மோடி அரசாங்கமும்... மோசமான மரணங்களும்! | Deaths that happen BJP 2014 Regime

வெளியிடப்பட்ட நேரம்: 11:46 (06/09/2017)

கடைசி தொடர்பு:11:46 (06/09/2017)

மோடி அரசாங்கமும்... மோசமான மரணங்களும்!

 

மோடி

டவுள் அமைத்த பாதையில் மனிதனால் மாற்ற முடியாத பயணம், மரணம். அந்த மரணத்தில் சில, மோடி அரசாங்கத்தால் ஏற்படுவதுதான் வேதனைக்குரிய விஷயம். ‘புதிய இந்தியாவை உருவாக்குகிறேன்’ என்று சொல்லி, தற்போதைய மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளால் மாற்றங்கள் நிகழவில்லை... மரணங்கள் மட்டுமே நிகழ்ந்திருக்கின்றன.

பண மதிப்பிழப்பின்போது...

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி இரவு, பிரதமர் மோடி கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக... '1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என்று அறிவித்தார். இந்த அறிவிப்பால், இந்திய மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போயினர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம், பணத் தட்டுப்பாட்டால் மக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம் வாசல்களிலும் நீண்ட நேரத்துக்குக் காத்துக் கிடந்தனர். பால் வாங்கவும், பயணம் செய்யவும், மருந்து வாங்கவும், திருமணம் மற்றும் வேறு எந்தச் செயல்களும் செய்ய முடியாமலும் பணம் கிடைக்காமல் மக்கள் அவதியுற்றனர். இதன் காரணமாக இந்தியாவில் 150-க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாகச் செய்திகள் வெளியாயின. இதனால், உயிரிழந்தவர்கள் எவரும் அரசியல்வாதிகளோ அல்லது ஆஸ்தியானவர்களோ அல்ல... சாதாரண ஏழை, எளிய மக்கள்தான். 'கறுப்புப் பணத்தை ஒழிப்போம்' என்கிற பெயரில் மோடியின் ஆட்சியில் நடத்தப்பட்ட நாடகத்தில்தான், இப்படி அப்பாவி மக்களின் மரணங்கள் அத்தியாயப்படுத்தப்பட்டிருக்கின்றன.

விவசாயி இறந்துகிடந்தபோது...

விவசாயிகளின் வாழ்வாதாரமே விவசாயம்தான். அப்படிப்பட்ட விவசாயிகளின் நிலையைக் கண்டுகொள்ளாத இந்த அரசாங்கம்தான், 'விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது' என்றது. ஆனால், விஜய் மல்லையா வாங்கிய கடன் மட்டும் தள்ளுபடி செய்யப்படுமாம்?! என்ன கொடுமை இது? முற்றிலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கி, கார்ப்பரேட் கம்பெனிகளை வளரச் செய்யும் மோடி அரசாங்கத்தால் உயிரைவிட்ட விவசாயிகளின் எண்ணிக்கை எத்தனையோ நூறுகளைச் சாரும். மழை நீரின்றியும், காவிரி நீரின்றியும் கருகிப்போன பயிர்களைப் பார்த்து அதே இடத்தில் உயிரைவிட்ட தமிழக விவசாயிகள் பலர். சேற்றில் கால்வைக்கும் விவசாயிகளுக்கு வாரி கொடுக்க வேண்டிய இந்த அரசாங்கம், அவர்களுடைய வயிற்றில் அடித்துக்கொண்டிருக்கிறது. 'நிவாரணம்' கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தலைநகரில் நிர்வாணமாகவும் நின்றுகாட்டிய விவசாயிகளுக்குக் கிடைத்தது என்னவோ அவமானம் மட்டும்தான்.

அன்றாடம் ஆயிரம் பேரைச் சந்திக்கும் மோடி அரசாங்கத்துக்கும், அடிக்கடி அயல்நாட்டுக்குப் பறக்கும் மோடிக்கும் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் குரல்கள் ஏன் கேட்கவில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது? சாதாரண நிலையிலிருந்து இன்று உயர்ந்த நிலைக்குச் சென்றிருக்கும் மோடிக்கு ஏன் சாதாரண மக்களின் நிலை தெரியவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது. அதிலும் குறிப்பாகப் புதிய இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் மோடியின் அரசாங்கத்தில்தான் இப்படி விவசாயிகளின் மரணங்கள் முத்திரை குத்தப்பட்டிருக்கின்றன.

மாடு

கடந்த மே மாதம் 23-ம் தேதி 'பசு, காளை, எருமை மாடுகள், ஒட்டகங்கள் ஆகியவற்றை இறைச்சிக்காகச் சந்தைகளில் வாங்கவோ, விற்கவோ கூடாது' என்று புதிய உத்தரவை மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பித்தது. இது நாடெங்கும் எதிர்ப்பலைகளைக் கிளப்பியது. இந்த மாட்டிறைச்சி தொடர்பாக வாட்ஸ் அப்பில் சர்ச்சைக்குரிய செய்திகளை அனுப்பியதாகக் காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்கள் ஒருபக்கம் என்றால், மறுபக்கம் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகவும், விற்பனை செய்ததாகவும் கொல்லப்பட்டவர்கள் பலர். பசுப் பாதுகாவலர்கள் என்கிற போர்வையில் நடமாடும் சிலரே, இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களில் மிக மோசமாகச் செயல்பட்டனர். அதிலும், குறிப்பாக வீட்டுத் தேவைக்காக மாடுகள் வளர்த்தவர்களைக்கூடக் கொன்று குவித்தனர். பெண்கள் என்றும் பாராமல் அவர்களைப் பாலியல் வன்புணர்வு செய்து பாழாக்கினர். மாடுகளை இறைச்சிக்காக விற்கக்கூடாது என்பது, மாட்டிறைச்சியை விரும்பி உண்ணுபவர்களின் உணவு உரிமையில் கை வைப்பதாகத்தானே இருக்கிறது. ஒரு தனி மனிதனின் உரிமையிலும் மோடியின் அரசாங்க அறிவிப்புகள் மரணத்தையல்லவா பதிவுசெய்கின்றன. தாம் செய்வதெல்லாம் அனைத்தும் நன்மைக்கே என்ற முறையில் செயல்பட்டு வரும் மோடியின் சாம்ராஜ்ஜியத்தில்தான் தனி மனிதர்களின் மரணங்களும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

அனிதா

கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் வகையில் நீட் தேர்வைக் கொண்டுவந்தது மத்திய அரசு. இதற்கு உயிர்ப் பலிகள் அவ்வளவாக இல்லாவிட்டாலும், அனிதா என்கிற உயிர், முதலில் பலிகடா ஆகியிருப்பது மத்திய அரசு அறிவித்த நீட் தேர்வால்தான். ''என் தந்தை சுமை தூக்குவதை நான் இழிவாகக் கருதவில்லை. ஆனால், அதே வேலையைத்தான் அவரின் அடுத்த தலைமுறையும் செய்ய வேண்டும் என்று இந்த அரசு நுணுக்கமாகச் செயல்படுகிறதே... அதற்கு எதிராகத்தான் போராடுகிறேன்... எப்படியாவது டாக்டர் சீட் கிடைக்கணும்.... அதற்காகப் போராடுவேன்'' என்று சொன்ன அனிதா, அரசியல் திமிங்கலங்களை எதிர்த்துப் போராட முடியாமலும், மருத்துவக் கனவை நிறைவேற்ற முடியாமலும் இன்று தன் உயிரையே விட்டுவிட்டார். மாணவர்களின் கனவுகளையும் சிதைக்கும் அளவுக்கு மருத்துவத்தில் நீட்டைக் கொண்டு வந்து நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் பெரும்பான்மைமிக்க மோடியின் சிம்மாசனத்தில்தான் அனிதா என்கிற தனி மனிதியின் மரணமும் உலகத்துக்கு அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. 

''ஒவ்வோர் இந்தியக் குடிமகனும் தனது செயல்பாடுகளால் புதிய இந்தியாவை உருவாக்கிட முடியும்'' என்று ஒரு கூட்டத்தின்போது சொல்லியிருந்தார் மோடி. அவரும் இந்தியக் குடிமகன் என்பதால்தான் என்னவோ தெரியவில்லை? புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கில்,  இதுபோன்ற அதிரடி அறிவிப்புகளால் இந்திய மக்களுடைய மரணங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் காரணமாகி இருக்கிறார் என்பதுதான் உண்மை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்