Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பேனா முனையைக் கொன்றது சொந்தமா, மதவாதமா? #GauriLankeshMurder

கௌரி லங்கேஷ்

பேனா முனைத் தாக்குதலை துப்பாக்கி முனைகளைக் கொண்டு வெல்லும் அவலம் இந்திய நாட்டில் அரங்கேறியுள்ளது. அரசின் அராஜகங்களை தலைப்புச் செய்திகளாகத் தைரியமாக எழுதுபவர்களைக் கொடூரமாகக் கொலைசெய்து தலைப்புச் செய்தியாக்கும் அவலம் இந்த நாட்டில் நடைபெற்றுள்ளது.

ஆம்...பெங்களூருவில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இவர் கொல்லப்பட்டதற்குக் காரணம் குடும்பப் பகையா? இல்லை பல ஆண்டுகளாக மத்திய அரசையும், இந்துத்துவாவுக்கு எதிராக இவர் கருத்துகளை வெளியிட்டு வந்ததா என்பது பற்றிய விசாரணை நடந்து வருகிறது.

1962-ம் ஆண்டு பிறந்த கெளரி லங்கேஷ், பிரபல கவிஞரும், பத்திரிகையாளருமான லங்கேஷின் மகள். கவிதா மற்றும் இந்திரஜித் ஆகியோர் இவரது உடன் பிறந்தவர்கள். 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகையில் தன் பத்திரிக்கையாளர் பணியைத் தொடங்கினார் கௌரி. பின்னர், 'சண்டே', 'ஈநாடு' தொலைக்காட்சி என பல ஊடகங்களில் பணியாற்றி வந்தார். இவரது தந்தை லங்கேஷ் 2000-வது ஆண்டு காலமானார். அவர் நடத்தி வந்த லங்கேஷ் பத்திரிக்கையை கெளரியும், இந்திரஜித்தும் பொறுப்பேற்று நடத்தத் தொடங்கினர். ஆரம்பம் முதலே இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம் இருந்தன. 

2005-ம் ஆண்டு போலீஸைத் தாக்கிய நக்ஸலைட் பற்றிய செய்தியை பத்திரிகையில்  வெளியிட அனுமதி வழங்கினார் கௌரி. அதை முற்றிலுமாக தடுக்க முயற்சி செய்தார் இந்திரஜித். இருவருக்குமிடையே பிரச்னை பெரிதானது. அந்த பத்திரிகையின் பதிப்பாளரான இந்திரஜித், பிப்ரவரி 13-ம் தேதி, நக்ஸலைட் பற்றி கௌரி செய்தி வெளியிட்டது தவறு என குற்றம் சாட்டினார். பிப்ரவரி 14-ம் தேதி, கௌரி மீது கணினி, பிரிண்டர் மற்றும் ஸ்கேனரைத் திருடிச் சென்றதாகத் தெரிவித்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து கௌரி, தன்னை துப்பாக்கியைக் கொண்டு இந்திரஜித் மிரட்டுவதாக வழக்குத் தொடர்ந்தார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது இந்திரஜித், நக்ஸலைட்களுக்கு கௌரி ஆதரவு அளிக்கிறார்" என்று குற்றம்சாட்டினார். அதற்குப் பதிலடியாக, சமூகம் சார்ந்த பணிகளை செய்யவிடாமல் தன்னை இந்திரஜித் தடுப்பதாக கௌரி குறைகூறியிருந்தார். 

சகோதரருடன் ஏற்பட்ட கருத்துமோதலைத் தொடர்ந்து, 'கௌரி லங்கேஷ் பத்திரிக்கே' என்ற பெயரில் தனியாக பத்திரிகையைத் தொடங்கி நடத்திவந்தார் கௌரி. இந்துத்துவா திணிப்பு போன்ற பல்வேறு விஷயங்களை கடுமையாக விமர்சித்தும், வலதுசாரி கருத்துக்களை எதிர்த்தும் கருத்துகளை வெளியிட்டு வந்தார் கௌரி லங்கேஷ். இதனால், அவர் வலதுசாரி எதிர்ப்பாளராக அடையாளப்படுத்தப்பட்டார். கன்னடத்தில் பத்திரிக்கை நடத்தி வந்தாலும், மற்ற பத்திரிகைகளில் மதவாதத்துக்கு எதிரான கருத்துக்களை இவர் தொடர்ந்து எழுதிவந்தார். இதனால் பலமுறை கொலை மிரட்டல்களுக்கு ஆளாகியுள்ளார். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் நெருங்கிய நட்பில் இருந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே. சிவக்குமார் செய்த குற்றங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர் கௌரி. 

பி.ஜே.பி-யிலிருந்த பிரகாஷ் பெலவாடிவுடனான தனது 35 வருட நட்பை முறித்துக்கொண்டார். 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் நக்சலைட்களுக்கும், காங்கிரஸுக்கும் இடையேயான பேச்சுகளுக்கு மத்தியஸ்த நபராக அழைக்கப்பட்டார் கௌரி லங்கேஷ். இவர், நக்ஸலைட்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று பி.ஜே.பி-யின் குற்றம்சாட்டினர். ஆனால், கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா அந்த குற்றசாட்டை ஏற்கவில்லை. சாதிகளை எதிர்த்து, எப்போதும் அவருடைய போராட்டம் தொடர்ந்து வந்தது.

2008-ம் ஆண்டு பி.ஜே.பி தலைவர்கள் பிரசாத் ஜோஷி, உமேஷ் துஷி, ஷிவநந்த் பாட், வெங்கடேஷ் மெஸ்ரி ஆகியோருக்கு எதிராக, 'தாரோடில்லிலா பி.ஜெ.பி' என்ற தலைப்பில் கட்டுரையை வெளியிட்டார். அந்தக் கட்டுரையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு இந்த தலைவர்கள் நகை மோசடி செய்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்தத்தகவல்களைக் கொடுத்ததே, பி.ஜே.பி உறுப்பினர்கள்தான் என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, பிரசாத் ஜோஷி மற்றும் உமேஷ் துஷி இருவரும் கௌரி மீது அவதூறு வழக்குத் தொடுத்தனர்.

அதற்கு அவர், "நான் இடதுசாரிகளின் கருத்துகளை ஆதரிக்கிறேன் என்பதற்காகவே என் மீது பழி சுமத்துகிறார்கள், இந்தத் தகவல்கள் மற்ற பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. அதை அவர்கள் எதிர்க்கவில்லை" என்று கூறினார். 2016-ம் ஆண்டு இந்தக் குற்றசாட்டை நிரூப்பிக்கவில்லை என்பதற்காக கௌரிக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆறு மாத காலம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால், அவர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். 

இந்துத்துவாவுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வந்தது, ஆளுங்கட்சியுடனான பிரச்னை, இப்படி பல பிரச்னைகளில் சிக்கிக்கொண்டாலும் நேர்மையான பத்திரிகையாளராக வலம் வந்தார், பத்திரிகை ஆசிரியராகவும் வலம் வந்த கௌரி லங்கேஷை ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக்கொன்றனர். அவர் உடலில் ஏழு தோட்டாக்கள் பாய்ந்தன. குடும்பப் பிரச்னைதான் அவரைக் கொன்றதா? அவரின் எழுத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களால் கௌரி கொல்லப்பட்டாரா என்பது மர்மமாகவே உள்ளது.. 

வெளிப்படையாக கருத்துகளை வெளியிடும் பத்திரிகையாளர்களின் உயிருக்கே உத்தரவாதமில்லாத நிலைதான் நீடிக்கிறது. பேச்சுரிமையும், எழுத்துரிமையும் அதிகம் உள்ள நாடு என மார்தட்டிக் கொள்ளும் இந்தியாவில்தான் கௌரி லங்கேஷ் போன்ற பத்திரிகையாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கௌரியின் கொலை ஒரு புரட்சிக்கு வழிவகுக்கட்டும். நீங்கள் விதைத்த விதை விருட்சமாகட்டும்....

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ

Advertisement