Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“ஆட்சியும் கட்சியும் எனக்கே சொந்தம்!”- தினகரனின் 'திடுக்' திட்டம்

.தி.மு.க-வுக்குள் நடக்கும் ஆடு-புலி ஆட்டத்தின் வேகமும், பரபரப்பும் கூடியுள்ளது. ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இடையிலான 'தர்மயுத்தம்', கழகத்தின் நலனுக்காக சிலவித சமரசங்களோடு முடிந்துவிடவே (அப்படித்தான் அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்), 'இணைந்த கைகளுக்கு' எதிராக தனது புதிய தர்மயுத்தத்தை தொடங்கியுள்ளார் டி.டி.வி. தினகரன். (இவரும் இப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்). இருதரப்புமே 'அ.தி.மு.க-வின் நலனுக்காகவே முயற்சி செய்கிறோம்' என்று, அவரவர் ஆதரவு எம்.எல்.ஏ-க்களிடம் தெரிவித்து வருகிறார்கள்.

ஆளுநருடன் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்

'கலைகிறார்கள்... மீண்டும் கூடிப் பேசுகிறார்கள்'.... 'மீண்டும் கலைகிறார்கள்'... வானமே இடிந்து விழுந்தாலென்ன? பேருந்து நிலையங்களில் 'கூரை' விழுந்தாலென்ன?',  கழகத்தின் நலனுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், 'தங்கள் பக்கம் உள்ள எம்.எல்.ஏ-க்கள் எதிர் அணிக்குத் தாவி விடக் கூடாது' என்ற அடிப்படையிலேயே பகீரத முயற்சிகளை 'நீட்'-டிக் கொண்டே போகிறார்கள். அதன் ஒருகட்டமாக தனது அரசின் பலத்தையும், ஆதரவாளர்களின் பலத்தையும் காட்டும்விதமாக செப்டம்பர் 5-ம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்தக் கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே ஐக்கியமானார்கள், என்றாலும் அரசின் பெரும்பான்மைக்குத் தேவையான எம்.எல்.ஏ-க்களின் பலமாக அது இருக்கவில்லை.

இந்த நிலையில் தினகரன் அணியில் இருந்த எம்.எல்.ஏ ஜக்கையனை தன் பக்கம் இழுத்தார் எடப்பாடி பழனிசாமி. 'இதற்கெல்லாம் நான் அசந்தவன் இல்லை' என்பதைப்போல தினகரன் தன் பங்குக்குத் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து, மேலும் மூன்று எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு வாபஸ் கடிதத்தை வழங்கினார். தினகரனின் அடையார் வீட்டிலிருந்து ஆளுநர் மாளிகை வரையிலான அவரின் பயணத்தை ஜெயா தொலைக்காட்சி நேரடியாகக் காட்சிப்படுத்தியது. ராஜ்பவன் அருகே குழுமியிருந்த தினகரன் ஆதரவாளர்கள், 'அ..தி.மு.க-வின் சொத்தே', 'கழகத்தை மீட்க வந்த நாயகரே' என்றெல்லாம் வாழ்த்தொலிகளை முழங்கிக் கொண்டிருக்க, மறுபுறம் 'கழகத்தைக் காப்போம்! ஆட்சியை மீட்போம்!' என்ற பதாகைகளைச் சுமந்து ஏராளமான தொண்டர்கள் கூடியிருந்தனர். ஏழு எம்.பி-க்கள், மூன்று எம்.எல்.ஏ-க்களுடன் ஆளுநரைச் சந்தித்த தினகரன், 'சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்ற கோரிக்கையை ஆளுநரிடம் பிரதானமாக வலியுறுத்திவிட்டுத் திரும்பினார். இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ஜக்கையன் குறித்த கேள்விக்குப் பதிலளித்த தினகரன், "ஒருவர் (ஜக்கையன்) போனால் என்ன, அதான் மூன்று பேர் ஆதரவாக வந்துள்ளனரே"  என்றார். தொடர்ந்து அவர், 'ஜக்கையன் காலையில் என்னிடம் போனில் பேசினார். எடப்பாடி அணியினர் அவரை மிரட்டுவதாகக் கூறினார். ஆனால், திடீரென்று அந்த அணிக்குச் சென்றுள்ளார். எனவே, குதிரைப்பேரங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. தமிழக மக்களுக்கு யார் நல்லவர் என்பது தெரியும். மிரட்டல்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது" என்றார்.

தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி

இப்படி சளைக்காமல் அனைத்துக் கேள்விகளுக்கும் அவர் பதிலடி கொடுத்து வருவதன் பின்னணியில் "சில முக்கியமான நிகழ்வுகள் உண்டு" என்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள்.

"எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஆட்சியைப் பங்கு போட்டுக்கொண்டுள்ள நிலையில், தினகரனின் முழு கவனமும் கட்சியைக் கைப்பற்றுவதில்தான் உள்ளது" என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். தன்னால் பதவியில் அமர்த்தப்பட்ட அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு 'தாராள' கவனிப்புகளைச் செய்து வருகிறாராம் தினகரன். "அந்தப் பக்கம் எங்களுடைய ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள்' என்று தினகரன் கூறுவது எம்.எல்.ஏ-க்களை மட்டுமல்ல; மாவட்டச் செயலாளர்களையும்தான். செப்டம்பர் 12-ம் தேதி சென்னை வானகரத்தில் எடப்பாடி அணி சார்பில் அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் அப்போதும் சிறப்பாகச் செயல்படுவார்கள். இதற்காக, தன்னை ஆதரிக்கும் மாவட்டச் செயலாளர்களை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் தினகரன். அதேநேரம் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ-க்களை தன்வசமாக்கவும் சில முக்கியப் பிரமுகர்கள் மூலம் முயற்சிகளைத் தொடர்ந்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி சமூகத்தைச் சாராத, பிற சமூக எம்.எல்.ஏ-க்களை குறிவைத்து அந்த ஸ்லீப்பர்செல்களைச் செயல்பட முடுக்கி விட்டுள்ளார். குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் மாவட்டத்தில் அவர் சாராத மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களை குறி வைக்கிறார். பொறுத்திருந்து பாருங்க தினகரன் பக்கம் பலம் கூடும். எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை இழப்பார்" என்கின்றனர் அவர்கள் புன்னகையோடு.

'நீட்' தேர்வுக்கு விலக்கு தொடங்கி 'டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்துங்கள்' என்பதுவரை மக்கள் தங்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காக நாள்தோறும் போராடிக்கொண்டிருக்க, அ.தி.மு.க-வுக்குள்ளோ தங்கள் தலைமையையும், ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்ளும் வகையிலான 'தர்மயுத்தங்கள்'-தான் தீவிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ

Advertisement