காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருமா?! கர்நாடகாவில் என்ன நிலவரம்? | Current status of karnataka assembly election 2018

வெளியிடப்பட்ட நேரம்: 19:46 (20/09/2017)

கடைசி தொடர்பு:16:29 (27/06/2018)

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருமா?! கர்நாடகாவில் என்ன நிலவரம்?

கர்நாடகா தேர்தல் சித்தராமைய்யா

தென்மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடும் முயற்சியில் பி.ஜே.பி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தின் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மே மாதம்தான் நிறைவடைகிறது. இன்னும் எட்டுமாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே காங்கிரஸ், பி.ஜே.பி இரண்டு கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். இப்போதைய சட்டசபையில் காங்கிரஸ் கட்சி 123 எம்.எல்.ஏ-க்களை கொண்டுள்ளது. பி.ஜே.பி-க்கு 44 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். மதச் சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 32 பேர் இருக்கின்றனர். (40 பேர் இருந்தனர். எட்டுப்பேர் சட்டசபையில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.)

மோடி இமேஜ் செல்லுமா?

பி.ஜே.பி-யை பொறுத்தவரை, மோடியின் இமேஜை நம்பித்தான் கர்நாடகாவில் மீண்டும் களம் இறங்குகிறது. அண்மையில் கர்நாடகா மாநிலத்துக்கு வந்த அமித்ஷாவும் இதைத்தான் சுட்டிக்காட்டினார். "எடியூரப்பா தலைமையில் நாம் தேர்தலை சந்திக்க உள்ளோம். மத்தியில் உள்ள மோடி அரசின் நிதி உதவியால் கர்நாடகா மாநிலத்தில் பல நலத்திட்டப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. அது நமக்கு வெற்றியைத் தரும்" என்று பேசி இருக்கிறார்.
பணமதிப்பிழப்பு, பி.ஜே.பி-யின் சிறுபான்மையினர் விரோதப் போக்கு, கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் என்று பல விஷயங்கள் பி.ஜே.பி-க்கு எதிராகவே இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, கடந்த 4 ஆண்டுகளாக மக்களிடம் பெரிய அளவில் எந்த ஒரு கெட்டப்பெயரையும் சம்பாதிக்கவில்லை.

இந்திரா உணவகம்

தேர்தல் வருவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாக சில கவர்ச்சிகரமான திட்டங்களையும் சித்தராமையா அறிவித்துவருகிறார். உதாரணமாக தமிழகத்தில் செயல்படும் அம்மா கேன்டீன் போல கர்நாடகாவில் இந்திரா கேன்டீன் என்ற உணவகத்தைத் தொடங்கி உள்ளார். இந்த உணவகத்தில் காலை உணவு ஐந்து ரூபாய்க்கும், மதிய உணவு பத்து ரூபாய், இரவு உணவு பத்து ரூபாய் என்ற விலையில் வழங்குகின்றனர். இது காங்கிரஸ் கட்சியின் இமேஜை உயர்த்தும் என்று நம்புகின்றனர்.
பி.ஜே.பி தரப்பில் இந்த முறை, எடியூரப்பாவே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது. வழக்கமாக மத்திய கர்நாடகாஎடியூரப்பா பகுதியில் உள்ள ஷிமோகோ தொகுதியில்தான் போட்டியிடுவார். ஆனால், இந்த முறை லிங்கயாத் சமூகத்தினர் அதிகம் உள்ள வடக்கு கர்நாடகாவில் உள்ள பாகல் கோட் தொகுதியில் இருந்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். வடக்கு கர்நாடகாவில் உள்ள 17 சதவிகித லிங்கயாத் சமுகத்தின் வாக்குகள் அவருக்குக் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகள் தெற்கு கர்நாடகா பகுதியில் செல்வாக்கு மிகுந்த கட்சியாக உள்ளன. தெற்கு கர்நாடகாவில் பி.ஜே.பி-க்கு அவ்வளவாக செல்வாக்கு இல்லை.

கருத்துக் கணிப்பு

இதனிடையே, சி-ஃபோர் என்ற தேர்தல் கருத்துக்கணிப்பு அமைப்பு ஒன்று, கர்நாடகாவில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்று கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் 224 இடங்களைக் கொண்ட சட்டசபைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 120 முதல் 132 தொகுதிகள் கிடைக்கும் என்றும், மீண்டும் அந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்றும் கூறப்பட்டது. பி.ஜே.பி-க்கு 60 முதல் 72 இடங்கள் கிடைக்கும் என்றும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 24 முதல் 30 தொகுதிகள் கிடைக்கும் என்றும் கணிப்புகள் வெளியாயின.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்