Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போன மாசம் பிறந்த குழந்தை... 27 மிஸ்டு கால்கள்! - இடிந்த பேருந்து நிலையத்தில் நொறுங்கிய இதயங்கள்

கோவை சோமனூர் பேருந்து நிலையம்

உதடுகள் துடிக்க.. கண்கள் தவிக்க.. முகமெல்லாம் வியர்வை வழிய.. கூட்டத்தைக் கிழித்துக்கொண்டு ஓடி வந்தார்  அந்தப் பெண். ஏற்கெனவே பதற்றத்தில் இருந்த  மக்களிடம், ''என் அண்ணன் எங்கே... என் அண்ணன் எங்கே...''  என்று  தனக்குத்தானே கேட்டுக்கொண்டு ஓடிவந்த அந்தப் பெண்ணின் தவிப்பு எல்லோரையும் நடுநடுங்கச் செய்துவிட்டது.  அந்தப் பெண்ணோட அண்ணனும் இடிபாடுகளுக்குள்ள மாட்டிக்கிட்டாரா... என்ன ஆச்சி... ஏதாவது விபரீதமா... என்று ஆளாளுக்குப் பதற்றமடைந்தனர். ஆம்புலன்ஸ் சத்தம்... ஜனங்களின் கூச்சல்.. போலீஸ்.. பொக்லைன்...  என எல்லாம் கலந்த அந்த  நொடிப்பொழுது ரணத்திலும் ரணம்.  ''உன் அண்ணனுக்கு ஒண்ணும் ஆகலம்மா..  அங்கதான் இருக்காரு'' என்றபடி அந்தப் பெண்ணை நோக்கி ஓடிவந்தார் பச்சைச் சட்டை போட்ட ஒருவர். சட்டென அந்தப் பெண்ணின்  முகம் மலர்ந்தது.  தன் அண்ணனைப் பார்த்து  கட்டிப்பிடுத்து, ''அண்ணே... இவ்வளவு நேரம் எனக்கு உயிரே இல்லண்ணே... இப்பதாண்ணே உயிரே வந்துச்சி'' என்று அந்தப் பெண் அழ... ''எனக்கு ஒண்ணும் ஆகலம்மா'' என்று அணைத்துக்கொண்டு ஆசுவாசப்படுத்தினார் அவர் அண்ணன். 

இது வேறு எங்கும் அல்ல... நேற்று இடிந்து விழுந்து ஐந்து பேரின் உயிர்களைக் காவு வாங்கிய கோயம்புத்தூரை அடுத்துள்ள சோமனூர் பேருந்து நிலையத்தில் கண்ட காட்சிதான் அது.

கோவை சோமனுார் பேருந்துநிலையம்

கோவை சோமனூர் பேருந்து நிலையத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான மக்கள் வேடிக்கை பார்த்தார்கள்.  உள்ளே கட்டிடம் விழுந்து கிடந்தது. ''ஏழுபேர் செத்துட்டாங்க, எட்டுப்பேர் செத்துட்டாங்க'' என்று ஆளாளுக்கு ஒரு கணக்குச் சொல்லி வருந்திக் கொண்டிருந்தார்கள். ''இந்த பஸ்ஸ்டாண்டு கட்டி பதினைஞ்சு வருஷம் இருக்கும்ங்க.. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் இதைப் புதுப்பிச்சு பெயின்ட் எல்லாம் அடிச்சாங்க. பாக்குறதுக்கு நல்லாதான் இருந்துச்சி. ஆனா,  விழுந்ததுக்கு அப்புறம்தான் அதோட லட்சணம் தெரியுது. லட்சம் லட்சமா செலவு பண்ணி எப்படிக் கட்டியிருக்கானுங்க பாருங்க? போன உயிருக்கெல்லாம் இழப்பீடு கொடுக்குறோம்னு சமாதானம் பேசிட்டுக் கிளம்பிடுவானுங்க. கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாதவனுங்க. இடிஞ்சு விழுந்த கட்டடத்துல போய்ப் பாருங்க... அதுல சிமெண்ட் இருக்கான்னே தெரியலை. அதுல கலந்துருக்க மணல் என்ன மணலுன்னே தெரியலை. கமிஷனுக்காக  ஏதுமறியாத அப்பாவி ஜனங்களைக் கொன்னுட்டு கொள்ளை அடிச்ச காசுல வாழ்வன்றவனெல்லாம் நல்லா இருக்கானுங்க. அவனுங்களை இந்த  ஆண்டவன்தான் தண்டிக்கனும்''  என்று ஒவ்வொருவரும் இந்த அசம்பாவிதத்துக்குக் காரணமான முகம்தெரியாதவர்களைத் திட்டிக்கொண்டிருந்தனர். 

கோவை சோமனுார் பேருந்துநிலையம்

ஓர் இடத்தில் சிதறி உறைந்திருந்த ரத்தமும், துண்டாகிக் கிடந்த  யாரோ ஒரு பெண்ணுடைய காலும் என அங்குப் பார்த்த ஒவ்வொரு காட்சியும் காண்போரின் உள்ளத்தை நடுக்கம் கொள்ளச் செய்தன. 

பேருந்து நிலைய கூரை இடிந்து விழுந்தபோது... அங்கிருந்தவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியவருமான அபிபுல்லாஹ் என்ற கண்டக்டர், 'தான் பிழைத்ததற்காகச் சந்தோஷப்படுவதா.... இல்லை, தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த கண்டக்டர் சிவக்குமார் இறந்துபோனதை நினைத்து வருந்துவதா' என்று புரியாத ஒரு மனநிலையில் இருந்தார். 

அவரை ஆசுவாசப்படுத்திப் பேசினோம், “நான் திருப்பூர் டு சோமனூர் ரூட்ல  5-ம் நம்பர் பஸ்ல கண்டக்டரா இருக்கேன். எனக்கு 1.20-க்கு டியூட்டி டைம். ஒரு மணிக்கே வந்துட்டேன். சிவக்குமாருக்கு 1.15-க்கு டைம்.  அவரும் நானும்தான் பஸ்ஸ்டாண்டுல இருந்த சிமெண்ட் பெஞ்ச்ல உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தோம். நான் உள்பக்கமா உட்கார்ந்திருந்தேன். சிவக்குமார் வெளிபக்கமா உட்கார்ந்திருந்தார்.  அப்ப, முதல்ல சின்னச்சின்ன சிமெண்ட் துகள்கள்  விழ ஆரம்பிச்சது. என்னனு பாக்குறதுக்காக வெளியில போனார் சிவக்குமார். அதுக்குள்ள 'டமால்'னு ஒரே சத்தம்.  என்ன நடந்துச்சுன்னே தெரியலை.  நான், பின்பக்கம் இருந்த சந்து வழியா தெறிச்சு ஓடிட்டேன்.

சுதாரிச்சி திரும்பி வந்து பார்த்தா  பஸ்ஸ்டாண்ட் முன்னாடி இருந்த மொத்த ஷெட்டும் கீழே விழுந்துடுச்சி. எல்லாரும் ஓ...னு கத்துறாங்க. யாருக்கு என்ன ஆச்சின்னே தெரியலை. போலீஸ்லாம் வந்து அப்புறப்படுத்துன பிறகுதான் சிவக்குமார்  செத்துட்டாருங்கிற விஷயம் தெரிஞ்சது. அவருக்கு சொந்த ஊரு மதுரை பக்கம். ஆறேழு வருஷமா குழந்தை இல்லாம இருந்தவருக்கு போன மாசம்தான் ஆண்குழந்தை பொறந்துச்சி. ரொம்ப சந்தோஷமா இருந்தார். என்கூடப் பேசிகிட்டு இருந்தவரு, நிமிஷத்துல செத்துப்போயிட்டாருங்கிறதை இப்பவரைக்கும் என்னால நம்பவே முடியலை'' என்றவர், ''இங்க பாருங்க... சிவக்குமாருடைய செல்போன்கூட என்கிட்டத்தான் இருக்கு. எனக்கு இதை எப்படி ஓப்பன் பண்றதுனு தெரியலை'' என்றபடி எடுத்துக்காட்டினார். அதை நாம் வாங்கிப் பார்த்தபோது,  அவருடைய அம்மாவிடமிருந்து 27 கால்கள் வந்து.. மிஸ்டு கால்களாகியிருந்தன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement