வெளியிடப்பட்ட நேரம்: 12:29 (11/09/2017)

கடைசி தொடர்பு:12:30 (11/09/2017)

அதிக மழை பெய்தும் முன்னேற்றமில்லை... இக்கட்டில் சென்னை ஏரிகள்!

தென்மேற்கு பருவ மழை

மிழகத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்குப் பருவமழை இரண்டும் பொய்த்துப் போனதால், 32 மாவட்டங்களும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்தன. இதனால், குடிநீருக்குக் கூட தண்ணீர் இல்லாத சூழல் நிலவியது. கடந்த மே மாதம் வரை தமிழகம் வெயில் தாக்கத்தின் பிடியில் சிக்கித் தவித்தது.

வழக்கத்தை விட அதிகம்

ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியபோதிலும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யவில்லை. ஜூலை  மாதத்துக்குப் பின்னர்தான் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. கோவை, தேனி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகமாகவே மழை பெய்திருக்கிறது. வரும் 30-ம் தேதி வரை தென்மேற்கு பருவமழை காலம் என்பதால், இன்னும் பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை வானிலை மையத்தின் தகவலின் படி தமிழகத்தில் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் 10 வரை 343 மி.மீ மழை பெய்துள்ளது. இது வழக்கமான அளவை விட 48 சதவிகிதம் அதிகமாகும். அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 424 மி.மீ மழை பெய்துள்ளது. இது வழக்கமான அளவை விட 222 சதவிகிதம் அதிகமாகும். அதற்கு அடுத்ததாக திருப்பூர் மாவட்டத்தில், 293.6 மி.மீ மழை பெய்திருக்கிறது. இது வழக்கத்தை விட 216 சதவிகிதம் அதிகமாகும். தேனி மாவட்டத்தில் 308.1 மி.மீ மழை பெய்திருக்கிறது. இது வழக்கத்தை விட 208 சதவிகிதம் அதிகம். கன்னியாகுமரியில் 297.4 மி.மீ மழை பெய்திருக்கிறது. ஆனால், இது வழக்கத்தை விட 26 சதவிகிதம் குறைவாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதி வரை குறைவான அளவே மழை பெய்திருந்தது. கடந்த 10 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் 76 மி.மீ மழை பெய்திருக்கிறது. இது வழக்கத்தை விட 59 சதவிகிதம் அதிகமாகும்.

சென்னையில்...

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்தால்தான் சென்னையில் உள்ள நீர்நிலைகள் நிரம்பும். தென்மேற்கு பருவமழை காலத்தில் சென்னை மாவட்டத்தில் 395.9 மி.மீ மழை பெய்திருக்கிறது. இது வழக்கத்தை விட 12 சதவிகிதம் அதிகம். திருவள்ளூர் மாவட்டத்தில் 447 மி.மீ மழை பெய்திருக்கிறது. இது வழக்கத்தை விட 27 சதவிகிதம் அதிகமாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 454.3 மி.மீ மழை பெய்திருக்கிறது. இது வழக்கத்தை விட 17 சதவிகிதம் அதிகமாகும்.

ஏரிகளின் நீர்மட்டம்

சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் வழக்கத்தை விட சிறிது அதிகமாக மழை பெய்த போதிலும், சென்னை ஏரிகளில் நீர் மட்டம் குறைவாகவே உள்ளது. செப்டம்பர் 10-ம் தேதி நிலவரப்படி பூண்டியில் 28.0 மி.க.அடி நீர் இருந்த து. சோழவரத்தில் 25.00 மி.க.அடி, ரெட்ஹில்ஸில் 113.00  மி.க. அடி, செம்பரம்பாக்கத்தில் 232 மி.க. அடி என அனைத்து ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 398 மி.க அடி தண்ணீர்தான் இருந்தது. கடந்த ஆண்டு இதே செப்டம்பர் 10-ம் தேதி சென்னை ஏரிகளில் மொத்தம் 2,234 மி.க. அடி நீர் இருந்தது.

சோழவரம் ஏரி

பற்றாக்குறை குடிநீர்

சில மாதங்களுக்கு முன்பு வரை சென்னையின் அனைத்து ஏரிகளும் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டன. இதனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் பணி தடை பட்டது. இந்த சூழலில் இப்போது பெய்துள்ள மழையால் ரெட்ஹில்ஸ் மற்றும் செம்பரம்பாக்கத்தில் ஒரளவுக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த இரண்டு ஏரிகளில் இருந்தும் இப்போது தினமும், 75 முதல் 100 மி. லிட்டர் தண்ணீர் குடிநீருக்காக எடுக்கப்படுகிறது. சென்னை நகரில் வழக்கமாக 835 மில்லியன் லிட்டர் குடிநீர் விநயோகிக்கப்படும். ஆனால், இப்போது 430 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.

வடகிழக்குப் பருவமழை

தமிழகத்தில் வரும் அக்டோபர் 21-ம் தேதிதான் வடகிழக்குப் பருவமழை வழக்கமாக தொடங்கும் நாளாகும்.  2015-ம் ஆண்டுக்குப் பின்னர் வடகிழக்குப் பருவமழை கடந்த ஆண்டு அவ்வளவாகப் பெய்யவில்லை. எனவே இந்த ஆண்டாவது வடகிழக்குப் பருவமழை போதுமான அளவு பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்படி பெய்தால் மட்டுமே தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்புவதற்கு வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் இன்னொரு வறட்சியைத்தான் தமிழகம் சந்திக்க நேரிடும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்