Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி வேண்டும்!" - மாநில சுயாட்சி மாநாடு கவரேஜ்

மாநில சுயாட்சி மாநாடு

 'தமிழ்நாடு, கேரளம்,புதுச்சேரி' ஆகிய மூன்று மாநிலங்களையம், இம்முறை  ஒரே மேடையில் ஒருங்கிணைத்துள்ளது  'மாநில சுயாட்சி'. செப் 21 ம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் விடுதலை சிறுத்தைகள் முன்னெடுத்த 'மாநில சுயாட்சி மாநாடு ' மக்கள் திரளால் சூழப்பட சரியாக மாலை 7 மணியளவில் மாநாடு உரைகள்  தொடங்கியது.

ஆளுநர் பதவி ஒழித்தல் :

'மாநில சுயாட்சியை வென்றெடுக்க வேண்டும், இந்தியாவில் அதிபர் ஆட்சி முறை திணிக்கும் முயற்சியைக் கைவிடவேண்டும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும், ஆளுநர் பதவி ஒழிக்கப்படவேண்டும்' உள்ளிட்ட 14 தீர்மானங்களுக்குப்  பின் மாநாட்டை தமது தாய்மொழி மலையாளத்தில்  துவக்கி வைத்து  உரையாற்றினார் கேரளா முதல்வர் பினராயி விஜயன். 

கூட்டாட்சிக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் அஜெண்டா :

அவர் உரையாற்றியபோது, "1957 ல் கேரளாவில் எங்கள் கட்சி ஆட்சியமைத்தது. அப்போதைய மத்திய அரசு காங்கிரஸ் தமது அதிகாரத்தை பயன்படுத்தி 1959 ல் ஆட்சியை கலைத்தது. இதுதான் மாநில சுயாட்சியின் மீதான முதல் தாக்குதலாகும். அதிகாரபரவலாக்குவதே ஆரோக்கியமான அரசியல். நம் அரசியல் சட்டம் கூட்டாட்சியை முதன்மையானது என்று வலியுறுத்துகிறது. ஆனால் கூட்டாட்சியை தகர்க்க தேசிய அஜெண்டாவை ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்புகள் பி.ஜே.பி மூலம் முன்னெடுக்கிறது. 'இந்தி, இந்து, இந்துஸ்தானம்' என்பதே அவர்களின் நோக்கம்.   இங்கு வேட்டி கட்டுவதில் கூட வேறுபாடு உள்ளது. சிலர் இடப்பக்கம் கட்டுவார்கள் . சிலர் வலப்பக்கம் கட்டுவார்கள் . இப்படி பல மொழி, பல பண்பாடு கொண்டது நம் நாடு. ஆனால் ஒரே இடத்தில அதிகாரத்தை குவித்தல், ஒரே பண்பாடு, ஒரே மொழி என்ற ஆதிக்கம் போன்றவைகளே  ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்புகளின் தத்துவம். இது ஜனநாயகத்துக்கு எதிரானது. கூட்டாட்சியே நமது அடையாளம். அதற்கு மாநில சுயாட்சி வழிவகை செய்யும். அதன் தொடக்கப்புள்ளி இம்மாநாடு" என்றார்.

எழுச்சி-மோடிக்கு வீழ்ச்சி :

அடுத்து பேசவந்த  மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  ஜவாஹருல்லா, " பி.ஜே.பி-க்கு ஆதரவாக இருக்கும் சிலரை விட, எங்களுக்கே மாநில உரிமைகள் மீது அக்கறை உண்டு. அமெரிக்காவில் கூட தனி தனியாக மாகாணங்கள், அதற்கென தனித்தனியாக மாநில கீதம், தேசிய கோடி உள்ளது. ஆஸ்திரேலியாவிலும் இதே நிலை. அப்படியிருக்க ஏன் தமிழ்நாட்டுக்கு என தனிக்கொடி இருக்க கூடாது ? மாநில சுயாட்சி மாநாடு  எழுச்சி, மோடிக்கும், பினாமி அ .தி.மு.க-வுக்கும்  வீழ்ச்சி ஏற்படுத்தப் போகிறது. " என்றார் ஆக்ரோஷமாக.

 கேரளா முதல்வர்  பினராயி விஜயனுடன் மு.க ஸ்டாலின்

நாங்கள் முதல்வரைப் போல் கொத்தடிமையில்லை :

இதற்கடுத்து மைக் பிடித்த சி.பி.ஐ கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் முத்தரசன், "ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் ' னு சொல்றீங்க. அப்புறம் 'கோர்த்துவிட ஆள் வேணாமா ?(பொறுப்பு ஆளுநர் வித்யாசாகராவ்,   ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ்சை கைகள் பிடித்து இணைத்து போஸ் கொடுத்ததை சுட்டிக்காட்டுகிறார் ) மூன்று முறை முதல்வராக இருந்தவர், இப்போது துணை முதல்வர் ஆகியுள்ளார். அதாவது இன்ஸ்பெக்டர் ஏட்டு ஆகியுள்ளார். இன்று வரை 17 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசுக்கு பாக்கி வைத்துள்ளது மத்திய அரசு.மத்திய அரசுக்கு மாநில அரசு துணை போகிறது.  கழகங்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கப்போவதாக பி.ஜே.பி சொல்கிறது. நாங்கள் விட மாட்டோம். எடப்பாடி பழனிசாமி கொத்தடிமையாக இருக்கலாம். நாங்கள் ஏன் இருக்கணும்?" என்றார் 

திருப்புமுனை மாநாடு :

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மைதீன், "இந்திய வரலாற்றில் இம்மாநாடு  ஒரு திருப்புமுனை ஏற்படுத்தும். 2004 ல் 40 எம்.பி க்கள் தமிழ்நாடு, புதுவையில் இருந்து சென்றார்கள். அதனால் 300 திட்டங்களில் 286 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. இதுதான் கூட்டாட்சி " என்றார் ரத்தினச் சுருக்கமாக.

அதிகாரப்பரவலாக்கல் கிராமங்கள்வரை நீள வேண்டும் :

புள்ளிவிவரங்களோடு உரை நிகழ்த்திய சி.பி.எம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தொடர்ச்சியாக , " மாநில சுயாட்சி என்பது மாநில மக்களின் வாழ்வாதாரம், கல்வி உரிமை, வேலைவாய்ப்பு, மொழி உரிமை சம்மந்தப்பட்ட பிரச்சனை. மாநில உரிமைகளை காக்க வேண்டிய எடப்பாடி பழனிசாமி ஆட்சி, பி.ஜே.பி-க்கு காவடி தூக்குகிறது. இம்மாநாடு கொண்டு வந்த தீர்மானங்களை ஏற்கிறோம். அதனோடு கூடுதலாக அதிகாரப்பரவல் என்பது மாநில அரசு கடந்து, ஊராட்சிகள், பேரூராட்சி என குக்கிராமம் வரை செல்லவேண்டும் என்ற தீர்மானத்தையும் இணைத்துக்கொள்ளுங்கள் என்றார் 

நாங்கள் தீயணைப்பு வீரர்கள் :

"எப்போதும் தென்னாடுதான் வட  நாட்டுக்கு வழிகாட்டும். மீண்டும் மாநில சுயாட்சி குரல் இம்மாநாடு மூலம் ஓங்கி ஒலிக்கிறது. இதன்மூலம் வருங்கால வரலாற்றை விடுதலை சிறுத்தைகள் புதுப்பித்துள்ளது" என புகழாரம் சூட்டிய திராவிடர் கழகம் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தொடர்ந்து, "தற்போதுள்ள ஆட்சிக்கு கருப்பு என்றாலே பயம். கிரிக்கெட் மைதானத்துக்கு கருப்பு சட்டையோடு வந்தவர்களை கூட தடுத்துள்ளது. என் இனமே கருப்பு. இதற்கு என்ன செய்யப்போகிறீர்கள் ?! கருத்து சுதந்திரம், உரிமைகள் என அனைத்துக்கும் தடை போடுகிறது பி.ஜே.பி. இந்த பூட்டாட்சிக்கு எதிரான கூட்டாட்சிக்கான குரலே மாநில சுயாட்சி. இங்கு திரண்டவர்கள் மத,சாதி,.பதவி வெறி தீயை அணைக்க கிளம்பிய தீயணைப்பு வீரர்கள். " என்றார் உறுதியான குரலில்.

திருநாவுக்கரசுக்கு பொன்னாடை போர்த்தும் திருமாவளவன்

நான் முதலில் தமிழன் :

பொறுமையாக பேச்சை தொடங்கிய தமிழ்நாடு காங்கிரஸ்  தலைவர் திருநாவுக்கரசு " இந்தியை ஒரு மொழியாக கற்பதில் தவறில்லை. ஆனால் இந்தி திணிப்பை எப்போதுமே நான் எதிர்க்கிறேன். கர்நாடகாவை எங்கள் கட்சியே ஆட்சியமைத்தாலும், காவிரி நதிநீருக்காக தமிழ்நாட்டை  சேர்ந்தவராக இங்குள்ள அனைவரோடும் இணைந்து  குரல் கொடுப்பேன். எங்கள் ராகுல்காந்தி பிரதமராக ஆட்சியமைக்கும்போதும் நிச்சயம் மாநில சுயாட்சி மலரும்  " என்றார்.

ஆட்சி முக்கியமில்லை.கொள்கையே முக்கியம் :

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய புதுவை முதல்வர் நாராயணசாமி ,"வேறு எந்த மாநிலங்களையும் விட ஆளுநர், துணை ஆளுநரால் அல்லோல்படுவது நாங்கள் தான். எத்தனை எத்தனை இடர்களை உண்டாக்குகிறார்கள். மக்கள் நலத்திட்டங்களை துணை ஆளுநர் தடுக்கிறார். பி.ஜே.பி போடும் ஆட்டம் தாங்கல . எந்த அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்சமாட்டேன். எனக்கு ஆட்சி முக்கியமில்லை. கொள்கை தான் முக்கியம். இந்தி திணிப்பை எதிர்ப்போம்". என்றார் 

டிஜிட்டல் இந்தியாவா ? பெடரல் இந்தியாவா ?

இதற்கடுத்து உரையாற்ற வந்த  விழா நாயகரான விடுதலை சிறுத்தைகள் தொல் .திருமாவளவன் ,"  திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி   மாநில சுயாட்சிக்கென மிகவும் தீவிரமாக செயல்பட்டிருக்கிறார். அவர் தொடர்ச்சியாகவே தற்போது விடுதலை சிறுத்தைகள் இம்மாநாட்டை முன்னெடுத்துள்ளது. நீட், ஜி.எஸ்.டி, நவோதயா ,இந்தி திணிப்பு என ஒடுக்குமுறைகள் தொடர்கிறது.  ஒரே கல்வி, ஒரே வரி, ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்பதும், அதன் மூலம் பன்னாட்டு ஏகாதிபத்தியத்துக்கு சேவை புரிவதும் பி.ஜே.பி  தத்துவம். இது  ஜனநாயகத்துக்கு எதிரானதாக உள்ளது. அதிகார பகிர்வு என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை பண்பு. பி.ஜே.பி சொல்வது டிஜிட்டல் இந்தியா. நாம் சொல்வது பெடரல்  இந்தியா. அவர்கள் கொண்டுவர துடிப்பது இந்துத்வா இந்தியா. நாங்கள் கேட்பது சமத்துவ இந்தியா" எழுச்சியோடு பேசியவர், "இது கூட்டணிக்கான அச்சாரமா ? என்கின்றனர். இது கொள்கைக்கான முன்னெடுப்பு " என்றார் புன்னகையோடு.

மாநில சுயாட்சி மாநாடு

அம்பேத்கர் மட்டும் இப்போது இருந்திருந்தால்...

இறுதியாக நிறைவுரை ஆற்ற வந்த தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின், "356 பிரிவின் படி  இரண்டு முறை ஆட்சி இழந்த கட்சி - திமுக. எல்லை பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை, பணம் (நிதி ) இவை தவிர்த்த அணைத்து அதிகாரங்களும் மாநில அரசிடமே இருக்க வேண்டும் என்பதே  'மாநில சுயாட்சி' . 1969 ல் ராஜமன்னார் கமிட்டி அமைத்தார் கலைஞர் கருணாநிதி. 48 ஆண்டுகள் கழித்து மீண்டும் தற்போது  மாநில சுயாட்சி கேட்கிறோம். ஓய்வே இல்லாமல் உழைத்துக் கொண்டிருந்தவர் தலைவர் அம்பேத்கர். அவர் மட்டும் இப்போது இருந்திருந்தால் திருமாவளவன் இருக்கிறார். அவர் எல்லாம் பார்த்துக்கொள்வார் என்று அவர் ஓய்வெடுத்துக்கொள்வார்.' அந்தளவுக்கு உழைக்கிறார் திருமாவளவன்.  மாநில சுயாட்சி மாநாடுகளை ஏனைய மாநில கட்சி தலைவர்களை  அழைத்து , பல மாநிலங்களிலும் மாநில சுயாட்சி மாநாடுகளை தி.மு.க முன்னெடுக்கும்." என்றார் அழுத்தமாக.

மத்திய பி.ஜே.பி மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை மாநாட்டில் திரண்ட ஒவ்வொருவரும் காய்ச்சி எடுத்தனர். இரண்டு மாநில முதல்வர்கள், தமிழ்நாட்டின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் என மத்திய பி.ஜே.பி ஆட்சிக்கு எதிராக தொல் . திருமாவளவன் ஒருங்கிணைத்த  இந்த கூட்டணி, தேசிய அரசியலில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.  "மாநில சுயாட்சி என்ற இலக்கை அடையும் வரை  போராட்டப் பயணம் தொடரும்" என்றனர் மாநாட்டில் குழுமியிருந்தனர். ஒரு புதிய அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது மாநில சுயாட்சி மாநாடு.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement