அரை நூற்றாண்டைக் கடந்த மாநில சுயாட்சித் தத்துவம்... இப்போதும் ஏன் அவசியமாகிறது? | '50 years of States Autonomy Demand' Why is it now necessary?

வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (24/09/2017)

கடைசி தொடர்பு:10:50 (24/09/2017)

அரை நூற்றாண்டைக் கடந்த மாநில சுயாட்சித் தத்துவம்... இப்போதும் ஏன் அவசியமாகிறது?

அண்ணா

"அதிகாரங்களின் மேலதிகாரம் அனைத்தும் டெல்லியில் இருப்பதை மாற்றிடத்தான் மாநில சுயாட்சித் தத்துவம் பிறந்தது. மாநில சுயாட்சி என்பது, தேவையின் அடிப்படையில் எழுந்த அரசியல் கோரிக்கையை தவிர; அரசியல் கட்சிக் கோரிக்கை அல்ல".  1960-களில் அப்போதைய முதல்வர் அண்ணா பேசியது இது. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இப்படி முழங்கினார் பேரறிஞர் அண்ணா.

அப்போது மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லாமல் பார்த்துக்கொண்டது காங்கிரஸ். அதற்கு எதிராகவே மாநில சுயாட்சி தத்துவத்தை வலியுறுத்தி, அதிகாரக் குவிப்பை உடைத்து நொறுக்கினார் அண்ணா. 50 ஆண்டுகளுக்குப் பின்னர் அண்ணா பேசிய மாநில சுயாட்சித் தத்துவத்தை மீண்டும் பேசத் தொடங்கியிருக்கிறது தமிழகம். மாநில சுயாட்சிக் கோரி போராட்டங்களும், மாநாடுகளும் நடைபெறுகின்றன. தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் மாநில சுயாட்சியை வலியுறுத்தத் தொடங்கி  இருக்கின்றன. எல்லோரும் ஒரே மேடையில் அமர்ந்து மாநில சுயாட்சிக்குக் குரல் கொடுக்கிறார்கள். எந்தக் கட்சியின் நடைமுறைக்கு எதிராக மாநில சுயாட்சி கோரிக்கை முதன்முதலில் முன்மொழியப்பட்டதோ, அந்தக் காங்கிரஸ் கட்சியும் மாநில சுயாட்சி கோரும் கூட்டங்களில் பங்கேற்பதுதான் சுவாரஸ்யம். 

அரை நூற்றாண்டுக்கு முந்தைய மாநில சுயாட்சிக் கோரிக்கைகளை வலுவாக முன்வைக்க வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டிருப்பதாகவே சொல்லப்படுகிறது. உண்மையில், மாநில சுயாட்சி அவசியம்தானா... கூடுதல் அதிகாரம் தேவைதானா என்பது எல்லாம் இப்போது மீண்டும் விவாதப்பொருளாகி இருக்கிறது.

அண்ணா

நாடுமுழுக்க பரவிய மாநில சுயாட்சித் தத்துவம் !

"நான், அண்மையில் டெல்லி உணவு அமைச்சகத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். உணவு அமைச்சர் ஜெகஜீவன் ராம் ஊரில் இல்லாததால், துணை அமைச்சர் ஷிண்டே என்பவர் பேசினார். கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலையிலிருந்து சர்க்கரையை வெளிக்கொணரும் உத்தரவு டெல்லியிலிருந்து வராததால், பெருத்த நஷ்டம் ஏற்படும் என்ற விஷயத்தை அவருக்குக் கூற முயன்றேன். ‘கள்ளக்குறிச்சி’ என்ற பெயரைப் புரிந்துகொள்ளவே 15 நிமிடமாயிற்று. பெயரைப் புரிந்துகொள்ள முடியாததற்காக அவர்மீது நான் குற்றம்சாட்டவில்லை. சர்க்கரை ஆலை இருப்பதோ தமிழ்நாட்டில். அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் டெல்லியில் என்று அதிகாரத்தைப் பிரித்துக் கொடுத்தார்களே... அவர்கள்தான் குற்றவாளிகள்" எனக் கடுமையான வாதத்தை முன்வைத்தார் அண்ணா.

"மத்திய சர்க்காரிடம் அதிகாரங்கள் குவிந்திருக்கும்வரையில் கோடிக்கணக்கில் செலவுசெய்து நிறைவேற்றப்படும் திட்டங்கள் பலனளிக்கப் போவதில்லை. திட்டங்கள் டெல்லியிலே தீட்டப்படுவது நிறுத்தப்பட்டு, மாநிலங்களில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். டெல்லி சர்க்கார், ஒரு மாநிலத்துக்கும் இன்னொரு மாநிலத்துக்கும் தொடர்பு ஏற்படுத்துகின்ற வகையில் இயங்க வேண்டுமே தவிர, திட்டங்களைப் போடுவதற்கும் நிதியைப் பங்கிட்டுக் கொடுப்பதற்கும் அதிகாரங்கள் இருக்கக்கூடாது; மாநிலங்களுக்குத் திட்டங்களைத் தீட்ட அனுமதி கொடுத்தால்தான் பலன் தரத்தக்க வகையில் திட்டங்கள் அமையும்" என அண்ணா சொன்னதையடுத்தே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாநில சுயாட்சி கோரிக்கைகள் பரவத் தொடங்கின.  மாநிலக் கட்சிகள் வலுவாக உள்ள மாநிலங்களில் எல்லாம் மாநில சுயாட்சிக் கொள்கை முன்னெடுக்கப்பட்டது. ஜோதிபாசு, என்.டி.ராமராவ், ராமகிருஷ்ண ஹெக்டே எனப் பல முதல்வர்கள் மாநில சுயாட்சிக் கோரிக்கையை முன்வைத்தார்கள்.

மாநில சுயாட்சி கருணாநிதி

உரிமைக்கு குரல் கொடுப்போம்... உறவுக்கு கை கொடுப்போம் !

மத்திய அரசின்கீழ் கையேந்தி மாநிலங்கள் நின்ற நிலைமாறி மாநிலங்களைச் சார்ந்தும், அவற்றை அனுசரித்தும் மத்திய அரசு இயங்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கியது இந்தக் கோரிக்கை. அதற்குப் பின்னால் தமிழக முதல்வரான கருணாநிதியும் மாநில சுயாட்சிக் கோரிக்கையை வலியுறுத்தியே வந்தார். ''உரிமைக்குக் குரல் கொடுப்போம்... உறவுக்குக் கை கொடுப்போம்'' எனக் கருணாநிதி சொன்னது அதைத்தான் உணர்த்தியது. சுதந்திர தினவிழாவன்று தலைமை செயலகத்தில் ஆளுநர் தான் கொடியேற்றுவார் என்பதை மாற்றி, முதல்வர் கொடியேற்ற அனுமதி பெற்றுத்தந்தவர் கருணாநிதி தான். தொடர்ந்து எம்.ஜி.ஆரும் அண்ணா ஏற்றிய சுயாட்சி தீபத்தை அணையாமல் பார்த்துக்கொண்டார். 

பெரியாரின் இயக்கத்தில் இல்லாத, அண்ணாவோடு பணியாற்றிடாத ஜெயலலிதாகூட மாநில சுயாட்சித் தத்துவத்தில் திடமாகவே இருந்தார். யாருக்கும் அடங்கிப்போகாமல், மாநிலத் தேவைகளுக்கு ஏற்ப முடிவெடுத்துச் செயல்படக் கூடியவராக இயங்கினார்.

ஜெயலலிதா

மாநில சுயாட்சியில் உறுதி காட்டிய ஜெ !

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், புது டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சி மன்றத்தில் ஜெயலலிதா பேசிக்கொண்டிருந்தபோது, அவரைப் பேச்சை நிறுத்துமாறு சொல்லி மணி அடித்தார்கள். அப்போது, ''இது, எனக்கு இழைக்கப்பட்ட அவமானம் அல்ல... 7 கோடி தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம்'' எனச் சொல்லி வெளியேறினார் ஜெயலலிதா. பொதுத்துறை நிறுவனமான 'நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்' பங்கை 10 சதவிகிதம் விற்பது என மத்திய அரசு முடிவெடுத்த நேரத்தில், ''விற்பது என்றால் அதை வாங்குவதற்கு மாநில அரசு தயார்'' எனச் சொல்லி, பொதுத்துறை நிறுவனத்தின் பங்கை மாநில அரசு வாங்கிய அரசியல் வரலாற்றை உருவாக்கினார். "ஒரே வரிவிதிப்பு முறை எனும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு என்பது மாநிலத்துக்கு இழப்பை ஏற்படுத்தும். இதை ஈடுகட்டாமல் அதை ஆதரிப்பதற்கு வாய்ப்பில்லை" எனச்சொல்லி அதைக் கடுமையாக எதிர்த்தார் ஜெயலலிதா. இவை எல்லாம் அவர் மாநில சுயாட்சித் தத்துவத்தில் உறுதியாக இருந்ததையே காட்டியது.

இப்படித் தனித்துவமாக இருந்த தமிழகம், கல்விக் கொள்கை, மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் உரிமை, மொழிப் பிரச்னை, ஒடுக்கப்பட்ட மக்களின் வேலைவாய்ப்பு, பண்பாடுகளுக்கு எதிரான செயல்பாடு என அண்மைக்காலங்களில் மிகவும் நெருக்கடியான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. அண்மைக்காலத்தில் 'நீட்' இதற்கு மிகச்சரியான உதாரணமாகவே இருக்கிறது. மாநிலத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப கல்வித்திட்டம் என்பதுதான் தமிழகத்தின் கொள்கையாகவே இருந்துவந்தது. ஆனால், மாநிலத்தின் அனுமதியே இல்லாமல் 'நீட்'டைத் திணிப்பது என்பது மாநில உரிமைகளுக்கு எதிரான மிகப்பெரிய வன்முறையாகவே பார்க்கப்படுகிறது. அதோடு மாநில உரிமைகளில் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துவது என்பது தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளில் நடந்திராத ஒன்று. 

தமிழக தலைமை செயலகம்

தேவையின் அடிப்படையிலேயே மாநில சுயாட்சி !

"மாநிலங்களிலே ஆட்சிப் பீடத்திலே அமர்த்தப்படுகிற எவரும், டெல்லி மூலவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு அவர்கள் கிழிக்கிற கோட்டைத் தாண்ட முடியாத வகையில் நடந்தாக வேண்டும். எஜமானனாக இருந்து... டெல்லி அவர்களை ஆட்டிப் படைக்கும். எடுபிடிகளாக இருந்து குற்றேவல் புரிந்தாக வேண்டும் இவர்கள். அடிக்கொரு முறை காவடி எடுத்து ஐயனே... மெய்யனே... என்று அகவல் பாடி, தேவைகளை நேரம் பார்த்து பக்குவமாக எடுத்துக்கூறி கிடைத்ததைப் பெற்று, இயன்றால் மகிழ்ந்து, இல்லையானால் மனக்குமுறலை மிக ஜாக்கிரதையாக மூடி மறைத்து, போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற ‘திருப்தி’யை வரவழைத்துக் கொள்ள வேண்டும்" என 1960-களில் அப்போதைய சூழல் குறித்து அண்ணா சொன்னதுதான் இப்போதும் நடக்கிறது. இந்தச் சூழலில்தான், மாநில சுயாட்சி என்ற கோரிக்கை இப்போது வலுக்கத் தொடங்கியிருப்பதை, தேவையின் அடிப்படையில் என்றே நாம் பார்க்க வேண்டும்.

"மத்திய, மாநில உரிமையை ஆய்வுசெய்ய ஆணையம்; அதிபர் ஆட்சியைத் திணிக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு; ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் கூடாது; மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்ய வேண்டும்; ஆளுநர் பதவி கூடாது; மாநிலங்களுக்குப் பொருளாதார தற்சார்பு நிலை; ஜி.எஸ்.டி. ரத்து செய்ய வேண்டும்; மாநிலங்களிடையே சமத்துவம் இருக்க வேண்டும்; நீதி நிர்வாக அதிகாரங்கள் மாநிலத்துக்கு வேண்டும்; கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுசேர்க்க வேண்டும்" இவை எல்லாம் அண்மையில் நடந்த விடுதலைச்சிறுத்தைகள் நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். இவை எல்லாம் இன்று புதிதாகச் சொல்லப்பட்டவை அல்ல... அண்ணா காலத்திலேயே தீவிரமாகப் பேசப்பட்டவை. 

மாநில சுயாட்சி மாநாடு

அரை நூற்றாண்டுக்குப் பின்னர்...

மாநில சுயாட்சி என்பது பிரிவினைவாதம் என்று ஒருதரப்பால் பார்க்கப்படுகிறது. 1960-களில் மாநில சுயாட்சி கோரியவர்கள் தேசத்துக்கு எதிரானவர்கள் என அப்போதைய காங்கிரஸ் தலைவர்களால் விமர்சிக்கப்பட்டனர். இப்போது அதே விமர்சனத்தை பி.ஜே.பி. வைக்கிறது. உண்மையில், மாநில சுயாட்சி கோரிக்கை இப்போது வலுவடைவது என்பதை அதிருப்தியின் குரலாகவே பார்க்க வேண்டும். 

மத்திய அரசு வரம்பு மீறும்போதும், மாநில உரிமைகள் மறுக்கப்படும்போதும் தான் மாநில சுயாட்சிக்கொள்கை வலுவாக முன்னிறுத்தப்படுகிறது. 1960-களில் இதுபோன்ற சூழலின்போதுதான் மாநில சுயாட்சிக் கோரிக்கை முன்மொழியப்பட்டது. அதுதான் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடவைத்தது; தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி கொண்டு வரவேண்டும் என்ற குரலை எழுப்பியது. இப்போது 'ஒரே நாடு; ஒரே அரசு' என்ற ரீதியில் மத்திய அரசு செயல்படுவதுதான், மாநில சுயாட்சிக்கொள்கை குறித்து பேசப்படுவதற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. 

மாநில சுயாட்சிக் கோரிக்கைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்னது கவனிக்கத்தக்கது. "1967-ம் ஆண்டு அண்ணா பேசியதை நாம் கவனிக்க வேண்டும். 'வெறும் அரசியல் நடத்த, ஆட்சி அமைக்க மட்டும் நமது கட்சி இருக்கிறது என்று நினைக்காமல், 67-க்குப் பிறகும் தொடர்ந்து 50 ஆண்டு காலத்துக்காவது நமது பணி இருக்கிறது என்ற கடமை உணர்ச்சி நம் மனதில் ஆழப்பதிய வேண்டும்' எனச் சொல்லி இருந்தார். அவர் சொன்ன 50 ஆண்டுகள் முடிந்துவிட்டதைத்தான் இன்றைய அ.தி.மு.க. ஆட்சி  கண்முன் நிறுத்துகிறது" என்றார். 

மாநில சுயாட்சிக்கு முதல்முறையாகக் குரல்கொடுத்தது தமிழகம்தான். இப்போது மீண்டும் அதே குரல் 50 ஆண்டுகளுக்குப் பின்னால் தமிழகத்தில் இருந்து வலிமையுடன் எழுப்பப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்