வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (06/09/2017)

கடைசி தொடர்பு:19:10 (06/09/2017)

தமிழகத்தில் மோடி செய்த இரண்டு பொம்மைகள்!

இ.பி.எஸ்ஸையும் ஓ.பி.எஸ்ஸையும் இணைத்துவைக்கும் கவர்னர் வித்யாசாகர் ராவ்

''என்னடா நடக்குது இங்கே...'' என்று நடிகர் வடிவேல் சொல்லும் ஒரு காமெடி வசனத்தைப்போலவே இருக்கிறது இன்றைய தமிழக அரசியல். ஜெயலலிதா மரணம் அடைந்து, இந்த ஒன்பது மாதங்களில் தமிழகத்தில் தலைசுற்றும் அளவுக்கு எத்தனையோ அரசியல் மாற்றங்கள் அரங்கேறியிருக்கின்றன. அந்த மாற்றங்களுக்கு எல்லாம் காரணம் யார்? அ.தி.மு.க-வினரை ஆட்டிவைக்கும் பிரதமர் மோடியா அல்லது அ.தி.மு.க-வை அடைகாக்க நினைக்கும் மன்னார்குடி கோஷ்டியா என்பது பற்றி அந்தக் கட்சிக்காரர்களிடமே பேசினோம்.

''இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான், தான் விளையாட...
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையைச் செய்தன தாம் விளையாட...
என்கிற திரைப்படப் பாடல் வரிகளுக்கு ஏற்றாற்போல், தமிழகத்தில் பிரதமர் மோடி, தான் விளையாடுவதற்குத் இரண்டு பொம்மைகளைச் செய்திருக்கிறார். அந்த இரண்டு பொம்மைகளும் தாங்கள் விளையாடுவதற்குத் தமிழகத்தைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன. இந்தப் பொம்மைகள் யாரென்று உங்களுக்கே... ஏன் உலகத்துக்கே தெரியும். ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பிளவுபட்ட அ.தி.மு.க., இப்போது பி.ஜே.பி மத்தியஸ்தத்துடன் ஒட்டவைக்கப்பட்டிருக்கிறது... இல்லை...இல்லை... ஒன்றுக்கும் உதவாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்றுகூடச் சொல்லலாம். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியைச் சில தினங்களுக்கு முன் 'ஊழல் ஆட்சி' என்று சொன்ன ஓ.பி.எஸ்., இன்று பதவிக்காக அவரோடு கைகோத்திருக்கிறார். தன்னை ஏற்றிவிட்ட ஏணியையே (சசிகலா குடும்பத்தை) எட்டி உதைத்திருக்கிறார் எடப்பாடி. இவர்கள் இருவரும் இணைந்த பிறகு, ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, அ.தி.மு.க-வில் கோலோச்சி வந்த மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் அக்கட்சியிலிருந்து புறந்தள்ளிவிட்டனர். எனினும், துணைப் பொதுச்செயலாளர் என்ற முறையில் டி.டி.வி.தினகரன், எடப்பாடி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பல நிர்வாகிகளைக் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து வருகிறார். 'தினகரன் நியமனமே செல்லாது என்ற நிலையில், அவரின் அறிவிப்பு எங்களைக் கட்டுப்படுத்தாது' என்று, எடப்பாடி தரப்பினர் கூறிவருகிறார்கள். இதற்கெல்லாம் யார் காரணம்...இவர்களை ஆட்டிவைப்பவர்கள் யார்? ஒருகாலத்தில் அம்மாவுடன் கூட்டணி சேர எள்ளளவும் வாய்ப்பில்லாத நிலையில் இருந்த பி.ஜே.பி-தான் இன்று, ஒட்டுமொத்த அ.தி.மு.க-வையும், தமிழக அரசையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது... அறுந்து விழுந்த நிலையிலும் ஆதரவு கொடுத்து ஆளவைத்துப் பார்க்கிறது. 

மோடி

தமிழகத்துக்குள் கொல்லைப்புறமாக வந்து பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிக்கொண்டிருக்கும் மத்திய பி.ஜே.பி. அரசின் ஆதரவினால்தான் ஓ.பி.எஸ்ஸும், இ.பி.எஸ்ஸும், தமிழகத்தில் தலைவிரித்தாடும் பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல், 'தங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்... பதவியில் இருக்கும் தங்களை யாரும் தீண்டாமல் இருக்க என்ன செய்யவேண்டும்' என்ற நோக்கிலேயே நாள்களைக் கடத்திக் கொண்டிருக்கின்றனர். ஒட்டுமொத்த அ.தி.மு.க உறுப்பினர்களின் ஆலோசனைகளைக் கேட்கிறார்களோ... இல்லையோ, தற்போது உயிராய், உறவாய் இருக்கும் பி.ஜே.பி-யின் அறிவுரைகளை ஒருநிமிடம்கூடக் கேட்கத் தவறுவதில்லை. மோடி நடத்திவரும் இந்தச் சதுரங்க விளையாட்டில் மோட்சம் பெறத் தொடங்கிவிட்டனர் அவர்கள் இருவரும். அதனால்தான் அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை; தமிழக விவசாயிகள் பிரச்னை; நெடுவாசல், கதிராமங்கலம் கிராம மக்களின் போராட்டங்கள் என நிலத்துக்குப் பாதிப்புகளைத் தரக்கூடிய எந்தவொரு பிரச்னைகளைப் பற்றியும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. 

இதுபோன்ற பிரச்னைகளை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் எதுவும் தெரியாததுபோல் மெளனம் காக்கிறார்கள். ஜெயலலிதா பாணியில் குட்டிக்கதை மூலம் உள்கட்சிக்குப் பதில் சொல்லும் எடப்பாடி, ஊர்ப் பிரச்னைக்கு எந்தக் கதையும் சொல்வதில்லை. உருப்படியாய் எந்தத் திட்டங்களையும் செயல்படுத்துவதுமில்லை. தங்கள் கட்சி சார்ந்த பிரச்னைகளைத் தீர்ப்பதற்கே எடப்பாடிக்கு நேரமில்லாதபோது, தமிழக மக்களின் பிரச்னைகளை எப்படித் தீர்ப்பார்? மூச்சுக்கு முந்நூறு தடவை 'அம்மாவின் ஆட்சி' என்றும், 'அம்மா' பெயரையும் உச்சரித்துவரும் ஆட்சியாளர்களின் உதடுகளில் எல்லாம், இன்று 'மோடி' என்கிற பெயர்தான் அசைபோட்டுக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால், அவர்களை இயக்குவது மோடிதானே?! சோனியா காந்தி இயக்கிய மன்மோகன் சிங் போலவும், ஜெயலலிதா இயக்கிய ஓ.பி.எஸ் போலவும் இப்போது ஓ.பி.எஸ்ஸும், இ.பி.எஸ்ஸும் மோடியால் இயக்கப்படுகின்றனர்'' என்று அங்கலாய்த்தனர்.

மேலும் அவர்களிடம், ''நீங்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகப் பேசுகிறீர்களா'' என்று வினவினோம். ''நாங்கள் யாருக்கும் ஆதரவாகப் பேசவில்லை. அ.தி.மு.க.-வைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் நியாயத்தைத்தான் பேசுகிறோம்'' என்றவர்கள், ''இப்படியே சென்றால், எதிர்காலத்தில் மக்கள் அ.தி.மு.க-வையும், அதனை இயக்கும் பி.ஜே.பி-யையும் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள் என்பது நிச்சயம்'' என்றனர் தீர்க்கமாக.

"நாம் ஒரு கணக்குப் போட்டால் ஆண்டவன் ஒரு கணக்குப் போடுவான்" என்பது கிராமத்துப் பழமொழி. இப்போது, தமிழகத்தில் நடைபெறும் கூத்துகளை எல்லாம் பார்க்கும்போது, மோடி ஒரு கணக்குப் போடுகிறார்; இ.பி.எஸ் - ஓ.பி.எஸ். கூட்டணி ஒரு கணக்குப் போடுகிறது. ஆனால், இவர்களின் கணக்குகள் எல்லாம், தேர்தல் வரும்போது, மக்களின் முன் பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்