Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“அனிதாவின் தற்கொலைக்கு அரசே காரணம்!” - கொதிக்கும் கட்சித் தலைவர்கள்

அனிதா

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே அதிரச் செய்துள்ளது. அவர் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்பட்டதற்கு நாம் அனைவருமே வெட்கித் தலை குனிய வேண்டும். அரசின் கையாலாகத்தன கல்விக் கொள்கை மற்றும் போட்டி மனப்பான்மையை உருவாக்கியிருக்கும் இன்றையக் கல்வி நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அனிதாவின் தற்கொலைக்கான காரணங்களாக வரிசைக் கட்டி நிற்கின்றன. இருந்தாலும் உண்மையில் அவருடைய இந்தத் தற்கொலைக்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் பேசினோம்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், "இந்த விவகாரத்தில் அனிதா தற்கொலை செய்துகொண்டிருக்கக்கூடாது. மருத்துவக் கனவு நிறைவேறவில்லை என்ற ஏமாற்றத்தை அவரால் தாங்கிக்கொள்ள ஜி ராமகிருஷ்ணன்  சி.பி.எம் முடியவில்லை. அந்தத் துயரமே அவரை இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது. ஆனால், அதற்கான தீர்வு இதுவல்ல... அவருடைய இந்த முடிவை ஏற்க முடியவில்லை. மிகுந்த வேதனை அளிக்கிறது. நீட் தேர்வுக்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தபோது அனைவருமே நீட் தேர்வு தேவையில்லை என போராட்டம் நடத்தினோம். இதில் பி.ஜே.பி மட்டுமே நடைமுறைபடுத்தியே தீருவோம் எனப் பிடிவாதமாக இருந்தது.

மாநில அரசாங்கம் தமிழகத்தில் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அதீத நம்பிக்கையைக் கொடுத்துவிட்டது. அங்குதான் தவறு நடந்துள்ளது. தமிழகம் வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு வருடத்துக்கு விதி விலக்கு கேட்டு அவசர சட்டம் இயற்றுங்கள் அதற்கு நாங்கள் ஒத்துழைக்கிறோம் என்ற நம்பிக்கை வார்த்தையைக் கூறினார். அந்த பொய்யான நம்பிக்கைதான் இந்த மாணவியின்  உயிரைப் பறித்துவிட்டது. அரசில் உள்ளவர்களும் இதை நம்பியே செயல்பட்டனர் . ஆனால், விதிவிலக்கு பெற முடியாத நிலை ஏற்பட்டது .

இந்த விவகாரத்தில் மாநில அரசு நம்பிக்கையை ஏற்படுத்தி கடைசி நேரத்தில் அதனுடைய இயலாமை பாலு வழக்கறிஞர் முகத்தை வெளிக் காட்டிவிட்டது. மத்திய அரசும்  - மாநில அரசாங்கத்துக்கு எதிராகவே செயல்பட்டதோடு நீதிமன்றமும் கைவிரித்துவிட்டது. இதனால் ஏற்பட்ட விரக்தியே தற்போதைய தற்கொலைக்கான காரணம். இந்த தற்கொலைக்கு முழுவதுமாக மத்திய - மாநில அரசுகள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். ஒட்டு மொத்தமாக அரசாங்கம்தான் அந்த மாணவியை தற்கொலைக்குத் தள்ளிவிட்டது'' என்றார்.

இனியாவது சட்டம் என்பது மக்களின் நலனுக்கானது என்பதை உணர்ந்து  மத்திய  - மாநில அரசுகள் செயல்பட்டால்தான் இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்க முடியும். 

இதுதொடர்பாக பேசிய பா.ம.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு, ''மாணவி அனிதாவின் மரணத்துக்கு மத்திய - மாநில அரசுகள்தான் வெட்கித் தலை குனிய வேண்டும்.1,176 மதிபெண்கள் பெற்ற அந்த மாணவியால் நீட் தேர்வில் வெற்றி பெறுவது அவ்வளவு பெரிய கடினம் அல்ல. எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது யாருடைய தவறு? நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் அரசாங்கம் செய்த தவறுக்குப் பலியாகி இருக்கிறாள் அனிதா. இனி அவளுடைய இழப்புக்கு இந்த அரசாங்கம் என்ன விலை கொடுத்தாலும் அது எந்த வகையிலும் ஏற்க முடியாது. மாணவர்களின் பிரச்னையைக் கண்டறிந்து அதற்கான நடவடிக்கை எடுக்காமல், பதவியில் யார் இருப்பது என்ற சண்டையிலேயே இருந்தார்கள் ஆளும் கட்சியினர்.

அதுமட்டுமன்றி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  தமிழகத்தில் பி.ஜே.பி-யின் செல்வாக்கை உயர்த்திப்  பிடிக்க வேண்டும் என்பதற்காக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மாணவர்களிடையே நம்பிக்கையை விதைத்து விட்டுச் சென்றார். மாநில அரசும் அவசர சட்ட மசோதா இயற்றுவதாக கூறிக்கொண்டு அலைந்தது. ஆனால், கடைசியில் தோல்வியில் கொண்டு போய் நிறுத்தி மாணவர்களின் கனவை நீர்மூலமாக்கி அவர்களைப் பிணங்களாக்கி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது அரசாங்கம்'' என்று கொதித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ