நவோதயா பள்ளிகளுக்கும், நீட் தேர்வுக்கும் என்ன தொடர்பு? | Relation of navodaya schools with NEET exam

வெளியிடப்பட்ட நேரம்: 08:13 (18/09/2017)

கடைசி தொடர்பு:14:13 (18/09/2017)

நவோதயா பள்ளிகளுக்கும், நீட் தேர்வுக்கும் என்ன தொடர்பு?

 

நீட்

மிழகத்தில் சமீபகாலமாக கல்வித்திட்டம் மற்றும் அது தொடர்பான பல்வேறு பிரச்னைகள் எழுந்துகொண்டிருக்கின்றன. 'நீட்' தேர்வு, ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம், நீட் தேர்வை எதிர்கொள்ளக்கூடிய வகையில் பாடத்திட்டங்களை மாற்றி அமைத்தல், கல்வி உதவித்தொகை குறைப்பு, பள்ளிக் கல்வித்துறைச் செயலரின் அதிகாரம் குறைப்பு என இந்தப் பட்டியல் நீள்கிறது. கல்வி தொடர்பான பிரச்னைகளுக்கு இடையே சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, 'நவோதயா பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்' என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

திராவிடக்கட்சிகளால் தமிழகத்தில் பல ஆண்டுகளாகத் தவிர்க்கப்பட்டு வந்த இதுபோன்ற திட்டங்கள், தற்போது ஓசையின்றி எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கப்படாமல் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

1986-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியால் தொடங்கப்பட்டு, நேருவின் நூற்றாண்டு விழாவில் 'ஜவஹர் நவோதயா பள்ளி' எனப் பெயரிடப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன நவோதயா பள்ளிகள். இந்தியா முழுவதும் மொத்தம் 598 நவோதயா பள்ளிகள் உள்ளன. இவை, சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான உண்டு உறைவிடப் பள்ளிகளாக (Residential School) செயல்படுகின்றன. பொருளாதார அடிப்படையில் இல்லாமல் திறமையின் அடிப்படையில் கிராமப்புற மாணவர்களுக்குத் தரமான கல்வி அளிப்பதே இந்த நவோதயா பள்ளிகளின் முதன்மையான நோக்கமாகும். இந்தப் பள்ளிகளைத் தொடங்க மத்திய அரசு உதவித்தொகை கொடுக்கும். மாநில அரசு, பள்ளிகள் அமைப்பதற்கான இடங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கிராமப்புறங்களில் ஒதுக்கித் தருவதுடன், கட்டமைப்புகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும்.

இப்பள்ளிகளில் சேர்வதற்கு 'நீட்' அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொதுத் தேர்வில் மாணவர்கள் வெற்றிபெற வேண்டும். தேர்வில் மனத் திறன் அறிதல் தொடர்பான கேள்விகள், கணிதம் மற்றும் மாநில மொழி தொடர்பான கேள்விகளே இடம்பெறும். ஆண்டுதோறும் நடைபெறும் நுழைவுத் தேர்வின்மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் 80 மாணாக்கர்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்படுவர். நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே இப்பள்ளிகளில் இடம் கிடைப்பதற்கான ஒரே வழி. இந்த நுழைவுத் தேர்வை எழுதுவதற்கு ஐந்தாம் வகுப்பு இறுதியில் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வுக்கான விவரங்கள் தூர்தர்சன், அகில இந்திய வானொலி, செய்தித்தாள்கள் மற்றும் நவோதய பள்ளிகளின் இணைய தளங்களில் வெளியிடப்படும். 2015-16-ம் கல்வி ஆண்டுக்கான நுழைவுத்தேர்வுக்கு ஒரு கோடியே 89 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். 2018-19-ம் கல்வியாண்டுக்கான விண்ணப்பங்களும் வெளியிடப்பட்டுள்ளன. வரும் கல்வியாண்டுக்கு விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 16.9.2017. நுழைவுத் தேர்வு 18.1.2018 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நவோதயா பள்ளிகளில் 75% கிராமப்புற மாணவர்களுக்கும், 25% நகர்ப்புற மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் 33% பெண்களுக்கும், 2% மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு வகுப்புவாரியாக இடஒதுக்கீடு உள்ளது. 11-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கையானது, மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும். பாடங்கள் பயிற்றுமொழியைப் பொறுத்தவரை, இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம், மாநில மொழி என்றும், இந்தி பேசாத மாநிலங்களில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி என்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஆங்கிலம், இந்தி, மாநில மொழி என்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 

சி.பி.எஸ்.இ மாணவர்கள்

பத்தாம் வகுப்புவரை மட்டுமே இதுபொருந்தும். 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் இந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே பாடங்கள் பயிற்றுவிக்கப்படும். அந்தந்த மாநில மொழி என்பது விருப்பமொழியாக மட்டுமே இருக்கும். அறிவியல் கண்காட்சிகள், விளையாட்டுப் பயிற்சி, கல்சுரல் பயிற்சி, என்.எஸ்.எஸ், என்.சி.சி ஆகியவற்றுடன் மாணவர்கள் இணைந்து செயல்படும் வகையிலும் இப்பள்ளிகள் செயலாற்றுகின்றன.

மேலும், நவோதயா பள்ளிகளுக்குள் குறிப்பிட்ட இரண்டு பள்ளிகளின் மாணவர்களை 'மைக்ரேடு' முறையில் பரஸ்பரம் மாற்றிக்கொண்டு கல்வி கற்பிக்கப்படும் நடைமுறையும் உள்ளது. பொதுவாக இந்தமுறை 11-ம் வகுப்பு மாணவர்களுக்கானதாக மட்டுமே இருந்து வருகிறது. இதனால், பிற மொழிச் சூழலை மாணவர்கள் புரிந்துகொள்ள ஏதுவாகிறது. நவோதயா பள்ளிகளின் கட்டணமும், மிகவும் குறைவானதாகவே உள்ளதால், பெரும்பாலான மக்கள் இத்தகைய பள்ளிகளை விரும்பும் நிலை உள்ளது.

தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் இந்தப் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெயக்குமார் தாமஸ் என்ற வழக்குரைஞர் பொதுநல வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ஜவஹர் நவோதயா பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்குவதற்கு அனுமதி அளிக்க அரசை வலியுறுத்த வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன், கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கம்பர், வடமொழியில் வால்மீகி எழுதிய ராமாயணத்தைக் கம்ப ராமாயணமாகத் தமிழில் கொண்டுவந்தார். கம்பரிடம் இருந்த பிறமொழி அறிவே அவரால் ராமாயணத்தைத் தமிழில் சிறப்பாகக் கொடுக்க முடிந்தது. எனவே, பிறமொழி அறிவு என்பது மாணவர்கள் மேலும் சிறப்பாகச் செயல்படவே உதவும். ஹிந்தி மொழி வேண்டாம் என்றால், தமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளில் மட்டும் இந்தி கற்பிக்கத் தமிழக அரசு அனுமதி அளித்தது ஏன்? தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கும்போது இந்தி கற்பிக்கும் மத்திய அரசுப் பள்ளிக்கு ஏன் அனுமதி அளிக்கக் கூடாது?" எனக் கேள்வி எழுப்பியிருந்தனர். இதுதொடர்பாக, தமிழகக் கல்வித்துறைச் செயலர் விளக்கமளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பினர். 

இதையடுத்து, தற்போது இவ்வழக்கில், நவோதயா பள்ளிகள் அமைக்க தமிழக அரசு எட்டு வாரங்களுக்குள் தடையில்லாச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கட்டுமானத்துக்கான அனைத்து உதவிகளும் கிடைப்பதற்கு மாநில அரசு உறுதி அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நவோதயா பள்ளிகளைப் பொறுத்தவரை, மூன்று மொழிகள் சார்ந்தது என்பதும், இப்பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்பதும் இதைத் தமிழகத்தில் ஏற்றுக்கொள்ளாததற்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. 

நவோதயா பள்ளிகளுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், "சி.பி.எஸ்.இ பள்ளிகளில் மத்திய அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு மட்டுமே இடம் கிடைப்பதால் கிராமப்புற மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைப்பதில்லை. நவோதயா பள்ளிகளைத் தமிழகத்தில் அனுமதிப்பதன் மூலம் தமிழகக் கிராமப்புற மாணவர்களும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் கல்வியைப்பெற வாய்ப்பாக இருக்கும்” என்று கூறியுள்ளார். 

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறும்போது “நவோதயா பள்ளிகள் கிராமப்புறங்களில் தொடங்கப்பட வேண்டும். மாவட்டத்தில் ஏதாவதொரு இடத்தில் இந்தப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டால் அது சரியாக இருக்காது. கிராமப்புறத்தில் ஆரம்பிக்கும்போது இந்தப் பள்ளிகளை வரவேற்கலாம்” என்றார்.

நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் ஆரம்பிப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் நவோதயா பள்ளிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர், “நவோதயா பள்ளிகள் என்பது, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள் போன்றது. தமிழகத்துக்கு அத்தகைய ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள் தேவையில்லை. தமிழக அரசின் சார்பில் போதிய அளவு பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. அந்தப் பள்ளிகளை மேம்படுத்தினாலே போதுமானது" என்றார்.

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையின் அடிப்படையிலேயே கல்விக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. நீட் தேர்வு கட்டாயம் என்பது தற்போது பரவலாக மக்கள் மத்தியில் பதிந்துவிட்டது. இதனால், கிராமப்புற மக்களும் சி.பி.எஸ்.இ. பாடத்தை அடிப்படையாகக் கொண்ட பாடத்திட்டத்தில் பயில்வதுதான், தங்களின் எதிர்காலத்துக்கு நல்லது என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், கிராமப்புற மாணவர்களின் மனதில் இடம்பிடிக்கும் வகையிலேயே நவோதயா பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. 

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு தொடர்பு உண்டு என்பது எதற்குப் பொருந்துமோ, இல்லையோ சமீபத்தில் மத்திய அரசு, தமிழகத்தில் நிறைவேற்றிவரும் ஒவ்வொரு திட்டத்துக்கும், இந்தச் செயலுக்கும் பொருத்தம் இருப்பதாகவே தெரிகிறது.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close