எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம்... அரசியல் அரங்க பிரதிபலிப்புகள் என்னென்ன?

தமிழக அரசு

குளவிக் கூட்டில் கற்களை விட்டு எறிந்தது போல, தமிழக சட்டப்பேரவையில் இருந்து 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் நீதிமன்றம் வரை சென்று தகிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆம். அ.தி.மு.க-வில் டி.டி.வி. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் ப.தனபால் உத்தரவிட்டுள்ளார். சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து அவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

சட்டசபைக்குள் குட்கா எடுத்துச்சென்ற விவகாரத்தில் தி.மு.க. உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்யக் கூடாது என்று வலியுறுத்தி அக்கட்சி சார்பிலும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சார்பிலான மனுவையும் சேர்த்து விசாரிக்க உயர்நீதிமன்றம் முடிவு செய்தது. இதனிடையே 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அடுத்த விசாரணை அக்டோபர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் என்னவெல்லாம் நடைபெறக்கூடும் என்பதைப் பார்ப்போம். 

இவ்வழக்கில் நீதிமன்றம் அடுத்த விசாரணையை அக்டோபர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ள நிலையில், அதற்கு முன், சபாநாயகர் எந்த அடிப்படையில் எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்தார் என்பதற்கான விளக்கங்களுடன் கூடிய மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார். கொறடாவின் பரிந்துரைப்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகர் சார்பிலான வழக்கறிஞர் எடுத்துக்கூறுவார். அதேநேரத்தில், தகுதி நீக்கம் செய்வதற்கு சபாநாயகருக்கு அதிகாரம் உண்டு என்ற அடிப்படையிலும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். வழக்கின் இறுதித்தீர்ப்பு வரும்வரை இந்தத் தொகுதிகளில் தேர்தல் நடத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுதொடர்பான தேர்தல் ஆணையம் தனது தரப்பு விளக்கத்தை நீதிமன்றத்தில் எடுத்துரைக்கும். தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பலாமா என்று சபாநாயகர் தரப்பு வழக்கறிஞரிடம் கோரிய பிறகே, அதற்கான உத்தரவை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.எம்.எல்.ஏ-க்கள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர், அவர்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைப்பார். அ.தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் என்பதால், கொறடா உத்தரவு என்பது சட்டமன்றத்திற்கு வெளியே பொருந்தாது என்று தெரிவிப்பார்.

தினகரன் ஆதரவு எம். எல். ஏக்கள்

என்றாலும் நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பைப் பொறுத்தே எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் செல்லுமா இல்லையா என்பது தெரியவரும். ஆனால், தகுதிநீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஒருவேளை நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பாத நிலையில், புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், எடப்பாடி பழனிசாமிக்குக் கடந்த பிப்ரவரி மாதம் ஆதரவு தெரிவித்த இதே எம்.எல்.ஏ-க்கள் தற்போது, அ.தி.மு.க. கட்சிக் கூட்டத்தில் அதிருப்தியை எழுப்பாமல், நேரடியாக கவர்னரிடம் நம்பிக்கையின்மை கடிதத்தைக் கொடுத்தது, கட்சி விதிகளை மீறிய செயல் என்று அரசு கொறடா தெரிவித்துள்ளார்.சபாநாயகரின் தகுதிநீக்க உத்தரவும், நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டதே. அதில் எந்தவித மாற்றமும் இல்லை. தகுதிநீக்கத்தை ரத்துசெய்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிகழ்வுகளும் உள்ளன. அதேநேரத்தில், சபாநாயகரின் உத்தரவில் தலையிட முடியாது என்றும் வெவ்வேறு வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும், வழக்குகளின் தன்மை, எம்.எல்.ஏ-க்கள்மீது கூறப்படும் குற்றச்சாட்டு போன்றவற்றைப் பொறுத்து தீர்ப்புகளின் தன்மை வெவ்வேறானதாக உள்ளது. இதற்கிடையே தற்போது எடப்பாடி தரப்புக்கு ஆதரவு அளித்து வரும் எம்.எல்.ஏ-க்களில் மேலும் சிலரை, தினகரன் தரப்பு தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்யலாம். அவர்களும் நீதிமன்றத்தையோ அல்லது கவர்னரையோ நாட முடியும்.

இதுபோன்ற சூழ்நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தொடர்ந்து, அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கும். அடுத்த விசாரணை தினத்தன்று தேர்தல் ஆணையம், சபாநாயகர், நீக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சார்பில் தாக்கல் செய்யப்படவிருக்கும் மனுக்களைப் பொறுத்தே நீதிமன்றம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். மொத்தத்தில், நீதிமன்றம் இறுதித்தீர்ப்பு அளிக்கும் வரை 18 தொகுதிகளிலும் தேர்தல் இல்லை என்பது மட்டும் உறுதி. அந்தத் தொகுதி மக்களுக்குத்தான் வருத்தம். தங்கள் தொகுதிகளில் எந்தவொரு பணிகளும் நடைபெறுமா என்ற ஏக்கத்துடன் அவர்கள் உள்ளனர்.

எப்போதுமே பாதிக்கப்படும் பக்கம் இருப்பதுதான் இதுபோன்ற மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்த மக்களின் தலைவிதியாக இருக்கிறது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!