வெளியிடப்பட்ட நேரம்: 21:39 (04/09/2017)

கடைசி தொடர்பு:21:39 (04/09/2017)

நிர்பயா சட்டம் போல அனிதா சட்டம் வருமா?

அனிதா

டெல்லியில் கூட்டுவல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் இழப்புக்குப் பிறகு, நிர்பயா சட்டம் கொண்டுவரப்பட்டதைப் போல, மாணவி அனிதாவுக்கு நேர்ந்த கொடுமை மற்றவர்களுக்கு ஏற்படாமல் தடுக்க, அனிதா சட்டம் எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் எனும் குரல் வலுத்துவருகிறது. 

சென்னையில் அண்மையில் பொதுநிகழ்வு ஒன்றில் பேசிய உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், தமிழக அரசு ஏற்கெனவே இயற்றிய சட்டத்துக்கே அனிதா சட்டமாகக் கொள்ளலாம் என்ற கருத்தை வெளியிட்டார். விசிக தலைவர் தொல்.திருமாவளவனும் மாநில அரசின் கல்வி உரிமையில் தலையிடாதபடி ‘அனிதா சட்டம்’ கொண்டுவர வேண்டும் எனக் கூறியுள்ளார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணியும் இச்சட்டத்தை ஆதரித்துள்ளார். இந்த நிலையில் ’அனிதா சட்டம்’ எனும் கருத்தை முதலில் முன்வைத்த மனிதவுரிமை ஆர்வலரும் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளருமான தியாகுவிடம் இது பற்றிக் கேட்டோம். 

’அனிதா சட்டம்’ என்பதன் தேவையையும் அதன் அம்சங்களையும் பற்றி விவரித்தார். 

”அனிதாவின் சாவுக்குக் காரணமான நீட் தேர்வை ஒழிப்பதற்கான சட்டத்துக்கு அனிதா சட்டம் என்று பெயரிடவேண்டும். நீட்டுக்கு எதிராகத் தமிழக சட்டப்பேரவை ஒருமனதாக இயற்றிய சட்ட முன்வடிவை இந்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. தமிழக அரசும் அதற்காகப் போராடவில்லை. ஈராண்டுவிலக்கு, ஓராண்டுவிலக்கு என்றுதான் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.  நீட்டைத்  தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் என்று சொல்லும் துணிவோ போர்க்குணமோ இல்லை. மடியில் கனம், வழியில் பயம் என்பதே காரணமாயிருக்கலாம். 

நீட் தேர்வும் நடந்து முடிந்து விட்டது. இதன் பிறகு நடந்தது அனைத்தும் நாடகமே! இந்திய அரசும் தமிழக அரசும் சேர்ந்து நடத்திய நாடகம். ஓராண்டு விலக்களிக்கத் தயார் என்று நிர்மலா சீத்தாராமன் அறிவிக்கிறார், அதற்கான அவசரச் சட்டம் தயாராகிறது; உச்ச நீதிமன்றத்திலேயே இந்திய அரசு காலைவாரிவிடுகிறது. இந்திய அரசே ஒத்துழைத்திருந்தாலும் உச்ச நீதிமன்றம் இந்த அவசரச் சட்டத்தை ஏற்றுக் கொண்டிருக்காது. ஏனென்றால் நீட் தேர்வு நடந்துமுடிந்தபின் அதனைப் பொருளற்றதாக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புக்கொள்ள வாய்ப்பே இல்லை. இதை நான் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் வெளிப்படையாக அறிவித்தேன். ஒருவேளை உச்ச நீதிமன்றம் மாநில அரசின் அவசரச்சட்டத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் அது நீட் தேர்வில் வென்ற மாணவர்களுக்கு அநீதியாக முடிந்திருக்கும். அந்த மாணவர்களில் ஒருவர் அனிதாவின் முடிவை எடுத்திருந்தால் அதுவும் நமக்குத் துன்பமே” என்றவர் தொடர்ந்தார். 

அனிதா சட்டம் - தியாகு

” இந்தக் குழப்பத்துக்குக் காரணம் தமிழக உரிமையை மதிக்காத இந்திய அரசும், சேர்ந்து நாடகமாடிய தமிழக அரசுமே. எந்தத் தரப்பிலும் அனிதாவின் நிலை யாருக்கும் ஏற்படக் கூடாதென்றால் அதற்காகத்தான் அனிதா சட்டம் கேட்கிறோம். அதன்படி கல்வியை மாநிலப் பட்டியலுக்கே திருப்பித்தர வேண்டும். நெருக்கடிநிலைக் காலத்தில் இந்திரா காந்தி கொண்டுவந்த 42ஆம் அரசமைப்புச் சட்டத் திருத்தப்படி செய்யப்பட மாற்றங்களில் இதுவும் ஒன்று. பிறகு வந்த ஜனதாதள அரசு வேறுசில மாற்றங்களைச் சரிசெய்த போதிலும் இந்த மாற்றத்தை அப்படியே விட்டு வைத்து விட்டது. இதனால்தான் மாநில உரிமையைப் பறிக்கும் நீட் போன்ற அநீதிகள் அரங்கேற முடிந்தது. 

மீண்டும் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டியிருக்கும். இதற்கு பாரதீய ஜனதா தவிர மற்ற கட்சிகளின் ஆதரவைக் கோரலாம். வங்கம், கேரளம், காசுமீர், பிகார் போன்ற மாநிலங்களின் ஆதரவும் கிடைக்கலாம். எல்லாம், தமிழக மக்களின் போராட்ட வலிமையைப் பொறுத்தது. அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப் போதிய ஆதரவு கிடைக்காவிட்டால், தமிழகத்திலிருந்து நீட்டை நிரந்தரமாக வெளியேற்றுவதற்கான மாநிலச் சட்டம், அனிதா சட்டம் என்ற பெயரிலேயே  இயற்றலாம். இதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல்பெற இந்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டியிருக்கும். எல்லாமே தமிழக மக்களின் உறுதியான, விட்டுக்கொடுக்காத போராட்டத்தையே சார்ந்துள்ளது. ’அனிதா சட்டம்’ வேண்டும் என்பது தமிழக மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், இயக்கங்கள் கட்சிகளின் ஒரே முழக்கமாக ஓங்கி ஒலிக்கட்டும்” என்று முடித்தார், அழுத்தமாக. 

 


டிரெண்டிங் @ விகடன்