அனிதாக்களின் கலையும் கல்விக் கனவுகள்... அரசின் கவனத்துக்கு சில விஷயங்கள்! | Is it too late to change our education system to avoid another suicide like anitha?

வெளியிடப்பட்ட நேரம்: 13:42 (11/09/2017)

கடைசி தொடர்பு:14:56 (11/09/2017)

அனிதாக்களின் கலையும் கல்விக் கனவுகள்... அரசின் கவனத்துக்கு சில விஷயங்கள்!

அனிதா

ஸ்டெதாஸ்கோப் தொங்கவேண்டிய கழுத்தில், கனவுகள் கருகிய வலியையும் ஆற்றாமையையும் தாங்க முடியாமல் தூக்குக் கயிறு தொங்கியதால், தமிழகம் முழுவதையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது அனிதாவின் மரணம். 

“என்னிடம் எளிமையான கேள்வி இருக்கிறது. இங்கு எல்லோருக்கும் எல்லாமும் சரிசமமாகக் கிடைக்கிறதா... எல்லோருடைய பொருளாதார நிலையும் ஒன்றுபோல இருக்கிறதா? இங்கு ஏற்றத்தாழ்வு எதுவும் இல்லையா?” 

- அனிதா

சரியான நேரத்தில் மருத்துவச் சேவை கிடைக்காததால் மரித்த தன் அம்மாவின் நிலை, வேறு யாருக்கும் வரக்கூடாது என்ற எண்ணம்தான் அனிதாவை மருத்துவம் படிக்க உந்தித்தள்ளியது. அதை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு, வறுமைக்கும் வலிகளுக்கும் இடையில் படித்து, ப்ளஸ் டூ-வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றிருப்பதை, வெறும் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த ஏட்டுக்கல்வி என்று ஒதுக்குவது எவ்வளவு பெரிய அநீதி? அனிதா பெற்றது மதிப்பெண்கள் அல்ல... அது, அவருடைய கிராமத்தின் கனவுகளைத் திறக்கத்தகுந்த திறவுகோல். படிப்புதான் வாழ்க்கையை முன்னேற்றும் என்று எண்ணக்கூடிய சராசரிக் குடும்பங்களின் எதிர்பார்ப்புகள் மீது ஓர் இடியாக இறங்கியிருக்கிறது நீட் தேர்வு. மாநிலப் பாடத்திட்டத்தின் மீதுள்ள குறைகளைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள்: சமூக வலைதளங்களில் கொதிக்கிறார்கள்; சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலும், ஐ.சி.எஸ்.இ பாடத்திட்டத்திலும் படிப்பவர்களுக்கு மட்டுமே இந்தத் தேர்வு சாதகமானதாக உள்ளது என்று கூறுகிறார்கள். இருக்கட்டும்... இந்தத் தேர்வை எழுதும் அனைத்துக் குழந்தைகளும் தங்கள் பாடப் புத்தகத்தில் உள்ள அனைத்து சூட்சுமங்களையும் கரைத்துக் குடித்தவர்கள்தான். ஆனால், இவர்கள் அனைவருமே இந்தத் தேர்வு எழுதுவதற்கென்றே பயிற்சிபெற்றவர்கள். இரண்டு ஆண்டுகள் எல்லாம் இல்லை. நான்கு ஆண்டுகள் அல்லது அதற்குமேலாக இத்தகைய தேர்வுகளுக்கென்றே ‘பயிற்சி’ பெற்றவர்கள். ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் ‘factory’ என்ற சொல்லாடல் மிகப் பிரசித்தம். படித்த பள்ளியைப் பள்ளியாக நினைவுகூருவதைவிட, அதை மாணவர்களை உற்பத்தி செய்யும் இடமாகப் பாவிக்கும் மனநிலையைப் பிரதிபலிக்கும் சொல்தான் அது. தங்களுக்குக் கிடைத்த அற்புதமான வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். அசாத்திய உழைப்பை அவர்களும் கொடுத்தார்கள். சரி... வாய்ப்பு இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? 

அனிதாவின் தற்கொலையைப் பற்றி அனைவரும் வெவ்வேறு விதமான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அவர், தோற்றுப்போய் இந்தத் தற்கொலை முடிவை எடுக்கவில்லை.. மறைமுகமாக, அவருடைய கல்விப் பின்புலமும், சமூகப் பின்புலமும் அரசியலாக்கப்படுகிறது. கல்வி எந்த அளவுக்கு அரசியலாக்கப்படுகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் அனைவரும், வெறும் மனப்பாடத்தைத் தவிர வேறொன்றும் அறியாதவர்கள். தகுதியானவர்கள் மட்டும்தான் இந்த இடத்துக்கு வரவேண்டும் என்கிற வாதம், இங்கு மீண்டும் மீண்டும் வைக்கப்படுகிறது. தகுதி என்றால் என்ன? இந்தக் கேள்விக்குப் பல வகைகளில் பதில் சொல்லலாம். 'வெறும் பாடப்புத்தங்களின் சூட்சுமத்தைப் பயிற்சிக்கூடங்களில் பெற்றுவிட்டால் மட்டும் தகுதி ஆகிவிடுமா' என்ன என்று இப்போது வேலூர் மருத்துவக் கல்லூரி வைத்துள்ள வாதம் முக்கியமானது. இவர்கள் திறமையானவர்கள், இவர்கள் திறமையற்றவர்கள் என்று முடிவு செய்வதற்கு நாம் யார்? ஒரே கேள்வியை மாற்றி மாற்றி மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் அளவுக்கு மாற்றிக் கேட்பதுதான் இந்த நுழைவுத்தேர்வு முறை. இந்தக் கேள்விகளை எதிர்கொள்வதற்கு ஆழ்ந்த அறிவைவிடப் பயிற்சி முக்கியம், தந்திரம் முக்கியம். இந்தத் தந்திரத்தை வியாபாரம் ஆக்குவது பல கல்விச்சந்தைகள். 

நீட்

மாநிலப் பாடத்திட்டத்தின்மீது குறைசொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். உண்மைதான். ஆனால், மாநிலப் பாடத்திட்டத்திலும் அறிவுக்குத் தீனிபோடும் பகுதிகள் உண்டு. ஆனால், அவை எல்லாம் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டன. மாநிலப் பாடத்திட்டத்தில் அறிவினைச் சோதிக்கும் பகுதி என்றால், அது ஒரு மதிப்பெண் வினா விடை மட்டும்தான். மூன்று, ஐந்து, பத்து மதிப்பெண் கேள்விகளில் ஆகப் பெரும்பாலான கேள்விகள் முந்தைய கேள்வித்தாள்கள், அரசு வெளியிடும் பெற்றோர் - ஆசிரியர் கழகக் கையேடு ஆகியவற்றில் இருந்தே இடம்பெறும். அதை மீண்டும் மீண்டும் எழுதிப் பார்த்து நம் பிள்ளைகள் பயிற்சிபெறுகிறார்கள். நம் பாடத்திட்டம் படிப்பவர்களின் மனநிலையை அந்நியப்படுத்தக்கூடாது என்ற கரிசனம் மொழிப்பாடப் புத்தகத்தில் நிறைய இடங்களில் காணலாம். உதாரணமாக, ஒரு நாடகம் தமிழ்ப்புத்தகத்தில் பாடமாக இருக்கிறது என்றால், அந்தக் கதைமாந்தர்களின் பெயர்களில் சமஸ்கிருதச் சாயல் அரிதாகவே இருக்கும். எளிமையான தமிழ்ப்பெயர்களாகவும், ஆங்காங்கே சிறுபான்மை இனச் சமூகத்தின் பெயர்களும் இருக்கும். பெரும்பாலாக இந்தப் பாடப்புத்தகத்தின் உள்ள பகுதிகளில் வரும் இடங்கள்கூடச் சிற்றூர்களின் சாயலோடு ஒட்டி இருக்கும். மொழிப்பாடத்தில் செலுத்தி இருக்கும் இந்த அக்கறையைக் கல்வித் துறை கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் செலுத்தி இருந்தால் என்ன? வெறும் Blueprint-யே வேதமாக மாற்றி, இன்று பிள்ளைகளின் வாழ்க்கையில் அழகாக விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.  

பாடப்புத்தகத்தில் உள்ள கருத்துகளை ஆழமாகப் புரிந்துகொண்டு, வெவ்வேறு விதமாகக் கேட்கப்படும் கேள்விகள் அனைத்துக்கும் சி.பி.எஸ்.இ மாணவர்கள் பயிற்சி பெறுகிறார்கள். நம்முடைய தேர்வு முறையையும், பாடத்திட்டத்தையும் போட்டித்தேர்வுகளுக்காக மாற்றி அமைத்தால் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த பிள்ளைகளும் வெற்றிபெறுவார்கள் என்பதில் ஐயம் இல்லை. ஆனால், பயிற்சி யார் கொடுப்பது? வகைவகையான பயிற்சி முறைகள் இன்று இந்தக் கல்விச் சந்தையில் உண்டு. லட்சங்களில் காசு நம்மிடம் புரளவேண்டும். தேர்வு முடிவுகள் வந்த அடுத்த நாள், நம் செய்தித்தாள்களின் முதல் முழுப்பக்கத்தில், பயிற்சி மையத்தில் வெற்றிபெற்ற மாணவர்கள் பூங்கொத்துகளோடு சிரிப்பார்கள். பயிற்சி மையம் அடுத்த உற்பத்திக்குத் தயாராகும். அந்த மாணவர்களின் உழைப்பை நாம் யாரும் குறை கூறமுடியாது. ஆனால், எவ்விதப் பின்புலமும் இல்லாத ஒரு மாணவன்/மாணவியின் உழைப்பைக் குறைத்து மதிப்பிடுவது ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு.  

இந்த மதிப்பெண்களுக்காக மட்டுமே மாணவர்கள் தயாரிக்கப்படுகிறார்கள் என்பது கசப்பான உண்மை. பன்முகத்தன்மை கொண்ட இந்நாட்டில், ஒரே கல்விமுறை என்பது எப்படிச் சாத்தியமாகும்? கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களுக்குச் சாத்தியமானாலும், இலக்கியத்தில், சமூக அறிவியலில் ஒவ்வோர் இடத்துக்கும் மிகச்சிறப்பான பின்புலம் உண்டு. அனைத்தையும் இப்பாடத்திட்டம் அளித்துவிடுமா? 

இங்கு நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி என்பது ஓரளவு வசதியுள்ள குடும்பங்களால் மட்டுமே இயலும். அது மட்டுமா? இந்த மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் எத்தனை மாணவர்களுக்கு, எட்டாம் வகுப்பிலும் பத்தாம் வகுப்பிலும் நடக்கும் தேசிய திறனறித்தேர்வின் முக்கியத்துவம் தெரியும்? ஆயிரக்கணக்கான மாணவர்கள் மோதும் olympiad-கள் இன்று எத்தனை அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தெரியும்? முன்னேறிய பள்ளிக்காலத்தில் இருந்தே லட்சங்களைச் செலவழிக்கும் 'கொடுப்பினை' உள்ள மாணவர்களுக்கு, அறிவியல் தொடர்பான இத்தகைய வாய்ப்புகள் மட்டும் உருவாக்கித் தரப்படவில்லை. Model United Nations என்று தர்க்கங்களில் வல்லமை பெற, நாடு தழுவிய விவாத நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள என்று இவர்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு விதமான பயிற்சி, ஒரு குக்கிராமத்தில் உடைந்துபோன கரும்பலகையில் பயிலும் ஒரு மாணவருக்குக் கிடைக்காமல் போனது இவ்வளவு ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் ஆட்சியின் பெரும்பிழை.

இத்தகைய தடைகளைத் தாண்டியும், சின்னஞ்சிறிய ஆசைகளுக்கு எல்லாம் கொள்ளி வைத்துவிட்டு, கல்வி மட்டுமே வாழ்க்கையை உயர்த்தும் என்று முனைப்புடன் படித்த ஒரு முதல் தலைமுறை பட்டதாரி மாணவியின் கனவுகள் கருகுவது, ஒரு தலைமுறையின் ஆசைகளையும், இதுவரை அந்தக் குடும்பம் சுமந்த அவமானங்களையும், வலிகளையும் கடந்து, கண்ணியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற அந்த ஆசையையும் ஒன்றாகக் கருக்குவது. வாய்ப்புகள் எதுவும் வாய்க்காத ஒரு பிள்ளையையும், முறையான பயிற்சி பெற்ற ஒரு பிள்ளையையும் ஒரே தராசில் வைத்து எடைபோடுவது சமூக அநீதி.  கல்வி என்பது குறிப்பிட்ட பொருளாதார நிலையும், குறிப்பிட்ட இடங்களில் வாழும் பிள்ளைகளுக்கு மட்டுமே அளித்தால், மற்றவர்கள் என்ன ஓட்டு வங்கிகளா? மாணவர்களைக் குறைசொல்லாதீர்கள். இத்தகைய பாதிப்பை நமக்கு அளித்த ஆள்பவர்களின் கழுத்தைப் பிடித்துக் கேள்வி கேளுங்கள்... ஏழு ஆண்டுகளுக்கு முன்பே பரிசீலனையில் இருந்த ஒரு தேர்வு முறை, அதைக்குறித்த எந்த முன்னறிவிப்பையும் மக்களுக்குக் குறிப்பிட்ட நேரத்தில் உணர்த்தாத ஆட்சியாளர்களைக் கேள்வி கேளுங்கள்... தாய்மொழியில் கல்வி பயின்ற மாணவர்களின் வாய்ப்புகளை ஒரே அடியாகப் பொசுக்கும் இந்த முறையைக் கேள்வி கேளுங்கள்.   

நீட் என்பது நடைபெற வேண்டும் என்றால், அனைவருக்கும் ஒன்றாகப் பாடத்திட்டத்தை மத்திய அரசு அளிக்கட்டும்... அவரவர் தாய்மொழியில் அதனை அமைக்கட்டும். மாநிலங்களின் உரிமையை மத்திய அரசு மதிக்க வேண்டும். நம்முடைய ஆட்சியாளர்கள் இப்போதாவது விழிக்க வேண்டும். கல்வித்துறை அழுத்தமான கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். ஒன்பதாம் வகுப்புவரை கொண்டு வந்த 60/40 கல்வி முறை எப்படி தெர்மொகோலுடனும், ஆயத்தமாகக் கிடைக்கும் படங்களுடனும் முடிந்துபோனதோ... அப்படி இல்லாமல், மாணவர்களின் அறிவுக்குத் தீனி போடும் வகையில், அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளோடும் பொருத்திப்பார்க்கும் வகையில் மாற்ற வேண்டும். இது அறிவியல், கணக்கு மட்டுமல்ல, மொழிப்பாடங்களுக்கும், சமூக அறிவியல் பாடங்களுக்கும் பொருந்தும். இவ்வளவு நாளாகியும் என் இயற்பியல் புத்தகங்கள் ஹிக்ஸ் போசானைப் பற்றிப்பேசவே இல்லை? அத்துணை வரலாற்றையும் அடுக்கும் என் சமூக அறிவியல் புத்தகங்கள், ஏன் ஒருபோதும் எனக்கு மொழிப்போரைப் பற்றியும்,  நெருக்கடி நிலையைப் பற்றியும் சொல்லிக்கொடுக்கத் துணியவில்லை?  ஏன், என் தமிழ்ப்புத்தகங்களில் மொழிமாற்றம் செய்யப்பட்ட கவிதைகள் இல்லை? என் ஆங்கிலப்புத்தகத்தில் ஏன் ஜூம்பா லாகரியும், ஹெமிங்க்வேவும் இல்லாமல் போனார்கள்? டாஸ்மாக் கடைகளுக்கு நீங்கள் செய்யும் செலவைப் பிள்ளைகளுக்குப் பயிற்சி அளிப்பதில் போடுங்கள். குப்பைமேட்டில் கிடக்கும் ரத்தினங்கள் எவ்விதப் பாவமும் அறியாதவை.  

‘எங்க ஊர்லயே நான்தான் முதல் டாக்டர்’ இந்தச் சொற்றொடருக்குள் இருக்கும் அந்தக் காத்திரமான உழைப்பின் ருசியை இனிவரும் தலைமுறைகளில் நாம் உணர்வது அரிதாகிவிடக் கூடாது. தகுதியிருந்தும் உழைப்பு கண்டுகொள்ளாமல் போவதுபோன்ற ரணத்தைப் பிள்ளைகளுக்கு ஆள்பவர்கள் கொடுக்கக்கூடாது.  

அனிதா தற்கொலை செய்வதற்கு முன்னாள் தன் தாயின் புடவையைக் கட்டிப்பார்த்தாராம். அந்தப் பிஞ்சு மனம் அப்போது என்ன எண்ணிக்கொண்டு இருந்திருக்கும்? வீட்டின் ஒரே பெண்பிள்ளை மரணித்துவிட்டது. அந்த வீட்டின், ஊரின் பெருந்துயரை நீங்கள் போக்க முடியுமா? அனைவருக்கும் சமவாய்ப்பு அளிப்பது என்ற அடிப்படை அறத்தையாவது இந்த ஆட்சியாளர்கள் கைக்கொள்ளவேண்டும். உரத்த அறச்சீற்றதுடன் கேள்வி கேட்போம். மதம் இல்லாமல், சாதி இல்லாமல், அறத்துக்காக ஒன்றிணைந்து கேள்வி கேட்போம். நமக்குக் கிடைக்கும் விடை, இனி கனவுகள் கருகாமல் பார்த்துக்கொள்ளட்டும்!  


டிரெண்டிங் @ விகடன்