Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

“அனிதாக்களுக்காகவும் போராடுங்கள் ஆசிரியர்களே!”- சென்னை கவிதாஞ்சலியில் கொந்தளித்த எழுத்தாளர்

அனிதா சென்னை கவிதாஞ்சலி

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு துயர்பகிரும் வகையில், சென்னையில் கண்டனக் கூட்டமும் கவிதாஞ்சலியும் நடைபெற்றது. சென்னை வடபழனி நூறடி சாலையில் உள்ள அம்பேத்கர் திடலில் கடந்த சனிக்கிழமை மாலை 5 மணிக்கு, இந்நிகழ்வு தொடங்கியது. வழக்கறிஞர் அருள்மொழி தொடக்கவுரை ஆற்றினார். 

கவிஞர்கள் சுகிர்தராணி, சந்திரா, உமாதேவி ஆகியோர் கண்டனக் கவிதைகளை வாசித்தனர். கோவை ச.விஜயலட்சுமியின் கவிதையை அபிநயா வாசித்தார். ‘பயணி’ விஜய் ஆனந்தின் கவிதையை, தொடக்கப்பள்ளி மாணவரான அவரின் மகன் திலீபன் வாசித்தபோது, அரங்கம் நெகிழ்ந்தது. 

ஆய்வு எழுத்தாளர் வ.கீதா, பத்திரிகையாளர் அ.குமரேசன், நாடக நெறியாளர் பிரசன்னா ராமசாமி, எழுத்தாளர்கள்  பாஸ்கர் சக்தி, தமயந்தி, பேராசிரியர்கள் லெனின், காமராஜ், அப்துல் ரசாக், விசிக நிர்வாகி இளஞ்சேகுவேரா, ஜனநாயக வாலிபர் சங்க மாநிலப் பொறுப்பாளர் தீபா, சிபிஎம் கட்சியின் பகுதிச் செயலாளர் செல்வா, வழக்குரைஞர் சுசீலா, சமூக ஊடக எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான யோசுவா ஐசக், ஆய்வு மாணவர் பேரறிவாளன், மனிதி அமைப்பின் செல்வி, திரைப்பட இயக்குநர் வ.கீரா உட்பட பலரும் பேசினர். 

பேசிய பெரும்பாலானவர்களும் ஏதோ ஒருவகையில் உணர்ச்சிவயப்பட்டவர்களாகவே இருக்க, எழுத்தாளர் தமயந்தியின் பேச்சு, போராட்டம் நடத்திவரும் ஆசிரியர்களின் பக்கம் திரும்பியது. 

அனிதா சென்னை கவிதாஞ்சலி 2

யதார்த்தமாகப் பேச்சைத் தொடங்கியவர், “ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி இவங்களுடைய புத்திசாலித்தனமே இன்டெலிஜென்சியாங்கிற ஏரியாவை தங்கள் கைக்குள்ள வச்சிக்கிறதுதான். அதற்காக என்ன..னாலும் செய்வாங்க. அவங்க நம்மள மாதிரி கதறுறது இல்ல.. நம்மளமாதிரி கண்ணீர்விடுறது இல்ல.. ஒரு அநியாயத்தைக் கண்டா நம்மளமாதிரி கைகால் நடுங்கிறது இல்ல.. திருநெல்வேலியில மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களை போலீசாரால் தாமிரபரணி நோக்கி அடித்துத்தள்ளப்பட்டபோது வேன்ல ஏறி அந்தத் தலைவர் போனதைக் கண்ணால பாத்த சாட்சி நான்.. யார் யாரைக் காப்பாற்றப் போறோம்னு தெரியல.. ஆனா தொடர்ந்து இந்த மாதிரி நடக்கிறதுக்கு நம்ம எல்லாம் இருக்கிற கட்டமைப்பு சரியில்லைங்கிறது ஒரு காரணம். நான் ஒரு ஆசிரியர்சார்ந்த குடும்பத்தில இருந்து வந்தேன். எனக்கு நல்லாத் தெரியும். ஆசிரியர் சங்கங்கள் போராடினால் இந்த நிலைமை வராது. அவங்கவங்க நெஜமாவே இந்த டி.ஏ., ட்டி.ஏ. இதுகளுக்காக மட்டும் போராடுறத விட்டுட்டு, இந்தக் கட்சிகள், கம்யூனிஸ்ட்டு கட்சிகள் தயவுசெய்து, உங்களில் ஒருத்தியா கையெடுத்துக் கேட்கிறேன்.. அனிதாக்களுக்காகப் போராடுங்கள்.. அப்படிப் போராடினால் ஒழிய.. உங்களோடு மக்கள் இணைந்தால் ஒழிய.. மக்களுடைய பிரச்னைகளுக்காக நாம கைகோத்தால் ஒழிய, நாம மறுபடியும் மறுபடியும்.. அனிதாவுக்காக இந்த வருடம் கூடினதுபோல, அடுத்த வருடம் இன்னொரு புனிதாவுக்காக கூடுறநிலைமை வந்துடக்கூடாது..!” என்றார். 

பாடகரும் செயற்பாட்டாளருமான இசையரசு அம்பேத்கர், கலைஞர் கவின்மலர் ஆகியோர் பாடல்களும் பாடினர். கவிஞர்கள் சுகிர்தராணி, நாச்சியாள் சுகந்தி ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். நாடக இயக்குநர் பிரளயன், திரைப்பட இயக்குநர் ராஜுமுருகன் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்று ஆதரவை வெளிப்படுத்தினர். 

நிகழ்வில் வாசிக்கப்பட்ட  விஜய் ஆனந்தின் கவிதை:

என்னை உதாசினப்படுத்தலாம் நீ;
எனது கோரிக்கைகளை நிராகரிக்கலாம் நீ;
எனது போராட்டத்தை ஒடுக்கலாம் நீ;
என்னை அழிக்கலாம் நீ!
இனி - நீ
என் பிணத்திற்கு 
பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். 
என்னை மறைக்க முடியாது; 
தவிர்க்கவும் முடியாது!


           ***

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement