வெளியிடப்பட்ட நேரம்: 11:29 (09/09/2017)

கடைசி தொடர்பு:11:29 (09/09/2017)

நாள்தோறும் அணி மாறும் எம்.எல்.ஏ-க்கள்... அ.தி.மு.க அணிகளின் இன்றைய நிலவரம்!

எடப்பாடி பழனிசாமி

நாளிதழ்களில் எந்த ஒரு செய்தியைப் படிப்பதையும் விட அ.தி.மு.க அணியில் எந்த எம்.எல்.ஏ எங்கே இருக்கிறார் என்பதைப் படிப்பதுதான் சுவாரஸ்யமாக இருக்கிறது. தினந்தோறும் ஏறி, இறங்கும் தங்கத்தின் விலையைப் போல தினகரன் அணியில் இருந்து எடப்பாடி அணிக்குச் செல்வதும், எடப்பாடி அணியில் இருந்து தினகரன் அணிக்குச் செல்வதுமாக இருக்கிறார்கள்.

கூவத்தூர் வாசம்...

ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பின்னர், அவருக்கு 10 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்தனர்.இதனால், மேலும் சில எம்.எல்.ஏ-க்கள் ஓ.பி.எஸ் பக்கம் சென்று விடுவார்கள் என்ற அச்சத்தில் கூவத்தூரில் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அ.தி.மு.க-வின் புதிய சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி முதல்வராக  பிப்ரவரி மாதம் பதவி ஏற்றார். இதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி 18-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில்,  எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரினார். அன்றைய தினம்தான் கூவத்தூரில் இருந்து எம்.எல்.ஏ-க்கள் சட்டப்பேரவைக்கு அழைத்து வரப்பட்டனர்.

முதல் நம்பிக்கை வாக்கெடுப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, தி.மு.க தரப்பில், ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் அல்லது வேறு ஒரு நாளில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதை சபாநாயகர் தனபால் ஏற்கவில்லை. எனவே, தி.மு.க-வினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட சட்டப்பேரவை மாலை மூன்று மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது, அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ-க்கள் எத்தனை பேர் என்று எண்ணப்பட்டனர். 122 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு தெரிவித்ததாக சபாநாயகர் தெரிவித்தார்.  ஓ.பன்னீர் செல்வம் அணியினர் 11 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.

டிடிவி தினகரன்

தினகரனுக்கு ஆதரவு

இப்போது மீண்டும் அதே போன்றதொரு சூழல் தமிழக அரசியலில் எழுந்துள்ளது. எடப்பாடி அணிக்கு வந்திருக்கும் 19- எம்.எல்.ஏ-க்கள்,  பாண்டிச்சேரி அழைத்துச் சென்று சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இப்போது அங்கிருந்து அவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடைசி நேரத்தில் எம்.எல்.ஏ ஜக்கையன் மீண்டும் எடப்பாடி அணிப்பக்கம் போய்விட்டார்.  கடைசி கட்ட நிலவரப்படி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கருணாஸ் உள்ளிட்ட மூன்று பேர்  இப்போது தினகரனுக்கு ஆதரவு தெவித்துள்ளனர். எனவே, 21 பேர் தினகரன் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.  

சில நாட்களுக்கு முன்பு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் மனுக்கொடுத்தபோது, அந்த மனுவை வித்யாசாகர் கண்டு கொள்ளவில்லை. பின்னர் மீண்டும் கடந்த 7-ம் தேதி ஆளுநரை, டி.டி.வி தினகரன், மற்றும் அவரை ஆதரிக்கும் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் சந்தித்தனர். அப்போது ஆளுநரிடம் அளிக்கப்பட்ட  மனுவில் சில நீதிமன்றத் தீர்பபுகளும், பிற மாநிலங்களில் இத்தகைய சூழல் எழுந்தபோது ஆளுநர் எப்படி செயல்பட்டார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது ஆளுனர் உறுதியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொன்னார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், இந்த முறை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் கவிழ்ந்து விடுவார்கள் என்று கூறினார்.

சஸ்பென்ட் குறித்த சஸ்பென்ஸ்

மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் எட்டபாடி அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என்று ஆளுநர் இந்த முறை உத்தரவிடுவார் என்று சொல்லப்படுகிறது. இப்போது எடப்பாடி பக்கம் சபாநாயகரையும் சேர்த்து 111 பேர் உள்ளனர். இந்தச் சூழலில் அவையில் இருப்பவர்களை வைத்துப் பெரும்பான்மையை நிரூபிக்கலாம் என்று எடப்பாடி, சபாநாயகர் தனபால் ஆகியோர் ஆலோசனை செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதாவது, குட்கா விவகாரத்தில் தி.மு.க-எம்.எல்.ஏ-க்கள் 21 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதே போல டி.டி.வி அணியில் இருக்கும் 19- பேருக்கும் விளக்கம் கேட்டு தனபால் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். மேலும் 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப் படலாம் என்று தெரிகிறது. இவர்களையும் டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்றும் எடப்பாடி தரப்பில் திட்டமிட்டிருப்பதாகச்  சொல்கிறார்கள்.  இப்படி 21 பேரையும் (நோட்டீஸ் அனுப்பப்பட்ட ஜக்கையன் மீண்டும் எடப்பாடி பக்கம் வந்து விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை இருக்காது) சஸ்பென்ட் செய்வதற்கும் வாய்ப்புள்ளது. குட்கா விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 89 பேரும் சட்டப்பேரவையில் பங்கேற்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

தீ எரிவதை வேடிக்கை பார்க்கிறார்...

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்சிடம் பேசினோம். "இப்போது இருக்கும் கவர்னர் அரசியல் சாசனப் படி தமது கடமையை சரி வர செய்யவில்லை. கவர்னர் என்பவர் தீயணைப்பு நிலையமாக இருக்கவேண்டும். ஆனால், அவர் தீ எரிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார். இப்போது தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் விவகாரம் உயர் நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே, இதில் சபாநாயகர் முடிவு எடுக்க முடியாது.

இன்னொரு புறம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டால், வேறு ஏதாவது காரணங்களைச் சொல்லி தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட எதிர்கட்சி எம்.எல்.ஏ-க்களை அவைக்கு வர விடாமல் தடுத்தால், அவையில் எடப்பாடி அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் மட்டும்தான் இருப்பார்கள். அப்போது அவையில் இருக்கும் நபர்களின் பெரும்பான்மையைப் பொறுத்துத்தான் ஓட்டெடுப்பு நடைபெறும். எடப்பாடி அணியினர்  நம்பிக்கை இருக்கிறது என்று சொன்னால், எடப்பாடி அரசு பிழைக்கும்" என்றார்.

தமிழக சட்டப்பேரவையில் இப்போது உள்ள பலம்;

எடப்பாடி அணி; 111 பேர்
எந்த அணியிலும் சேராதவர் 1 (பெரம்பலூர் தமிழ் செல்வன்)  
தி.மு.க; 89 பேர்
தனியரசு-1
தமிமூன் அன்சாரி-1
தினகரன் அணி; 21
காங்கிரஸ் 8
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1
நியமன உறுப்பினர் 1
காலியிடம் 1

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்