Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

கரை ஒதுங்கிய திமிங்கிலங்கள்... விண்வெளி வரை நீளும் காரணங்கள்!

ஸ்பெர்ம் திமிங்கலங்கள்

வானை அளப்பது பறவைகள். கடலை அளப்பது திமிங்கலங்கள். இரண்டுக்கும் என்ன ஒற்றுமை இருந்து விடப் போகிறது? 

“பறவைகள் எவ்வாறு ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குப் பறந்து செல்கிறது?”

“கண்களால் பார்த்து…”

“இல்லை... இல்லை… நீண்ட தூரம் எப்படிச் சரியாக சென்று திரும்புகிறது?”

“காந்தப்புலம்! பறவையின் மூளையில் இருக்கும் அயனிகள் பூமியின் காந்தப்புலத்துடன் தன்னை நேர்படுத்திக் கொள்கிறது.”

“The Core” என்ற ஆங்கிலப் படத்தில் வரும் காட்சி இது. பூமியின் அழிவைச் சுற்றி மையப்படுத்தப்பட்டிருக்கும் இதில், புறாக்கள் உள்ளிட்ட பறவைகள் தொடர்ந்து வித்தியாசமான செயல்களைச் செய்யத் தொடங்கும். பறக்க முடியாமல், வழி தெரியாமல் சிக்கித் திணறி இறந்து விடும். காரணம், பூமியின் காந்த உள்ளகம் (Magnetic Core) பாதிப்படைந்து இருக்கும். அதை எப்படிச் சரி செய்கிறார்கள் என்பதே கதை.

பறவைகளைப் போலவே, ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் (Sperm Whales) எனப்படும் ஓர் இனமும், இடம்பெயர்தலுக்கும், நெடும் பயணங்களுக்கும் பூமியின் காந்தப்புலத்தையே நம்பி இருக்கிறது. எளிமையாக விளக்க வேண்டுமானால், நமக்கு GPS எப்படியோ அப்படித்தான் திமிங்கலங்களுக்குக் காந்தப்புலன்.

கரை ஒதுங்கிய திமிங்கிலம்

கடந்த 2016ஆம் வருடம், வட கடலில் (North sea) இந்த ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் பல இறந்த நிலையில் கரை ஒதுங்கின. வந்த அலையில், Spermaceti எனப்படும் திமிங்கிலத்திலை எண்ணெய்க் கொழுப்பும் நிறைய இருந்தது. அதாவது, ஒதுங்கிய பிணங்களை விட அதிக அளவில் திமிங்கிலங்கள் இறந்துள்ளன என்று சொல்லாமல் சொல்லின அந்த அலைகள். இதற்கான காரணம் என்னவென்று யாருக்கும் அப்போது தெரியவில்லை. ஏதோ சில விஷமிகள் இரக்கம் இல்லாமல் செய்த வேலையாக இருக்கலாம் என்று அஞ்சப்பட்டது. ஆனால், இப்போது அவை இயற்கை மரணங்கள் மட்டுமல்ல, இயற்கையே செய்த மரணங்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் இறப்பிற்கான காரணம் அக்கடலில் இருந்து பல கோடி கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் விண்வெளியில் நடந்த ஒரு நிகழ்வுதான் என்று கண்டுபிடித்துள்ளனர்.

வடமுனைச் சுடரொளி (Northern Lights) பற்றி கேள்விப்பட்டிருக்கீர்களா? அதாங்க அரோரா (Aurora). பொதுவாக வடக்கு அல்லது தெற்கு காந்தத் துருவத்திற்கு அருகே வானத்தில் சிவப்பு மற்றும் பச்சை நிறம் கலந்த ஒளிகள் தோன்றும். இது ஓர் இயற்கையான மின்சார நிகழ்வு. சூரியன் சில சமயங்களில் அதிக அளவில் சூரிய புயல்களை (Solar Storms) உருவாக்கும். இந்த விண்வெளி வானிலை மாற்றத்தால் சூரியனில் இருந்து வெளியேறும் இந்தக் கதிர்கள் மின்னூட்டத் துகள்களாக (Charged Particles) இருக்கும். இவை பூமியின் வட மற்றும் தெற்கு துருவங்களைக் கடக்கும் போது, பூமியின் காந்த மண்டலத்தில் (Magnetosphere) சில பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்தப் பாதிப்புகளின் வெளிப்பாடுதான் அரோரா பொரியலிஸ் என்ற ஒளியால் தீட்டப்பட்ட இந்த விந்தையான ஓவியம். (படம் கீழே)

அரோரா பொரியலிஸ்

இதுவரை சூரியப் புயல் இந்த அதிசயத்தை மட்டும்தான் நிகழ்த்துகிறது என்று நினைத்திருந்தனர் விஞ்ஞானிகள். ஆனால், சமீபத்திய ஆராய்ச்சியின்படி, இது தோன்றும் போதெல்லாம் பூமியின் காந்தப் புலன்களில் நிலையற்ற தன்மை, அதாவது சிறிய அளவில் மாறுதல்களோ, தடங்கல்களோ ஏற்படுகின்றன. இப்படி ஏற்படும் போதெல்லாம் பூமியின் காந்தப் புலன்களையே நம்பிக் கொண்டு நெடும்பயணம் மேற்கொள்ளும் ஸ்பெர்ம் திமிங்கிலங்களும் பாதிக்கப்படுகின்றன. வழி தெரியாமல் தட்டுத் தடுமாறி ஆபத்தில் மாட்டிக் கொள்கின்றன. இதனால்தான், சென்ற வருடம் அவ்வளவு திமிங்கலங்கள் இறந்திருக்கக் கூடும் என்று விளக்கம் அளித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

காந்த மண்டலத்தில் உள்ள தடைகளால், திமிங்கிலங்கள் பெரும் குழப்பம் அடைகின்றன. பாறைகள் மற்றும் தடைகளில் மோதிக் கொள்கின்றன. சூரியப் புயலின் வீரியம் அதிகமாகும் போது, புறாக்கள் உள்ளிட்ட பறவைகளும் நிச்சயம் பாதிக்கப்படும். வடமுனைச் சுடரொளிக்கும், விண்வெளி வானிலைக்கும், இந்தத் திமிங்கில இறப்பிற்கும் மும்முனை தொடர்பு இருக்கும் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். இது தசாவதார கேயாஸ் தியரி (Chaos Theory) கதையைப் போலதான். பத்துக் கதாப்பாத்திரங்களின் வேலைகளையும் இங்கு இயற்கையே தனி ஆளாகச் செய்து விடுகிறது என்பதுதான் வித்தியாசம். இதைத் தடுத்து நிறுத்த அந்தக் கொதிக்கும் சூரியனால் மட்டுமே முடியும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்
Advertisement
Advertisement

MUST READ

Advertisement