Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

ஹார்வி புயலால் கரை ஒதுங்கிய வித்தியாசமான கடல் உயிரினம்… குழப்பத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

அந்த விசித்திர கடல் உயிரினம் உயிரோடு இல்லாவிட்டாலும் பார்ப்பதற்கு சற்று பயமாகத்தான் இருக்கிறது. கண்களே இல்லாமல், கூர்மையான பற்கள் மற்றும் நீண்ட வால் கொண்டிருக்கும் இதற்கு உருளை வடிவ உடல்வாகு. அது சரி, பெயர்? அதுதான் இங்கே மில்லியன் டாலர் கேள்வி. அதைக் கரைசேர்த்த ஹார்வி புயலுக்கே அதன் பெயர் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.

கடல் உயிரினம்

படங்கள்: twitter.com/preetalina

மில்லிமீட்டர் கணக்கைத் தாண்டி அங்குல கணக்குகளில் மழையை எண்ண வைத்த ஹார்வி புயல் மணிக்கு 215 கிலோமீட்டர்கள் வேகத்தில் வீசி, அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளைக் கலங்கடித்தது. 71 பேர் உயிரிழந்தனர். $70 முதல் $200 பில்லியன் டாலர்கள் வரை சேத கணக்கு விரிந்தது. பல்வேறு மனிதர்கள் தங்கள் வாழ்விடங்களை விடுத்து இடம்பெயரும் அவல நிலை ஏற்பட்டது. ஆனால், ஹார்வியால் இடம்பெயர்ந்தது மக்கள் மட்டும் அல்ல. கடல் வாழ் உயிரினங்களும்தான். அப்படிக் கரை ஒதுங்கிய ஒரு அரியக் கடல் உயிரினம்தான் இந்த விசித்திர பிராணி.

ஹார்வி வலுவிழந்த பிறகு, அமெரிக்காவின் பறவை ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தைச் (National Audubon Society) சேர்ந்த பிரச்சி தேசாய் டெக்சாஸ் கடற்கரையில் வலம் வந்துகொண்டிருந்தார். அவர்தான் கரையில் கிடந்த இந்த உயிரினத்தை முதலில் கண்டறிந்துள்ளார். மிருகங்கள் மற்றும் பறவைகள் குறித்து அவர் நிறையப் படித்திருந்தாலும் அவருக்கே இந்த மிருகத்தை அடையாளம் காண முடியவில்லை.

கடல் உயிரினம்

படங்கள்: twitter.com/preetalina

“பார்த்தவுடனேயே புரிந்தது, அவ்வளவு பரிச்சயம் இல்லாத இது, நிச்சயம் ஆழ்கடலில் வாழும் மிருகம் என்று. முதலில் இது Sea Lamprey (ஒருவகை ஆபத்தான ஒட்டுண்ணி) என்றே தோன்றியது. ஆனால், அருகில் வந்து பார்த்தபோது, அதன் வாய் மிகவும் வித்தியாசமாக இருந்தது. சுற்றிச் சுற்றி நடந்துவிட்டு, அதன் உடலை புரட்டிப் போட்டு பார்த்தோம். எதுவும் புரியவில்லை. இதைப் படம்பிடித்து டிவிட்டரில் போட்டால் அதிலிருக்கும் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உதவுவார்கள் என்று நினைத்தேன். அவர்களுக்கு இப்படிப்பட்ட வேலைகள் செய்வது மிகவும் பிடித்தமான ஒன்று” என்று விரிவாக விவரித்தார் பிரச்சி.

அவருக்குப் பதிலளித்த உயிரியலாளர்கள் பலர், இந்த உயிரினம் ஈல் வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தெரிவித்தனர். ஆனால், அவற்றில் எந்த வகை என்பதைக் கண்டுபிடிக்க தான் மிகவும் நேரம் எடுத்துக்கொண்டனர். பெரும்பாலானோர் கூறிய வகை “Fangtooth snake-eel” (நச்சுப்பற்களைக் கொண்ட பாம்பு-ஈல்). Tusky Eel (டஸ்கி ஈல்) என்றும் அழைக்கப்படும் இது, பெரும்பாலும் மெக்ஸிக்கன் வளைகுடாவில் (Gulf of Mexico) காணப்படுகின்றன. இவ்வகை ஈல்கள் பெரும்பாலும் 30 முதல் 90 மீட்டர் ஆழத்தில் மட்டுமே வாழும். எப்போதாவது மட்டும் ஆழம் இல்லாத பகுதிக்கு வந்து இளைப்பாறும். இதற்குக் கண்கள் உண்டு என்றாலும், அவை அளவில் மிகவும் சிறியது. எனவே, பிரச்சி தேசாய் அதன் உடலைப் பார்க்கும் முன்னரே கண்கள் மக்கிப் போயிருக்க வாய்ப்புகள் உண்டு.

கடல் உயிரினம்

படங்கள்: twitter.com/preetalina

வரலாற்று ஆராய்ச்சிக்குப் பெயர்போன ஸ்மித்சோனியன் தேசிய அருங்காட்சியகத்தின் டாக்டர் கென்னத் டிகே (Dr. Kenneth Tighe) பேசுகையில், “இது டஸ்கி ஈல் என்று தோன்றினாலும், கார்டன் அல்லது காங்கர் இன ஈல்களாகவும் (Garden or Conger Eels) இருக்கலாம். அவற்றின் பற்களும் இப்படித்தான் இருக்கும். அவை இரண்டுமே டெக்சாஸில் தான் வாழும். மூன்றையும் வேறுபடுத்திக் காட்டும் ஈலின் வால் இங்கே மிகுந்த சேதம் அடைந்துள்ளது. வாலின் முனையைப் பார்க்காமல் அதன் இனத்தைத் துல்லியமாக கூற இயலாது” என்றார்.

இயற்கையின் சீற்றத்தில் இருந்து எதுவும் தப்புவதில்லை என்பதற்கு இந்த அரிய வகை ஈல் ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement