வெளியிடப்பட்ட நேரம்: 19:16 (07/09/2017)

கடைசி தொடர்பு:19:16 (07/09/2017)

மாதரசன் பட்டணம், சதிரானபட்டணம், புதுப்பட்டணம், நீலகங்கரையன் பட்டணம் - இதெல்லாம் எங்கே இருக்கு?

'ல்வெட்டுகள் வரலாற்றின் ஆன்மா' என்று சொன்னால்,  மிகையல்ல. தமிழர்களின் தொன்மையான வரலாற்றுக்குச் சான்றாக இருப்பவை  கல்வெட்டுகள் தான். எங்கெல்லாம் தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்தார்களோ, அங்கெல்லாம் தங்களது நிர்வாக ரீதியான செயல்பாடுகளை கல்வெட்டுகளாகவே செதுக்கி வைத்திருக்கிறார்கள். 

மாதரசன் பட்டணம் பற்றிய கல்வெட்டுகள்

இந்தியாவில் இதுவரை கிடைத்துள்ள 1,00,000 கல்வெட்டுகளில், 60,000 கல்வெட்டுகள் தமிழ் எழுத்துருக்களைக் கொண்டவை. இவற்றில் பெரும்பாலான கல்வெட்டுகள்  கோயில்கள் தான் கிடைத்திருக்கின்றன. கோயில்களுக்கும் கல்வெட்டுகளுக்கும் ஒரு நெருங்கிய பிணைப்பு உண்டு. காரணம், கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி வரலாற்றுக் கூடங்களாகவும்  இருந்துள்ளன.  

அரசர்கள் காலத்தில், பெரும்பாலான அரச நடவடிக்கைகள்   கோயில்களில்  கல்வெட்டுக்களாக செதுக்கி வைக்கப்பட்டன.  அந்தக் கல்வெட்டுகளே நம் தொன்மையான வரலாற்றுக்கான ஆதாரங்களாக இருக்கின்றன.  பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறைகள், கலை, பண்பாட்டு, கலாச்சார விழுமியங்கள்  அனைத்தும் நமக்குக் கிடைத்த கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன. 

தேர்தல் முறையில் உலகுக்கே முன்னோடியாக இருந்தவர்கள் தமிழர்கள் தான் என்பதற்கு உத்திரமேரூர் கல்வெட்டுகளே சாட்சி. தேர்தல் எப்படி நடக்க வேண்டும், தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள் யார் என்றெல்லாம் கல்வெட்டுகளில் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.  தங்கள் வளங்கள் அனைத்தையும் இழந்த தமிழ்ச் சமூகத்துக்கு வரலாறுதான் இளைப்பாறுதல் தந்து கொஞ்சம் கொஞ்சமாக முன் நகர்த்திக் கொண்டிருக்கிறது. 

தமிழகத்தின் தலைநகராக உள்ள சென்னை பற்றி பலர் தவறான கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள். இந்நகரத்தின் வரலாறு ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பிறகே உருவாகிறது என்று சிலர் எழுதுகிறார்கள். ஆனால், சமீபத்தில் கிடைத்த கல்வெட்டுத் தகவல்படி இந்நகரம் 16 லட்சம் வருடங்களுக்கு முற்பட்டது என்று தெரியவந்துள்ளது.

பெண்ணேஸ்வரர் கோயில்

சென்னையின் பழமை பற்றி ஆய்வு செய்துவரும்  தொல்லியல் ஆய்வாளரும், தஞ்சாவூர்  தமிழ்ப் பல்கலைக்கழக தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜவேல், " தற்போதைய தலைமைச் செயலகம் உள்ள பகுதி மட்டுமே 1639 ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில்பேராசிரியர் ராஜவேலு உருவாக்கப்பட்டிருக்கிறது. இது சென்னப்ப நாயக்கரால் ஆங்கிலேயருக்கு வழங்கப்பட்ட பகுதி என்பதால் இந்தப் பெயரால் அழைக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாக பல பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒன்று மாதரசன் பட்டணம்.." என்கிறார் . அதற்கு சான்றாக ஒரு கல்வெட்டை முன்வைக்கிறார் அவர். 

"கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே, பெண்ணையாற்று மடம் என்ற ஊர் உள்ளது. இங்கே பெண்ணேஸ்வரர் ஆலயம் ஒன்றும்  இருக்கிறது.  ஆற்றுக்கும், ஆலயத்துக்கும் நடுப்பகுதியில் இருக்கும் குன்றின் அடிவாரத்தில் சிலக் கல்வெட்டுக்கள்  கிடைத்துள்ளன. அவை,  1367 ஜூலை 21 - ம் தேதி விஜயநகர மன்னன் கம்பண்ண உடையாரால் உருவாக்கப்பட்டவை.  அதில் 'மாதரசன் பட்டண'த்தைப் பற்றிய ஏராளமான தகவல்கள் உள்ளன.

சென்னை, ஒரு காலத்தில் நெய்தலும் மருதமும் கலந்த நிலப்பகுதியாக  இருந்துள்ளது. மாதரசன் பட்டணம், சதிரானபட்டணம் , புதுப்பட்டணம், நீலகங்கரையன் பட்டணம், கோவளம் மற்றும் பல  பெயர்களிலும் அழைக்கப்பட்டிருக்கிறது. 

கல்வெட்டு எழுத்துக்கள்

இன்றைய சென்னைத் துறைமுகத்துக்கு அருகில் உள்ள ராயபுரம் பகுதிதான் மாதரசன் பட்டணம். இது மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகமாக இருந்துள்ளது.  மாதரசன் பட்டணம்தான் நாளடைவில் மதராசப்பட்டணம் என்றும் பிறகு 'மெட்ராஸ்' என்றும் ஆனது .  இது, போர்ச்சுக்கீசிய மன்னரின் பெயர் என்றும், அரேபியக் கல்விச்சாலைகள் இருந்த பகுதி என்றும், போர்ச்சுக்கீசிய மாலுமியின் பெயர் என்றும் பல விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. இவையனைத்தும் உண்மை அல்ல. இது ஓர் அரசனின் பெயர்.

ராயபுரம் பகுதியைத் தலைநகராகக் கொண்ட பல பாக்கங்கள் இருந்துள்ளன.  மதராசப்பட்டணத்தைச் சுற்றி பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்கள் இருந்திருக்கின்றன. திருவல்லிக்கேணி,  திருவான்மியூர், திருவெற்றியூர், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, வளசரவாக்கம் , வேளச்சேரி, தரமணி, கோடம்பாகம், புரசைவாக்கம், எழுமூர், அயன்புரம் போன்ற  பெயர்களே கல்வெட்டுக்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. 

நீர் நிலைகள் ஒட்டிய பகுதிகள் அனைத்தும் பாக்கம் என்றும், ராணுவத் தளவாடங்கள் இருந்த பகுதி பாடி என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.

பெண்ணையாறு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டுக்கு வந்த கடற்பயணி தாலமி, மயிலாப்பூர்  துறைமுகத்தைப் பற்றித் தனது பயணக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் உள்ள ஊர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகால வரலாறு உள்ளது. ஆனால், நாம் திருவல்லிக்கேணியை 'ட்ரிப்பிளிகேன்' என்றும், எழும்பூரை 'எக்மோர்' என்றும் அழைத்து வரலாற்றை அழித்து வருகிறோம். வரலாற்றைக் காக்காவிட்டாலும் அழிக்கும் வேலையையாவது செய்யாமலிருப்பது நல்லது" 

ஆதங்கம் தொனிக்க சொல்கிறார்  ராஜவேல்! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்