வெளியிடப்பட்ட நேரம்: 10:59 (03/09/2017)

கடைசி தொடர்பு:10:59 (03/09/2017)

அனிதாவின் மரணத்தை ஆங்கில ஊடகங்கள் எப்படி பதிவு செய்திருக்கின்றன? #RIPAnitha

அனிதா

செப்டம்பர் ஒன்றாம் தேதி பிற்பகல் 3.30-க்கு மேல் காட்சி ஊடகங்கள் அனிதாவின் தற்கொலை செய்தியை உறுதிப் படுத்தியபோது, வாட்ஸ் அப் முதல் ட்டிவிட்டர் வரை அனைத்து சமூக ஊடகங்களும் வேதனை நிறைந்த, வருத்தம் தோய்ந்த வார்த்தைகளால் நிரம்ப ஆரம்பித்தன.
தமிழக ஊடகங்கள் அனிதாவின் முடிவை தலைப்புச் செய்திகளாக்கின. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிக்கை விடுத்து தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களுக்கு தமிழக ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்தன. தமிழகத்தில் என்ன நடந்தாலும் வழக்கமாக பிற ஆங்கில ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை. இதற்கு மாறாக அனிதாவின் மரணத்தை ஆங்கில ஊடகங்கள்  பதிவு செய்திருந்தன.

மருத்துவக் கனவை கொன்ற கொள்கை முடிவு

மும்பையில் இருந்து வெளியாகும் டி.என்.ஏ ஆங்கில நாளிதழ், அனிதா நீட் போராளி என்று வர்ணனை செய்திருந்தது. பைனான்சியல் எக்ஸ்பிரஸ் நாளிதழ், பி.டி.ஐ., மற்றும் ஏ.என்.ஐ செய்திகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது.
அனிதா மரணம் குறித்து  வருத்தங்களைப் பதிவு செய்திருந்த ரஜினி காந்த், கமல் ஹாசன் இருவரின் தகவல்களை பெரும்பாலான ஆங்கில ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருக்கின்றன. தி டெலிகிராப் நாளிதழ், 'அனிதாவின், நீட்டுக்கு எதிரான முயற்சி வீணானது. முடிவுற்ற புத்திசாலி பெண்ணின் வாழ்கை' என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது.
இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ், 'புதிய நீட் எனும் மாணவர் சேர்க்கை கொள்கை முடிவு, மருத்துவக் கனவை கொன்றது' என்ற தலைப்பிட்டிருக்கிறது. 

அடித்தட்டு மக்களின் மரணம்

அனிதா

''அனிதாவின் தற்கொலை; சம உரிமையற்ற சமுதாயத்தில் அடித்தட்டு மக்களின் மரணம் பொதுவான ஒன்றாகிவிட்டது" என்ற இயக்குனர் பா.ரஞ்சித்தின் வரிகளை தலைப்பிட்டு இந்தியா டு டே இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது. மேலும், சில ஆங்கில ஊடகங்களும் பா.ரஞ்சித்தின் பேட்டியை பிரசுரித்திருக்கின்றன.நியூஸ் 18 ஆங்கில தொலைகாட்சியின் இணையதளம், ‘அனிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை. நீட்தான் அவரது உயிரைப் பறித்திருக்கிறது' என்ற தலைப்பில் கட்டுரையைப் பதிவு செய்திருக்கிறது. "மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல், நீட் தேர்வை மத்திய அரசு எப்படி அமல்படுத்தலாம்" என்று சீத்தாராம் யெச்சூரியின் கேள்வியை தலைப்பாக்கி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கூகுளில் ஆங்கிலத்தில் அனிதாவின் பெயரை டைப் செய்து தேடினால், ஆங்கிலத்தில் வெளியான அனிதா பற்றிய கட்டுரைகள் அனைத்தையும் வரிசைப்படுத்துகிறது. எந்த ஒன்றையும் இணைய பக்கமாக மாற்றும் விக்கி பீடியாவும் அனிதாவுக்காக ஒரு ஆங்கில பக்கத்தை உருவாக்கி உள்ளது. அவரது வாழ்க்கை வரலாற்றுடன், அண்மையில் வெளியான நாளிதழ்களின் இணைப்பையும் கொடுத்துள்ளது.

அனிதா

பிரிந்திருந்த ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இணைந்த போது ட்டிவிட்டரில் வாழ்த்துச்சொன்ன மோடி, இந்தியாவுக்குள் இருக்கும் தமிழகத்தில், நாடே கண்ணீர் விட்டு அழுத அனிதாவின் மரணத்துக்கு பிரதமர் ட்விட்டரில் ஒரு வார்த்தை கூட எழுத வில்லை. தமக்குப் பிடிக்காத விஷயத்தைப் பற்றி அவர் கண்டுகொள்ளவே மாட்டார். அவருக்குத் தேவை அவரது முடிவை எல்லோரும் அமல்படுத்த வேண்டும் என்பதுதான். மற்றது எல்லாம் அவருக்கு இரண்டாம் பட்சம்தான்.  நீட் என்ற காரணியின் மூலம் மரணித்துப் போன அனிதாவை, வரலாறு பதிவு செய்து விட்டது. இப்போது சந்தோஷமா மோடி அவர்களே?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்