வெளியிடப்பட்ட நேரம்: 16:53 (15/09/2017)

கடைசி தொடர்பு:19:06 (15/09/2017)

'சாகா'வாக மாறிவிடும் அபாயத்தில் சாரணர் இயக்கம்!

சாரணர்,சாரணியர் இயக்க அலுவலகம்

ரு பொதுத் தேர்தலுக்கு உண்டான அத்தனை பரபரப்புகளையும் கொண்டுள்ளது 'சாரண, சாரணியர் இயக்கத்துக்கான தேர்தல்'. 'உங்க ஓட்டு காவிக்கா... இல்லை, மதச்சார்பின்மைக்கா' என்ற பரப்புரைகள் சாரண, சாரணிய ஆசிரியர்களை ஓயாமல் வட்டமடிக்கின்றன. செப்டம்பர் 16-ம் தேதி நடைபெறும் தமிழ்நாடு சாரண - சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவிக்கு, பள்ளிக் கல்வித்துறை முன்னாள் இயக்குநர் மணிக்கு எதிராக, தமிழ்நாடு பி.ஜே.பி செயலர் ஹெச்.ராஜா களமிறங்கியதே இவ்வளவு பரபரப்புகளுக்கும் காரணம். 

"உடல், உள்ளம் உள்ளிட்ட பல்வகை ஆளுமைகளை மாணவர்களிடையே வளர்த்து, தனிநபர் என்ற முறையில் சிறந்த குடிமகனாக அவர்களை உருவாக்குவது, அதன்மூலம் சமூக வளர்ச்சிக்குத் துணைநிற்பது என்ற லட்சியத்துடனே பிரித்தானிய ராணுவ அதிகாரி ராபர்ட் பேடன் பவுலால் சாரணர் அமைப்பு 1910-ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது. அது, 1916-ம் ஆண்டு அன்னிபெசன்ட் மற்றும் ஜார்ஜ் அருண்டேல் ஆகியோரால் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. வளர்ச்சிப்போக்கில் தேர்தல் முறையின்மூலம் இயக்கத்துக்கான தலைமைப் பொறுப்புகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் சாரண, சாரணியர் இயக்கத்தில் தலைவர், துணைத் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தல் தற்போது நடைபெற உள்ளது. இதில், ஐந்தாண்டுப் பதவிக்காலம் கொண்ட தலைவர் பதவியை, முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்டக் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் என மொத்தம் 505 வாக்காளர்களின் வாக்குகள் தேர்வு செய்யும். வெற்றி பெறுபவர்களே தமிழ்நாட்டிலுள்ள சுமார் மூன்று லட்சம் சாரண, சாரணிய  இயக்க மாணவர்களை நிர்வகிக்கும் அதிகாரம் பெறுவர். இந்த அதிகாரத்தைப் பெறுவதில்தான் தற்போது போட்டாபோட்டி தொடங்கியுள்ளன" என்கின்றனர் சாரண, சாரணியர் இயக்க ஆசிரியர்கள்.

"ஆர்.எஸ்.எஸ் நேரடிப் பிரதிநிதியான ஹெச்.ராஜா போட்டி போடும்போதே இதன் பின்னணியில் என்னவெல்லாம் இருக்கும் என்று புரிந்துகொள்ளுங்கள்" எனக் குற்றம்சாட்டும் மணி ஆதரவாளர்கள், விரிவாக அதை விளக்கத் தொடங்கினர்.

"கல்வி நிலையங்களுக்கு வெளியே முகாம்கள் அடிக்கடி நடத்தப்பட்டு, மாணவர்களிடையே பொறுப்பு உணர்வு, தற்சார்பு, இயற்கை நேயம், தன்னம்பிக்கை, கூட்டு வாழ்வு, ஒற்றுமை உணர்வு ஆகிய தலைமைப் பண்புகள் இளம் வயதிலேயே இவ்வியக்கத்தின் சார்பாக பள்ளிக்கல்வித் துறை முன்னாள் இயக்குநர் மணிவளர்க்கப்படுகின்றன. இதில், சிறந்து பங்காற்றும் மாணவர்களுக்கு... இறுதியாகக் குடியரசுத் தலைவர் 'சிறந்த சாரணர்/சாரணியர்' விருது வழங்குவார். இப்படி ஓர் உயர்ந்த நோக்கோடு மாணவச் சமூகத்தை வளர்த்தெடுக்கும் ஒரு தலைமைப் பொறுப்புக்கு, அதே துறையில் அனுபவமுள்ளவர்கள் வரும்போது மட்டுமே அதை மேலும் சிறப்பான வழியில் செழுமைப்படுத்த முடியும். 

சாரண, சாரணியர் இயக்கத்தில் துணைத் தலைவராக இருக்கும் பள்ளிக் கல்வித்துறை முன்னாள் இயக்குநர் மணி, சிறந்த 'சாரணர்.' 30 ஆண்டு இயக்க அனுபவமுள்ளவர். சாரண, சாரணியர் இயக்கத்துக்காக நிறைய செய்துள்ளார். மெட்ரிக் கல்வி நிலையங்களிலும் சாரணர் இயக்கத்தை வளர்த்தெடுத்தவர். அவருக்கு எதிராகப் போட்டியிடும் ஹெச்.ராஜா, தீவிரமான இந்துத்துவ கொள்கையுடையவர். பள்ளிகளில் பலதரப்பட்ட மாணவர்களும் உள்ளனர். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது மாணவச் சமூகம். அங்கு, ஒரு குறிப்பிட்ட மதக் கொள்கையைத் தூக்கிப்பிடிப்பவர் தலைவர் பொறுப்புக்கு வந்தால் நிலை என்னாகும்? சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளைத் தீவிரமாக வெளிப்படுத்தி வருபவர் ஹெச்.ராஜா. சாரணர், சாரணியர் இயக்கத் தலைவரானால் அது ஆர்.எஸ்.எஸ் கருத்தியல்களை வளர்த்தெடுக்கும் 'ஷாகா' பயிற்சி இயக்கமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், திருச்சியில் நடந்த பி.ஜே.பி கூட்டத்தில், 'ஆசிரியர்கள் யாரும் வகுப்பறைகளில் பாடம் நடத்துவதில்லை. அவர்கள் கந்துவட்டிக்குப் பணம் கொடுத்து வசூலிக்கும் தொழிலைச் செய்கின்றனர் ' என ஆசிரியர் இனத்தை மோசமாகச் சித்திரித்தார் ஹெச்.ராஜா. இப்படி எல்லாவகையிலும் எதிரான நிலையில் உள்ளவரை எப்படித் தேர்வு செய்ய முடியும்" எனக் குமுறுகின்றனர்.

''சில நாள்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, ஹெச்.ராஜா சந்தித்தார். அப்போதுதான் 'தன்னைத் தலைவராக வெற்றிபெறச்  செய்ய வேண்டும்' என்று கோரிக்கை வைத்ததாகச் சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, 'ஹெச்.ராஜாவுக்கே வாக்களியுங்கள். இல்லையேல், துறைரீதியாகப் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் ' என்று முதன்மைக் கல்வி அதிகாரிகள், வாக்காளர்களை வாய்மொழியாக மிரட்டி வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் இளங்கோவனுக்கு, கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கொடுக்கும் அழுத்தம் இது. மேலும், செயற்குழு தீர்மானம் இல்லாமலேயே புதிய நிர்வாகிகளின் பெயர்கள் சாரண,சாரணியர் இயக்கத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது எல்லாமே ஹெச்.ராஜாவை எப்படியாவது வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கமில்லாமல் வேறொன்றுமில்லை" என்கின்றனர் பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர்கள்.   

எச்.ராஜா

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் , "சாரண, சாரணியர் இயக்கத்துக்குள் புகுந்து காவி, மதவாதக்கொள்கையைப் புகுத்தி ஒற்றுமையான மாணவச் சமூகத்தில் குழப்பம் விளைவிக்க முயலுகின்றனர். இதற்காகவே, ஹெச்.ராஜாவைப் பதவியில் அமர்த்த, தேர்தல் விதிகளை உள்நோக்கத்தோடு மாற்றியுள்ளது ஊழல் அ .தி.மு.க அரசு. இது, தடுக்கப்படவேண்டும்" என அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், பள்ளிக்கல்வித் துறையோ 'இவையனைத்தையுமே மறுக்கிறது'.

இந்நிலையில், நாம் பி.ஜே.பி தேசியச் செயலர் ஹெச்.ராஜாவிடம் பேசினோம்.

"என்னுடைய தந்தையார் 20 ஆண்டுகளாக சாரண, சாரணியர் இயக்கத்தில் பொறுப்பு வகித்தவர். அதன்வழி எனக்குச் சிறுவயதில் இருந்தே இயக்கத்தோடு தொடர்பு உள்ளது. பொதுத்தொண்டு, சேவை மனப்பான்மையை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன் நான். இதை உணர்ந்து என் நண்பர்கள் என்னை இவ்வியக்கத்தின் தலைவர் பதவிக்குப் போட்டியிட வலியுறுத்தினர்.  திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்த இயக்கத்தில் பொறுப்பு வகித்துள்ளார்கள் . நான் கேட்கிறேன், 'அவர்கள் பதவிக்கு வரும்போது, தேசியக் கொள்கையுடைய நான் வந்தால் என்ன தவறு' " என்கிறார் காட்டமாக.  "ஹெச்.ராஜாவை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று யாரும் யாரையும் மிரட்டவில்லை " என்கின்றனர் ஹெச்.ராஜாவுக்கான ஆதரவாளர்கள்.

பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதில் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சியும், சாரண, சாரணியர் இயக்கத்தின் வளர்ச்சியும் உள்ளது. இன்றைய மாணவர்கள், தேசக் கட்டுமானத்தின் நாளையத் தூண்கள். தூண்களை எந்த 'நிறக் கரையான்களும் ' அரித்துவிடாமல் பார்த்துக்கொள்வது பன்முகத்தன்மை பற்றாளர்களின் கடமை.


டிரெண்டிங் @ விகடன்