Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“கோதுமை சாப்பிட்டுக்கொண்டே சிறுதானியங்கள் விளைய வேண்டும் என நினைத்தால் எப்படி?” - பிரசன்னா ஐ.ஏ.எஸ் கேள்வி #PasumaiAgriExpo

‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2017' கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, திருச்சியில் இன்று (செப்டம்பர் 1-ம் தேதி) இனிதே தொடங்கியது. செப்டம்பர் 4-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த மாபெரும் வேளாண் கண்காட்சியை இயற்கை விவசாயியும் நடிகருமான திரு.கிஷோர் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக, நபார்டு வங்கியின் பொது மேலாளர் நாகூர் அலி ஜின்னா, சத்தீஸ்கர் மாநில தம்தரி மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரசன்னா ஐ.ஏ.எஸ், ‘பஞ்சகவ்யா சித்தர்’ கே.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ

விழாவில் பேசிய மைசூரு உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை முதன்மை விஞ்ஞானி ஶ்ரீனிவாஸ் பேசும்போது, "இன்னைக்கு விவசாய விளைபொருள்கள் நிறைய  விளையுது. அதை எப்படி மதிப்புக்கூட்டி விக்க முடியும் என்கிற வித்தையை கத்துக்கிட்டால், விவசாயம் லாபகரமானதுதான். இந்த மதிப்புக் கூட்டி விற்கிற வித்தையைதான் நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம். அதுக்குத்தான் எங்களுக்கு கவர்மெண்ட் சம்பளம் கொடுக்குது. அதனால், கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள எங்கள் உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையத்துக்கு வாங்க. நிறைய பயிற்சிகளையும் கொடுக்கிறோம். எங்கள் மையம் மூலமாக உலகளவில் ஊட்டச்சத்து மிக்கது என்று பெயர் பெற்ற கினோவா, சியா என்கிற இரண்டு சிறுதானிய ரகங்களை வெளியிட்டிருக்கிறோம். அதையும் விளைவித்து விவசாயிகள் லாபமடையலாம்" என்றார்                        

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ

நபார்டு முதன்மை பொது மேலாளர் நாகூர் அலி ஜின்னா பேசும்போது, "தண்ணீர் விவசாயத்துக்கான முக்கிய ஆதாரம். ஆனால் தமிழ்நாட்டில் தாமிபரணி ஆற்றைத் தவிர எந்த ஆற்றிலும் தண்ணீர் இல்லை. 80 சதவிகித நீரை பூமியில் இருந்து உறிஞ்சி எடுத்துவிட்டோம். கிணத்தைக் காணோம், குளத்தைக் காணோம்னு சொல்லிட்டிருந்தோம். இப்போ ஆத்தையும் காணோம், பூமியில் ஊத்தையும் காணோம்னு சொல்லிட்டிருக்கிற அவலம் நேர்ந்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் 18 ஆயிரம் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒன்றரை மடங்கு விவசாய உற்பத்தி அங்கு அதிகரித்திருக்கிறது. இதை தமிழகம் பின்பற்றினால் உற்பத்தியைப் பெருக்கலாம். விவசாயத்துக்கு மூன்று 'எம்'(M) தேவை. ஒன்று பணம்(Money) இரண்டு 'மான்சூன்'(Monsoon), மூன்று 'மார்க்கெட்'(Market) ஆகியவை இருந்தால் விவசாயம் செழிக்கும். இதற்காக நபார்டு பயிர்க்கடனுக்காக 20 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது" என்றார்.

 பிரசன்னா ஐ.ஏ.எஸ்

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாட்ட ஆட்சியராகப் பணிபரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரசன்னா ஐ.ஏ.எஸ் பேசும்போது "நாம் அரிசி, கோதுமை சாப்பிட்டுக் கொண்டே சிறுதானியங்கள் வளர வேண்டும் என்று நினைக்கிறோம். அப்படி நினைத்தால் வளராது. உணவும் விவசாயம்தான். நாம் சாப்பிடுகிற உணவுதான் விளைவிக்கப்படும். நல்ல உணவு பொருள்களைச் சாப்பிட்டால்தான் அவை நிலத்தில் விளைவிக்கப்படும்.
இப்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் அழிந்து போகும் நிலையில் இருந்த ஜீராபுல் என்ற நெல் ரகத்தை மீட்டெடுத்தோம். பழங்குடியினரிடம் இருந்த இந்த நெல் ரகத்தை, அதன் முக்கியத்துவத்தைச் சொல்லி பயிர் செய்ய சொன்னோம். கிடைக்கிற ஓய்வு நேரங்களிலெல்லாம் அந்த பழங்குடி கிராமத்துக்குச் சென்று இந்த நெல்லை, விவசாயிகளைப் பயிர் செய்ய சொன்னோம். ஆரம்பத்தில் 8 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ நெல், இன்றைக்கு 55 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. பாரம்பர்ய அரிசி வகையை விரும்பி சாப்பிடுவரோல்தான் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வாழ முடிகிறது. இதுபோன்ற அழியும் நிலையில் இருக்கிற ரகங்களையும் மீட்டெடுக்க முடிகிறது. எனவே சாப்பிடும் உணவு பொருளும் விவசாயத்துக்குச் சமமானது" என்றார்.

நடிகர் கிஷோர்

அடுத்து பேசிய நடிகர் கிஷோர், "விவசாயத்த இப்பதான் கத்துக்கிட்டிருக்கேன். நானே குழப்பமாகத்தான் இருக்றேன். நுகர்வோரிஸம், உலக மயமாக்கல், எல்லாமே மனிதர்களை அழிக்க பார்க்கிறது. ஒரு பொருளை விற்பவர்கள் முதலில் ஆசையைத் தூண்டுவார்கள், அந்த ஆசையை தேவையாக மாற்றுவார்கள், அதன் பின்னர் அந்த தேவையை விற்பனையாக மாற்றுவார்கள். அப்படித்தான் இங்கு அதிகமான விளம்பரங்கள் கொடுக்கப்படுகிறது. எதிர்காலத்தில் பாரம்பர்ய விவசாயம்தான் உலகத்தைக் காப்பாற்றும். இயற்கை விவசாயத்தைக் கையில் எடுத்து சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கும் பசுமை விகடனுக்கு நன்றி!" என்றார்.

கண்காட்சியின் ஓர் அங்கமாக நடைபெற்று வரும் கருத்தரங்குகள் தொடர்ந்து நான்கு நாட்களும் நடைபெறும். மீன் வளர்ப்பு, இயற்கை இடுபொருள், கால்நடை வளர்ப்பு என பல்வேறு தலைப்புகளில் முன்னோடி விவசாயிகள், வல்லுனர்கள் உரையாற்ற இருக்கின்றனர். கண்காட்சியில் பண்ணைக் கருவிகள், ஆடு வளர்ப்பு கருவிகள், இயற்கை உணவு பொருட்கள், நர்சரிகள், விதைகள், மாடித்தோட்ட இடுபொருட்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொன்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ

இதோடு பசுமை விகடன் சார்பில் ஒவ்வொரு பயிருக்கும் ஆலோசனை வழங்க அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னோடி விவசாயிகள் அந்த அரங்குகளில் அமர்ந்து ஆலோசனை வழங்கி வருகிறார்கள். தொடர்ந்து நான்கு நாட்களுக்கும் இந்த ஆலோசனை அரங்குகள் செயல்படும்.

இந்தக் கண்காட்சிக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், இந்தியப் பயிர் பதன தொழில்நுட்ப மையம், தேசிய விதைக் கழகம், உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் ஆகியவை தங்களது ஆதரவை வழங்கியுள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ

Advertisement