ஒரு விஐபிக்கு 3 போலீஸ் ஒரு லட்சம் மக்களுக்கு 192 போலீஸ்... இதுதான் காக்கி கணக்கு! #VikatanInfographics | India has 3 policemen security for single VIP but 192 police for 1 lakh people!

வெளியிடப்பட்ட நேரம்: 19:28 (18/09/2017)

கடைசி தொடர்பு:08:54 (19/09/2017)

ஒரு விஐபிக்கு 3 போலீஸ் ஒரு லட்சம் மக்களுக்கு 192 போலீஸ்... இதுதான் காக்கி கணக்கு! #VikatanInfographics

போலீஸ்

க்களைப் பாதுகாக்கும், மக்கள் பணிக்காக நியமிக்கப்படும் காவலர்கள் குறித்த பிரதான வரிகள். ''காவல்துறை உங்கள் நண்பன்'' என்பதுதான். ஆனால், இந்தியாவில் உள்ள மொத்த காவல்துறையினர் எண்ணிக்கை தொடர்பான புள்ளிவிவரங்கள், சென்ற வருடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும்விதமாக உள்ளன. இந்தியாவில் முக்கியப் பிரமுகராக இருக்கும் ஒருவருக்கு சராசரியாக மூன்று காவலர்கள் பாதுகாப்பில் இருக்கிறார்கள். ஆனால், இந்திய மக்களைப் பொறுத்தவரை 63 பேருக்கு ஒரு போலீஸ் என்ற விகிதத்திலேயே உள்ளனர் என்ற தகவல் சற்று அச்சம்தரும் புள்ளிவிவரம்தான். 

இந்தியாவில் வி.ஐ.பி என்றால், அவருக்குப் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது இன்று அவசியமாகியுள்ள நிலையில், பொதுமக்களுக்கான பாதுகாப்பு இவர்களுக்கு தரப்படுவதைவிட மிகவும் குறைவாக உள்ளதாகத் தெரிவிக்கிறது காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையம். அதுமட்டுமின்றி, பீகாரில்தான் அதிகளவிலான வி.ஐ.பி.க்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், வி.ஐ.பி. பாதுகாப்பே வழங்கப்படாத பகுதி லட்சத்தீவுகள் என்றும் அந்தத் தகவல் தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மொத்தம் 109 வி.ஐ.பி.-க்களுக்கு 228 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதாவது சராசரியாக ஒரு வி.ஐ.பி.-க்கு இரண்டு காலவர்கள் என்ற அளவில் இருக்கிறார்கள். வட மாநிலங்களில் சராசரியாக ஒரு வி.ஐ.பி-க்கு இரண்டு காவலர்கள் வீதமும், தென்மாநிலங்களில் இந்த எண்ணிக்கை மூன்றுக்கு அதிகமாகவும் உள்ளது.

சாலையில் நாம் நடந்து சென்றுகொண்டிருந்தாலோ அல்லது இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தாலோ, திடீரென பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட  வாகனங்கள் நம்மைக் கடந்துசென்றால் மனநிலை எப்படியாக இருக்கும்? அப்படிக் கடந்து செல்லும் வாகனங்களில் ஏதாவது ஒன்றில்தான், முதல்வர், அமைச்சர் உள்ளிட்ட அரசியல்வாதியோ அல்லது வேறு ஏதாவதொரு துறையைச் சேர்ந்த வி.ஐ.பி-யோ பயணிப்பார். ஆனால், பாதுகாப்பு என்ற பெயரில் அவர்களுக்கு முன்னும், பின்னும் ஏராளமான காவல்துறை வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும். இந்த வாகனங்கள் கடந்து செல்லும்போது எழுப்பும் சைரன் ஒலி ஒருபக்கம் மக்களுக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. ஒரு முக்கியப் புள்ளிக்கு பாதுகாப்பு அளிப்பதில் என்ன பிரச்னை இருக்கப் போகிறது? 'வி.ஐ.பி-யாக இருக்கும்போது அவருக்கு பல தரப்பிலிருந்தும் பிரச்னைகள் உருவாகும். அவருக்குப் பாதுகாப்பு கொடுத்துதானே ஆக வேண்டும்' என்று நினைக்கலாம். உண்மைதான். ஆனால், இப்போது இருக்கும் முக்கியப் பிரமுகர்கள், 'போலீஸ் பாதுகாப்பு என்பதை தங்களுக்கான சமூக அடையாளமாகப் பார்க்கிறார்கள்' என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

Infographics on Police

அரசின் செலவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களை, ஒருசில வி.ஐ.பி-க்கள் தாங்களே பணியமர்த்திக் கொண்டதுபோலக் கருதி, தங்களின் சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்தும் அவலமும் சில மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இதுபோன்ற தருணங்களில் பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்கள் மனம் நொந்துபோய், வேறு வழியில்லாமல் வி.ஐ.பி-க்களின் கட்டளைகளை நிறைவேற்றுகிறார்கள். பாதுகாவலர்கள் மனம் வருந்தும் விஷயங்களும் அவ்வப்போது நடைபெறுவதைக் காண முடிகிறது. போலீஸ் வேலைக்குத் தேர்வாகி, கடினப் பயிற்சி மற்றும் உயர் அதிகாரிகளின் கெடுபிடிகளை எல்லாம் தாண்டி, 'பாதுகாப்புப் பணியில் காக்கிச்சட்டை போட்டு கம்பீரமாக நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும்' என களமிறங்கும் மாநில போலீஸாரில் 19 லட்சத்து 26 ஆயிரம் பேர் வி.ஐ.பி-க்கள் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்படுகிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவில் ஐந்து லட்சம் காவலர்களின் தேவை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்திய மாணவர்களை அடித்துத் துரத்தியதும் போலீஸார்தான். "நான் அணிந்திருக்கும் இந்த காக்கிச் சட்டைதான் என்னை உங்களோடு களத்தில் நின்று போராட விடாமல் தடுக்கிறது" என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் பொங்கி எழுந்ததும் இதே போலீஸார்தான். 

மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் வி.ஐ.பி-க்கள், நலத்திட்டங்களை நிறைவேற்றி மக்களைப் பாதுகாக்கிறார்களா என்பதே மிகப்பெரிய விவாதம். இந்நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய இடத்தில் உள்ள போலீஸார் போதிய எண்ணிக்கையில் இல்லாத சூழலில், அவர்களை வி.ஐ.பி-க்களின் பாதுகாப்புக்காக அதிகளவில் பணியமர்த்தும் நடைமுறைகளை மத்திய-மாநில அரசுகள் நெறிமுறைப்படுத்த வேண்டும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்