வெளியிடப்பட்ட நேரம்: 15:07 (09/09/2017)

கடைசி தொடர்பு:15:07 (09/09/2017)

அரசைக் காப்பாற்ற எடப்பாடி பழனிசாமியின் பொதுக்குழு தீர்மானம் ரெடி!

தினகரன் எடப்பாடிபழனிசாமி

தமிழகத்தில் ஆட்சிக்கும், அ.தி.மு.க-வுக்கும் இருந்து வரும் நெருக்கடிகளைச் சமாளிக்க சில அதிரடித் திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வகுத்துவைத்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சென்னை வானகரம் ஶ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அ.தி.மு.க-வின் அவசர பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி நடந்தது. இந்தக் கூட்டத்தில்தான் சசிகலா, அ.தி.மு.க-வின் தற்காலிகப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு சசிகலா குடும்பத்துக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே உருவான அதிகார மோதல் காரணமாக பிப்ரவரி 5-ம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம். இதையடுத்து, 'சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க-வில் இருந்து நீக்க வேண்டும்' என்று தெரிவித்து தர்மயுத்தம் தொடங்கினார் ஓ.பி.எஸ். இதற்கிடையில் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க. அம்மா அணிக்குப் பெறுவதற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க டி.டி.வி.தினகரன் முயற்சி செய்தார் என்று கூறி, அவரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். திஹார் சிறையில் தினகரன் அடைக்கப்பட்டவுடன், அ.தி.மு.க-வில் அதிகார மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது.

பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி

அதுவரை தினகரனை ஆதரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவருக்கு எதிராக திரும்பினார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் அணியையும், எடப்பாடி அணியையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களில் ரகசியமாகவும், சில நேரங்களில் பகிரங்கமாகவும் நடந்தன. இதையடுதது, அண்மையில் இரு அணிகளும் இணைந்தன. ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார். இணைந்த அ.தி.மு.க-வினர், வரும் 12-ம் தேதி கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தை சென்னையில் கூட்டியுள்ளனர். 

இதற்கிடையில், 'எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்; அவர் மீது நம்பிக்கை இல்லை' என்று டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து தனித்தனியாக மனு கொடுத்தனர். எடப்பாடி பழனிசாமி அரசு, மெஜாரிட்டியை நிருபிக்க வேண்டும் என்று ஜனாதிபதியை சந்தித்து தி.மு.க மனு கொடுத்தது. இந்நிலையில், மாவட்ட வாரியாக அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களைச் சந்தித்து ஆதரவு கேட்டார் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மற்றும் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தையும் அவர் கூட்டினார். 

 சசிகலா

அந்தக் கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டு அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனாலும், மெஜாரிட்டிக்கு தேவையான எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை இல்லாததால், டி.டி.வி. தினகரன் முகாமில் உள்ள எம்.எல்.ஏ-க்களை இழுக்க ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த வலையில் ஜக்கையன் எம்.எல்.ஏ சிக்கினார். நடுநிலை வகித்த கருணாஸ், தினகரன் பக்கம் சாய்ந்தார்.

'எடப்பாடி - பன்னீர்செல்வம் அணியினர் கூட்டியுள்ள பொதுக்குழுவிற்கு யாரும் போகக்கூடாது; அவர்கள் கூட்டும் பொதுக்குழு செல்லாது' என்று அறிக்கை வெளியிட்ட டி.டி.வி.தினகரன், அந்த பொதுக்குழுவைக் கூட்ட தடைவிதிக்க வேண்டும் என்று வெற்றிவேல் எம்.எல்.ஏ. மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருந்தார். ஆனால், நீதிபதி கார்த்திகேயன், இந்த வழக்கின் விசாரணை  செப்டம்பர் 11-ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு அழைப்பு கொடுக்கும் வேலைகளை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் தொடங்கிவிட்டனர்.  தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் நான்கு மாவட்ட செயலாளர்கள் தவிர்த்து மற்ற அனைவரையும் சென்னைக்கு அழைத்து அவர்களிடம் பொதுக்குழு அழைப்பிதழை நேரில் கொடுத்து, 'பொதுக்குழு உறுப்பினர்களை தனித்தனியாகச் சந்தித்துப் பேசி அழைத்து வர வேண்டும்' என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அதற்கான தீவிர வேலைகளில் எடப்பாடி ஆதரவு நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். 'பொதுக்குழுவை எப்படியாவது வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட வேண்டும்' என்பதில் தீவிரமாக உள்ளார் எடப்பாடி. ஆனால், அவர்கள் நடத்தும் 'பொதுக்குழுவைச் சீர்குலைக்க வேண்டும்; முடக்க வேண்டும்' என்று டி.டி.வி. தினகரன் தரப்பு தொடர்ந்து வரிந்துகட்டிக் கொண்டு வேலைசெய்து வருவதாகக் கூறப்படுகிறது. பொதுக்குழு பரபரப்பில் இருதரப்பினரும் முட்டிமோதிக் கொண்டிருக்கும் நிலையில், ஆட்சியை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று எம்.எல்.ஏ-க்களின் கூட்டல், கழித்தல் கணக்குகளைப் போட்டு பார்த்துக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. டிடிவிதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களையும் குட்கா விவகாரத்தில் சிக்கியுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ-க்களையும் குறிப்பிட்ட காலம்வரை சஸ்பெண்ட், அல்லது டிஸ்மிஸ் செய்துவிட்டு ஆட்சியை காப்பாற்றிவிடலாம் என்று ஆளும்தரப்பு திட்டம் தீட்டியுள்ளது. ஆனால், தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதாவது, சுமார் 40 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கமோ அல்லது டிஸ்மிஸோ செய்துவிட்டால், 194 எம்.எல்.ஏ-க்கள் என்ற பலத்தின் அடிப்படையில் ஆட்சியைக் காப்பாற்றி என்று எடப்பாடி தரப்பு கணக்கு போடுகிறது. அதோடு, செப்டம்பர் 12-ம் தேதி பொதுக்குழுவில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரைக் கட்சியில் இருந்து நீக்கிவிட்டு கட்சியையும், ஆட்சியையும் கையில் எடுத்துக் கொள்ளவும் திட்டம் ரெடியாக இருக்கிறதாம். அரசுக்கு ஏற்பட்டுள்ள தற்போதைய, நெருக்கடியைச் சமாளிக்க வலுவான திட்டங்களோடு களம்காண எடப்பாடி அணி தயாராக இருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்