும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றன. ஆனால், இந்த தொடர்புகள் குறித்து பாகிஸ்தான் போலீஸார் விசாரணை செய்யவில்லை.

பெனாசிர் கொலைக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியைப் பிடித்த து. பெனாசிரின் கணவர்  அசீப் அலி ஜர்தாரி பிரதமராகப் பதவி ஏற்றார். அப்போது, பெனாசிர் கொலை குறித்து ஐ.நா சபையின் குழு விசாரணை செய்ய முயற்சி எடுத்தார். மூன்று நபர் ஐ.நா குழு விசாரணையில் ஈடுபட்டது. விசாரணையின் முடிவில் கடந்த 2010-ம் ஆண்டு 70 பக்க அறிக்கையைத் தாக்கல் செய்தனர். அதில், முஷாராப் நிர்வாகம், பெனாசிர் பூட்டோவுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க தவறி விட்டது. அவருக்கு போதுமான பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தால், அவரது படுகொலையைத் தடுத்திருக்கலாம். இந்த பாதுகாப்புக் குறைபாட்டுக்கு முழுக்க முழுக்க பொறுப்பானவர் முஷாரப்தான் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

உளவு அமைப்பின் சதி?

போலீஸாரும் முறையாக விசாரணை செய்யவில்லை. கொலை நடந்த இடத்தில் தடயங்களை பாதுகாக்கவும் போலீஸார் தவறி விட்டனர். ராவல்பிண்டி நகரின் போலீஸ் தலைவர் சவுத் அஜீஸ், பெனாசிர் பூட்டோ உடலைப் பிரேதப் பரிசோதனை செய்வதற்கு உத்தரவிட மறுத்தார். பெனாசிர் கொலை வழக்கு விசாரணையில் அதீத அக்கறை காட்ட வேண்டாம் என்று பாகிஸ்தான் நாட்டின் உயர் மட்டத்தில் இருந்து போலீஸாருக்கு அழுத்தம் வந்திருக்கலாம். பெனாசிரின் கொலைப்  பின்னணியில் அந்நாட்டின் உளவுப் பிரிவின் கைவரிசை இருக்கலாம் என்று போலீஸார் அச்சப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவேதான் விசாரணையில் அவர்கள் தீவிரம் காட்டவில்லை. புலனாய்வாளர்கள் என்ற வகையில் அவர்களுக்கு எல்லாம் தெரியும். விசாரணையை தீவிரமாக எடுத்துச் சென்றிருக்கலாம் என்று ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால், பெனாசிர் பூட்டோவின் படுகொலைக்கு சதித்திட்டம் தீட்டியவரின் பெயரை குறிப்பிடுவதில் ஐ.நா குழுவும் தயங்கவே செய்த து. பாகிஸ்தான் நீதிமன்றமே அதை கண்டுபிடிக்கட்டும் என்று பொறுப்பை தள்ளி விட்டு விட்டது.

சதி வலைகள்

benazir bhutto

பெனாசிர் படுகொலைக்குப்பின்னர் ஆட்சிக்கு வந்த அவரது கணவர் ஆசிப் அலி ஜர்தாரியும், தம் மனைவி கொலைக்குக் காரணமான கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, ஜர்தாரியின் ஆதரவாளர்களில் ஒருவரான பிலால் ஷேக் 2013-ம் ஆண்டு தற்கொலைப்படை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த பிலால் ஷேக்தான் பெனாசிர்  பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளராகவும் இருந்தார்.

இன்னொரு தியரியும் சொல்கிறார்கள். பெனாசிர் கொலைப்பட வேண்டும் என்று விரும்பியதில் அல் கைய்தாவும் ஒன்று என்கின்றனர். உளவுத்துறையின் ரகசிய உத்தரவின் பேரில் அல் கைய்தாவினர்  பெனாசிரைப் போட்டுத் தள்ளியிருக்கலாம். உயர் மட்டத்தில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக ராவல்பிண்டி போலீஸார் இந்த படுகொலை விசாரணையில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்திருக்கலாம் என்ற தியரிதான் அது.

பெனாசிர் பூட்டோவின் நம்பகமான பாதுகாவலரான காலித் ஷாஹென்சா, பெனாசிர் படுகொலைக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, யாருக்கோ சைகை மூலம் ரகசிய உத்தரவிடுவது வீடியோவில் பதிவாகி இருக்கிறது. பெனாசிர் கொலையானதற்கு சில மாதங்களுக்குப் பின்னர் ஷாஹென்சாவும் கராச்சியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த மர்மமான தியரிகளுக்கு விடை கிடைக்காமலேயே பெனாசிர் வழக்கில் தீர்ப்புச்சொல்லப்பட்டு விட்டது. பெனாசிரின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ, இந்த த் தீர்ப்பு அதிருப்தி அளிக்கிறது என்று சொல்லி இருக்கிறார். பெனாசிரின் மகளான அசீபா, "என் தாய் படுகொலைக்கு முஷாரப் பதில் சொல்லும் வரை நீதி கிடைத்த தாகக் கருத முடியாது" என்று சொல்லி இருக்கிறார். பாகிஸ்தான் மர்மங்களுக்கு எப்போதும் விடை கிடைப்பதில்லை. இதுவும் அதில் ஒன்றாக இருக்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close