வெளியிடப்பட்ட நேரம்: 19:11 (09/09/2017)

கடைசி தொடர்பு:19:11 (09/09/2017)

தினகரனுக்கு ஸ்டாலின் அனுப்பிய மெசேஜ்..! #VikatanExclusive

ன்று அணி அணியாகப் பிரிந்துள்ள அ.தி.மு.க-வுக்குள், பிரதான அணியாக இருக்கும் டி.டி.வி. தினகரன், சமீபத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வேகமானதாகவும், தீர்க்கமானதாகவும் உள்ளது. தனக்குள்ள செல்வாக்கை உணர்த்துவதற்காக, மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்திய அவர், தற்போது பொதுப்பிரச்னைகளில் தீவிர  கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.  நீட் தேர்வால் மருத்துவ இடம்கிடைக்காமல் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, "மாணவி அனிதா பிளஸ்-2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்ற போதிலும், நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்காததல், தற்கொலை செய்துகொண்டுள்ளார். நீட் தேர்வுக்கு விலக்கு பெறாத தமிழக அரசே அனிதாவின் மரணத்திற்குக் காரணம். விலக்கு அளித்திருந்தால், அவருக்கு மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்திருக்கும். எனவே  நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவை இல்லை" என்று பேட்டியளித்து அதிரடி காட்டினார். இதற்கடுத்து, செப்டம்பர் 7-ம் தேதி, 'சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்ற கோரிக்கையை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து, வலியுறுத்திவிட்டுத் திரும்பினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போதும் நீட்-டுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்தவர், "நீட்-க்கு விலக்கு கேட்டு செப்டம்பர் 10 ம் தேதி ஆர்பாட்டம்" என்று  போராட்டத்தை அறிவித்தார். (ஆனால், உச்ச நீதிமன்றம் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களுக்குத் தடை விதித்ததால், இந்த ஆர்பாட்டத்தை பின்னர் ரத்து செய்து விட்டார்) இதன்மூலம் முழுவீச்சாக மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டார் தினகரன்.

திவாகரன் மற்றும் தினகரன்

தினகரனின் இந்த திடீர் மாற்றத்துக்கான பின்னணி என்ன?

சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தான் வளர்த்துவிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியினாலேயே, தனது கட்சிப் பதவிக்கான நாற்காலி கனவு தகர்க்கப்பட்ட கோபம் தினகரனுக்கு உள்ளது. இதன் பின்னணியில் மத்தியில் ஆளும் பி.ஜே.பி. இருக்கிறது என்பதை அவர் உணராமல் இல்லை. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை வைத்துக்கொண்டு அ.தி.மு.க-வின் ஒட்டுமொத்த கண்ட்ராலை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பி.ஜே.பி முயற்சிக்கிறது என்பதை தினகரனுக்கு நெருக்கமான உறவுகள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக திவாகரன், "ஆட்சி இன்று வரும். நாளை போகும். அதைவிட முக்கியம் கட்சிதான். கட்சி நம்  கையை விட்டுப் போகாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்' என்று தினகரனிடம் அறிவுறுத்தியுள்ளார். 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்பது அரசியலுக்கும் பொருந்தும். எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸூம் பி.ஜே.பி-யுடன் சார்ந்து செயல்படும்போது, அதற்கு நேரெதிரான தி.மு.க-வுடன், பிரச்னைகளையொட்டி இணைந்து செயல்படுவதுதான் அரசியல் ராஜதந்திரம் என்பதை உணர்ந்து சசிகலா உறவுகள் காய் நகர்த்தத் தொடங்கியுள்ளனர். "அதற்கான முயற்சிகளை நான் எடுக்கிறேன்" என்று அழுத்தமாக வலியுறுத்தினார் திவாகரன் என விவரிக்கின்றார் தினகரனின் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள்.

தி.மு.க எங்கிருந்து வந்தது?  

"பி.ஜே.பி-க்கு எதிராக தேசியளவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறார் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். முரண்பட்டு இயங்கி வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ-வையும் தற்போது தன் அரங்கிற்குள் கொண்டு வந்துவிட்டார் அவர். தமிழகத்திற்குள் பி.ஜே.பி ஸ்டாலின்  மற்றும் தினகரன் கால்பதிப்பதைத் தடுப்பதோடு மட்டுமல்ல; மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படும் எடப்பாடி பழனிசாமி அரசை வீழ்த்தவும், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து போராடி வருகிறார் ஸ்டாலின். தினகரன் பின்னால் திரண்டுள்ள கணிசமான அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களையும் கவனிக்க வேண்டும். அவர்களிள் பலம், சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும்போது உதவும் என்பதையும் அவர் அறியாதவரில்லை. இதையொட்டி, ஸ்டாலின் வழிகாட்டுதலுடன் தினகரன் தரப்பிடம் பேசினார் தி.மு.க-வின் மூத்த தலைவர் ஒருவர்" என்கின்றனர் அறிவாலயத்தைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள். 

யாரந்த தலைவர்?

"தி.மு.க முன்னாள் அமைச்சரும், தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பவருமான  அவர், தன்னுடைய மகளை திருமணம் செய்துகொடுத்த வகையில் சசிகலா குடும்பத்துக்கு நெருங்கிய சொந்தம். இந்த உறவின் அடிப்படையில் திவாகரனுடன் எப்போதாவது பேசுவார். தற்போதைய அரசியல் பரபரப்பு சூழலில் இவர்களுக்கிடையேயான உரையாடல்கள் அடிக்கடி நிகழத் தொடங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாகவே, தி.மு.க அழைப்பு விடுத்த நீட் தேர்வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் 'தினகரன் ஆதரவாளர்கள் பங்கு பெறுவார்கள்' என்று அதிரடியாக திவாகரன் அறிவித்தார்" என்கின்றனர். இதை  திவாகரனுடன் நெருக்கமாக வலம் வருபவர்களும் ஆமோதிக்க, அவர்களிடம்" 'தி.மு.க கூட்டத்தில் எனது ஆதரவாளர்கள் பங்கேற்க மாட்டார்கள்' என்று தினகரன் இதை அப்போதே மறுத்திருந்தாரே?" என்றோம். 

பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

"ஆமாம், 'அது திவாகரனின் தனிப்பட்ட கருத்து' என்றார் தினகரன். வழக்கு உள்ளிட்ட காரணங்களால் மட்டுமல்ல; தற்போதைய சூழலில் ஒரேயடியாக மத்திய பி.ஜே.பி-யை எதிர்த்து நிற்பது தனக்கு பாதகத்தை உண்டாக்கும் என்று கருதிதான் திவாகரனின் கருத்தை மறுத்தார். அதேநேரம் தினகரன் சமீபத்தில், எங்கும் தி.மு.க-வை தாக்கிப் பேசவில்லை. தி.மு.க-வும், தினகரனை தாக்கிப்பேசுவதில்லை. இதைவைத்துப் பார்க்கவேண்டும்" என்றவர்கள், "எடப்பாடி பழனிசாமி அரசின் தோல்விகளை  அம்பலப்படுத்த வேண்டும் என்பதில் இருதரப்புமே உறுதியாக உள்ளது. அதில் இருதரப்புக்குமே லாபம் உள்ளது. குறிப்பாக, தினகரனைப் பொறுத்தவரை கட்சியைக் கைப்பற்ற கட்சிக்குள் மட்டுமல்ல, கட்சிக்கு வெளியேயும் செல்வாக்கு பெருக வேண்டும் என கருதுகிறார். அதற்கு மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்க வேண்டியது அவசியம் என்பதை அவர் உணர்ந்துள்ளார். இதையொட்டியே, செப்டம்பர் 10-ம் தேதி நீட் விலக்கு கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். பின்னர் அந்த ஆர்பாட்டம் ரத்து செய்யப்பட்டது.

எனினும், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சட்டச்சிக்கல் இல்லாதவகையில் நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்துவது பற்றி ஆலோசனை செய்து வருகிறார். மறுபுறம் மக்கள் பிரச்னைகளை தனது ஆதரவாளர்களிடம் பட்டியலிட்டு, இதையொட்டி போராட்டங்கள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். ஒரு பக்கம் 'ஸ்லீப்பர் செல்கள்' மூலம் எம்.எல்.ஏ-க்களை தன் பக்கம் திருப்பும் வேலைகளையும், மறுபக்கம் மக்கள் பிரச்னைகளையொட்டி எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிரான போராட்டங்களையும் துரிதப்படுத்தி வருகிறார் தினகரன். இனி 'எங்கள் தெரு குழாயில் தண்ணி வரவில்லை, குப்பைகளை மாநகராட்சி அள்ளவில்லை' போன்ற மக்கள் பிரச்னைகளில், தினகரன் ஆதரவாளர்கள் முழக்கங்களை கேட்கலாம்" என்கின்றனர் உற்சாகமான குரலில்.

இந்த திட்டமிடல்கள் தொடர்ந்துகொண்டிருக்கும் அதேவேளையில்தான், காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "அனைத்து எம்.எல்.ஏ-க்களும் எங்களது அணியில்தான் உள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் பி.ஜே.பி-யுடனான கூட்டணி குறித்து பரிசீலிக்கப்படும்" என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

முதல்வரின் இந்த பேட்டியை, கூட்டிக்கழித்து பாருங்க....கணக்கு சரியா வரும்!


டிரெண்டிங் @ விகடன்