அரசுப் பள்ளிகளுக்கு குறைவான நிதி .. நவோதயா பள்ளிகளுக்கு அள்ளிக்கொடுக்கும் அரசு! | Tamil nadu government should stand against navodaya schools: says educationalists

வெளியிடப்பட்ட நேரம்: 08:28 (15/09/2017)

கடைசி தொடர்பு:08:28 (15/09/2017)

அரசுப் பள்ளிகளுக்கு குறைவான நிதி .. நவோதயா பள்ளிகளுக்கு அள்ளிக்கொடுக்கும் அரசு!

நவோதயா பள்ளிகள்

த்திய அரசின் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் தொடங்கப்பட வேண்டும் என்பதற்கு கல்வியாளர்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளன. நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெயகுமார் தாமஸ் என்பவர் உயர் நீதமன்றத்தின் மதுரைக் கிளையில் ஒரு மனு செய்தார். அதில், இந்தியா முழுவதும் 600 இடங்களில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்திலும் இது போன்ற பள்ளிகள் தொடங்க உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர். சுவாமி தாதன் அடங்கிய பெஞ்ச், தமிழகத்தில் நவோதயாப் பள்ளிகள் அமைப்பது குறித்து 8 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது.

சமூக அறிவியலில் தமிழ் பண்பாடு இல்லை

நவோதயா பள்ளிகள் 1989-ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழகத்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டங்களில் பங்கேற்ற முன்னாள் பேராசிரியர் சிவகுமாரிடம் பேசினோம்.
“ராஜிவ் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர், புதிய கல்வி கொள்கையைக் கொண்டு வந்தார். உயர் கல்வியில் சுயநிதி கல்லூரிகள் தொடங்க அனுமதிக்கலாம், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தொடங்கலாம், இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா  பள்ளிகள் தொடங்கப்படும் என்றெல்லாம் அதில் சொல்லப்பட்டது.

நவோதயா பள்ளிகளில், கிராமங்களில் உள்ள திறன்வாய்ந்த குழந்தைகளை சேர்ப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்தப் பள்ளிகள் மாணவர்களுக்கு கட்டணம் இல்லா கல்வியை வழங்குவதோடு, மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு ஹாஸ்டல் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. தமிழகத்தில் இந்தப் பள்ளிகள் தொடங்குவதற்கு கடுமையாக நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தோம். ஆனால், இந்த விஷயத்தில் இந்தித் திணிப்பு என்பதை விடவும், நவோதையா பள்ளிகளில் கற்பிக்கப்படும் சமூக அறிவியல் பாடத்தில் தமிழ் மொழி சார்ந்த, தமிழ்நாடு சார்ந்த பண்பாடு, வரலாறு எதவுமே இல்லை. இதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும். தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளிலும் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று கோத்தாரி குழு பரிந்துரை செய்த து. இந்த சூழலில் நவோதயா பள்ளிகள் என்ற பெயரில், தகுதி வாய்ந்த குழந்தைகளுக்கு தனியாக பயிற்சி அளித்து உருவாக்குவது சரியான விஷயமாக இருக்காது.

நவோதயா பள்ளிகள்

நவோதயா மாணவர்களுக்கு அதிக நிதி

தி.மு.க ஆட்சியின்போது கல்வி அமைச்சராக இருந்த க.அன்பழகன் டெல்லியில் நடந்த ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது நவோதயா பள்ளிகளை திறக்கக்கூடாது என்று கடுமையாக எதிர்த்தார். மாணவர்களை தரம் பிரித்து ஒரு சாராருக்கு தரமான கல்வி அளிப்பது போன்றவற்றை யுனிசெப் எதிர்க்கிறது. ஐன்ஸ்டீன் ஆரம்ப கால கட்டங்களில் எழுத்தை தலைகீழாக எழுதுவார். அவரை அவரது ஆசிரியர் 'நீ எல்லாம் உருப்பட மாட்டே' என்று சொன்னார். பின்னாளில் அவர்,  ஒரு சிறந்த அறிவியலாளர் ஆக மாறினார்.
தமிழகம் தவிர பிற மாநிலங்களில்  589 நவோதயாப் பள்ளிகள் இருக்கின்றன. இரண்டு லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு மாணவனுக்கு 85 ஆயிரம் ரூபாய்  செலவழிக்கின்றனர். நாடு முழுவதும்  1099 கேந்திர வித்யாலயா பள்ளிகள் இருக்கின்றன. இதில் 11.7 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு மாணவருக்கு 27 ஆயிரம் ரூபாய் செலவு செய்கின்றனர்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஒரு மாணவருக்கு  14 ஆயிரம் முதல் 22 ஆயிரம் ரூபாய் வரை செலவழிக்கின்றனர். பிற மாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஒரு மாணவனுக்கு இதை விடக் குறைவாகத்தான் செலவழிக்கின்றனர். ஏன் இவர்கள் நவோதயா பள்ளிகளின் மாணவர்களுக்கு செலவழிக்கும் 85 ஆயிரம் ரூபாயை அனைத்து அரசு பள்ளிகளின் மாணவர்களுக்கும் செலவழிக்கவில்லை. ஏன் இந்த பாகுபாடு, மாணவர்களை பிரித்து வைத்து தரம் பிரிப்பதைத்தான் எதிர்க்கிறோம். ராஜிவ் காந்தி டூன் பள்ளியில் படித்தார். அது போன்ற ஒரு பள்ளியை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டுதான் நவோதயாப் பள்ளிகளை உருவாக்கினார். ஆனால், நாங்கள் வலியுறுத்துவது என்னவென்றால், டூன் பள்ளி போல அரசு பள்ளிகள் மாற்றப்பட வேண்டும் என்பதுதான்.  ஒருதரப்பினருக்கு மட்டும் நல்ல கல்வி, இன்னொரு சாராருக்கு தரமில்லாத கல்வி என்று இந்த அரசாங்கம் செய்வது வஞ்சகம்தானே?

பலவீனமான ஆட்சிதான் காரணம்

நவோதயா, கேந்திர வித்யாலயா பள்ளிகளில் படிப்பவர்கள் பல்வேறு போட்டித்தேர்வுகளில் பங்கேற்று உயர் கல்விக்குச் செல்கின்றனர். ஆனால், அரசு பள்ளி மாணவர்கள் அவ்வாறு செல்ல முடிவதில்லை. ஏன் அரசு பள்ளிகளை நவோதயாப் பள்ளிகள் போல தரம் உயர்த்தக் கூடாது. தரம் பிரித்து வித்தியாசம் பார்ப்பதால்தான் அனிதா போன்றவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். கருணாநிதி, ஜெயலலிதா போன்ற வலுவான தலைவர்களின் ஆட்சியின்போது தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்தொடங்குவது பற்றி எந்தப் பேச்சும் இருப்பதில்லை. இப்போது இருக்கும் பலவீனமான ஆட்சியைப் பயன்படுத்தி நவோதயா பள்ளிகளை தொடங்கலாம் என்று நினைக்கிறார்கள். இது குறித்து உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். நவோதயா பள்ளிகள் தொடங்க அனுமதி அளிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்" என்றார்.  

 கோத்தாரி குழுவின் பரிந்துரை

பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டோம். "தமிழ்நாட்டின் இரு மொழி கொள்கை இருக்கிறது. நவோதயா பள்ளிகளில் மும்மொழி கொள்கை உள்ளது. தமிழ் கற்பிக்கப்படுமா என்பதில் மிகப்பெரிய கேள்வி இருக்கிறது. இந்தி படிக்க வேண்டும் என்ற சூழல் உருவாகக் கூடும். சுதந்திரத்துக்குப் பின்னர் 40 ஆண்டுகள் கழித்து 1987-ல் மாவட்டத்துக்கு ஒரு நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டது என்பதே அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான ஒன்று.  சுதந்திரத்துக்குப் பின்னர் அரசியலமைப்புச் சட்டத்தில்,  பத்தாண்டு காலத்துக்கு கட்டணம் இல்லாத கட்டாயக் கல்வி முறை அமல்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டது. அதற்கு எதிராகத்தான் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டன.  பல ஆயிரம் கோடி ரூபாய்களை ஒரு குறிப்பிட்ட பள்ளிக்கு மட்டும் செலவழிப்பதற்கு பதில், அனைத்துப் பள்ளிகளுக்கும் சம மாக செலவழிப்பது தான் பொதுப்பள்ளி முறை. இதைத்தான் கோத்தாரி குழு பரிந்துரை செய்திருந்தது.   

நவோதயா பள்ளிகள் என்பது ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்துவதாக இருக்கிறது. தமிழகத்தில் மாவட்டம் தோறும் 40 ஏழைகளுக்கு நல்ல கல்வியும், 400 ஏழைகளுக்கு மோசமான கல்வியும் வழங்கும் நடவடிக்கை தேவையா? என்பதை சிந்திக்க வேண்டும். இப்போது அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலை இருக்கிறது. அரசு பள்ளிகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கி, வலுப்படுத்த வேண்டும்.

பொதுப்பட்டியலின் விளைவுகள்

மத்திய அரசின் பொதுப்பட்டியலில் கல்வி இருக்கிறது. 1976-க்கு முன்பு தமிழகத்தில் அனைத்துப் பிரிவு மக்களும் அரசு பள்ளிகள் அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில்தான் படித்தனர். 1976-க்குப் பின்னர்தான் தனியார் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அதன் பின்னர்தான் அரசு பள்ளிகள் நலிவடைந்தன. மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்த கல்வி மத்திய அரசின் பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்ட பின்னர்தான் கல்வியின் தரம் குறையத் தொடங்கியது. இந்த சூழலில்  நவோதயா  பள்ளிகளைத் தொடங்கி ஏற்றத்தாழ்வை விதைக்காதீர்கள். நியாயப்படுத்தாதீர்கள்." என்றார்.  

அரசு பள்ளியில் தரம் இல்லை

இது குறித்து வழக்குத் தொடர்ந்த ஜெயகுமார் தாமஸிடம் பேசினோம். "இந்தியாவில் மாநில பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ பாடத்திட்டம், ஐ.சி.எஸ்.இ என்று மூன்று வகையான  பாடத்திட்டங்கள் இருக்கின்றன.  மாநில பாடத்திட்டம் மக்களுக்குப் பொது அறிவைக் கொண்டு வர வேண்டும். ஆனால், இன்றைக்கு மாநில பாடத்திட்டம் தரம் குறைவாக இருக்கிறது.

உயர்கல்விக்கு செல்ல சி.பி.எஸ்.இ பள்ளிகளில் படிப்பது அவசியம். 1986-க்குப் பின்னர் தமிழகத்தைத் தவிர இந்தியா முழுவதும் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டன. 1989-ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு நவோதயா பள்ளிகள் தொடங்குவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால், நவோதயாவில் மாநில மொழிகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தி அல்லது சமஸ்கிருதம் என்பது விருப்ப ப் பாடமாகத்தான் உள்ளது. புதுச்சேரியில் நான்கு நவோதயா பள்ளிகள் உள்ளன. இங்கு தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
நவோதயா பள்ளிகளில் படித்த பலர்  மாவட்ட ஆட்சியாளர், நீதிபதிகள் என்ற பல உயர்பதவிகளுக்குச் சென்றுள்ளனர். தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைக்க வேண்டும் என்று மூன்று வருடமாக முயற்சி செய்து வருகிறேன். இப்போது, மதுரை உயர் நீதிமன்ற உத்தரவின் படி நவோதயா பள்ளிகளை தமிழக அரசு தொடங்க வேண்டும். நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கான இடம், தடையின்மை சான்றிதழ் ஆகியவற்றை தமிழக அரசு தரவேண்டும்" என்றார்.  

தரமான கல்வி

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன், "நவோதயா பள்ளிகளில் நல்ல தரமான கல்வி அளிக்கப்படுகிறது. மாநிலங்களில் நடத்தப்படும் நவோதயா பள்ளிகளுக்கு மத்திய அரசு எல்லாவிதமான நிதி உதவிகளையும் அளிக்கிறது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்படுவது நல்லதுதான். ஆனால், அதன் வழியே இந்தி மொழியைத் திணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை ஒரு சர்ச்சையாக ஆக்காமல், நவோதயா பள்ளிகள் தொடங்கப்படுவதை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று சுருக்கமாகச் சொன்னார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்