“எங்களை கைது செய்ததால் அரசின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது!” குண்டர் சட்டத்தில் கைதாகி விடுவிக்கப்பட்ட இளமாறன் | Ilamaran who was arrested along with thirumurugan slams at governments stand over many issues

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (22/09/2017)

கடைசி தொடர்பு:11:40 (22/09/2017)

“எங்களை கைது செய்ததால் அரசின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது!” குண்டர் சட்டத்தில் கைதாகி விடுவிக்கப்பட்ட இளமாறன்

இளமாறன்

னநாயக முறையிலான போரட்டங்களை ஒடுக்குவதற்காக குண்டர் சட்டத்தை கையில் எடுத்த தமிழக அரசுக்குப் பலமான ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எப்போதும் போல் நீதிமன்றமே இந்த முறையும் ஜனநாயகத்தைக் காப்பாற்றியிருக்கிறது. இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்காக ஆண்டுதோறும் மே 17 இயக்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மே 21-ம் தேதி, சென்னை மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தநிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகிய நான்குபேரைத் தடுத்து நிறுத்திக் கைதுசெய்த போலீஸார், பின்னர் அவர்கள்மீது குண்டர் சட்டத்தைப் போட்டனர். சுமார் ஐந்து மாத காலம் சிறையில் இருந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்குபேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து செப்டம்பர் 19-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளனர். அவர்களின் சிறைநாள்கள் குறித்தும், அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான முகாந்திரம் என்ன என்பது குறித்தும், 'தமிழர் விடியல்' கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இளமாறனைத் தொடர்பு கொண்டு பேசினோம்...

"இந்தக் கைது நடவடிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

“போராடக்கூடிய மக்கள் போராளிகளை ஒடுக்குவதற்காக, குண்டர் சட்டத்தை இந்த அரசாங்கம் தவறாகப் பயன்படுத்தி வருகிறது. சமூக விரோதிகள்மீது போடவேண்டிய வழக்குகளை 'சமூகத்திற்காக' போராடும் எங்கள்மீது மத்திய அரசின் தூண்டுதலின்பேரில் தமிழக அரசு எங்கள்மீது போட்டுள்ளது. போராட்டம் நடத்தவோ, வன்முறையைத் தூண்டவோ நாங்கள் மெரினா செல்லவில்லை. இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்பதற்காகவே சென்றிருந்தோம். மௌன அஞ்சலி செலுத்தச் சென்ற எங்கள்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. எங்களுடைய இயக்கங்கள் மத்திய அரசுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியது. அந்தக் கோபத்தின் வெளிப்பாடாக மத்திய அரசு, மாநில அரசாங்கத்திற்குக் கொடுத்த அழுத்தம் காரணமாகவே எங்கள்மீது எடப்பாடி பழனிசாமி அரசு இந்த வழக்கைப் போட்டுள்ளது" 

“மத்திய அரசுக்கு எதிரானப் போராட்டத்தை தமிழக மக்கள் அனைவருமே தொடங்கியுள்ளனர். அப்படி இருக்கும்போது உங்களைப் போன்ற குறிப்பிட்ட சிலர்மீது மட்டும் குண்டர் சட்டம் பாயக் காரணம் என்ன?”

“மத்திய அரசின் ஐ.ஓ.சி. அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினோம். அதில் அருண்குமார்மீது வழக்குப் பதிவு செய்தனர். 21 நாள்கள் சிறையில் இருந்துவிட்டு வெளியில் வந்தார் அவர். இதைத் தொடர்ந்து 'முற்றுகைப் போராட்டம் நடத்தத் தூண்டினோம்' என்று கூறி, எட்டு மாதம் கழித்து போலீஸார் இதேவழக்கில் எங்களையும் சேர்த்தனர். அருண்குமார் கைது செய்யப்பட்டு  சிறையில் இருந்த 21 நாள்களில் எங்களைச் சேர்க்காத போலீஸ், எட்டுமாதம் கழித்துப் பொய்யான தகவல்களைப் புனைந்து சேர்த்திருக்கிறது. இவற்றையெல்லாம் வைத்தே குண்டர் சட்டம் போட்டதாகவும் போலீஸ் தெரிவித்தது. இதில் இருந்தே, பழி வாங்கும் நோக்கில் குண்டர் சட்டத்தை எங்கள்மீது அரசு போட்டது தெளிவாகிறது.”

திருமுருகன் காந்தி - குண்டர் சட்டம்

“குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்தது, பழிவாங்கும் நடவடிக்கை என்கிறீர்கள்? இது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை இருக்குமா?"

"எங்களைக் கைது செய்திருப்பதன் மூலம் தமிழக அரசின் முகத்திரை முற்றிலுமாக கிழிந்து தொங்குகிறது. தமிழக அரசு தன்னிச்சையாக செயல்படவில்லை. மத்திய அரசின் அழுத்தத்தில் இயங்கும் கைப்பாவையாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இதன்மூலம்

பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அம்பலமாகியுள்ளது. மத்திய - மாநில அரசாங்கத்தின்மீது மக்கள் நம்பிக்கையற்று உள்ளனர். அரசின் இந்த நடவடிக்கையால் போராட்ட இயக்கங்களின் வலிமை மேலும் கூடியுள்ளது"

“சிறையில் உங்களுக்கு ஏதாவது நெருக்கடிகள் இருந்ததா? சிறை நாள்கள் எப்படிக் கழிந்தன?"

போலீஸ் தரப்பிலிருந்து எந்த அழுத்தங்களும் எங்களுக்கு இல்லை. சிறையில் எங்களுடைய விவாதம் என்பது மக்கள் நலன் சார்ந்த விஷயங்கள் குறித்தே அமைந்திருந்தது. அதைப்பற்றியே விவாதித்துக் கொண்டிருந்தோம்"

“கைது செய்யப்பட்டபோது ஏதேனும் உங்கள் தரப்பு வாதங்களை போலீஸாரிடம் தெரிவித்தீர்களா?”

"நினைவேந்தல் நிகழ்ச்சிக்காகச் சென்றபோது, எங்களைத் திட்டமிட்டு போலீஸார் கைதுசெய்தனர். திருமுருகன் காந்தியை காவல்துறை வேனில் ஏற்றும்போதே குறிவைத்துத் தாக்கினார்கள். இவற்றையெல்லாம் அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுத்தான் வந்துள்ளனர். அவர் தாக்கப்பட்டதற்கு காரணம், மத்திய அரசைக் கடுமையாக அவர் விமர்சித்ததுதான். பல்வேறு பிரச்னைகளை எதிர்த்து நாங்களும் குரல்கொடுத்துக் கொண்டிருந்தோம். இவையெல்லாம் பி.ஜே.பி அரசுக்கு மிகுந்த அழுத்ததை ஏற்படுத்தியுள்ளது என்றே நாங்கள் கருதுகிறோம்"

மற்ற மாநிலங்களில் தாங்கள் நினைத்ததைச் செய்ய முடியும்போது, தமிழகத்தில் மட்டும் பி.ஜே.பி-யால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கம் அக்கட்சிக்கு உள்ளது. அதற்குத் தடையாக, எங்களைப் போன்ற இயக்கங்கள் இங்கு இருக்கின்றன என்ற அளப்பரிய கோபம் எங்கள்மீது உள்ளது. அதன் வெளிப்பாடுதான் எங்கள்மீது பாய்ந்த குண்டர் சட்டம். மக்களைப் பாதிக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை கொடுத்தார் என்பதற்காக வளர்மதிமீது குண்டர் சட்டத்தைப் போட்டது, மிகவும் கொடுமையான விஷயம். இதைவிட இந்த அரசாங்கத்தின் மோசமான நடவடிக்கைக்கு வேறு உதாரணம் இருக்க முடியாது"

இளமாறன் - திருமுருகன்

"சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவே நடவடிக்கை என்கிறது அரசாங்கம். ஆனால், அரசின் இத்தகைய நடவடிக்கை எதைக் காட்டுகிறது?"

"மக்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட திட்டங்களான கெயில், நியுட்ரினோ திட்டம்  உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை எதிர்த்துப் போராடக்கூடியவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் அல்ல. இந்தப் போராட்டங்களை எல்லாம் தலைமையேற்று இங்குள்ள இயக்கங்கள்தான் நடத்திக் கொண்டிருக்கின்றன. அதுபோன்ற இயக்கங்களை முடக்க வேண்டும் என்று அரசு கருதுகிறது. அப்படி முடக்கிவிட்டால் தாங்கள் நினைத்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று மத்திய-மாநில அரசுகள் கருதுகின்றன. அதன் எதிரொலியாகவே எங்களைச் சமூக விரோதிகளாகச் சித்தரிக்கப்பார்க்கின்றன. ஆனால், அந்த முயற்சியில் அரசாங்கம்தான் தோற்றுப்போய் நிற்கிறது. எங்கள்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் நிரூபிக்க இயலவில்லை. எனவே, தலைகுனிந்து நிற்பவர்கள் ஆட்சியாளர்கள்தான். நீட் விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் இழைத்தது மத்திய-மாநில அரசுகள்தான். இதனால், அனிதாவை இழந்து நிற்கிறோம். அவரின் மரணம் தற்கொலை அல்ல; இரண்டு அரசுகளின் செயல்பாடுகளினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட கொலை. இதுபோன்ற காரணங்களால் மத்திய-மாநில அரசுகள்மீது மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர்”  

"சிறைவாழ்க்கை சோர்வைக் கொடுத்துள்ளதா?"

"இல்லை. மாறாக அதிகப்படியான நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இந்த அரசாங்கம் எங்களைக் கண்டு எந்தளவுக்கு மிரண்டுபோய் உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. எங்களுடைய போராட்டக்குணத்தை, அரசின் நடவடிக்கையால் தடுத்துவிடமுடியாது. மக்கள் அவரவர்களுக்கான உரிமையோடு வாழ்வதற்கேற்ற சூழல் உருவாகும்போது எங்களின் போராட்ட குணம் அமைதிபெறும். அதுவரை, பெரியார் வகுத்துக் கொடுத்த வழியில் மக்கள் நலன்கருதி நாங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டுதான் இருப்போம்" 

சிலருக்குப் போராட்டங்கள்தானே புத்துணர்வைக் கொடுக்கிறது!


டிரெண்டிங் @ விகடன்