வெளியிடப்பட்ட நேரம்: 17:32 (25/09/2017)

கடைசி தொடர்பு:20:01 (25/09/2017)

செமஸ்டருக்கு 128 ரூபாய் மட்டுமே! ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆச்சரியங்கள்

பொருளாதாரப் படிநிலையின் அனைத்துப் பிரிவினரும் இன்று உயர்கல்விக் கனவில் அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும்போது அதற்கு முட்டுக்கட்டை இடுவதுபோன்று இருப்பது கல்விக் கட்டணம்தான். ஏனெனில், இன்று பள்ளிப்படிப்புக்கே சில ஆயிரங்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் என்றால் கேட்கவே வேண்டாம். லட்சங்களில்தான் கட்டணம். இந்தச் சூழ்நிலையில் உயர்கல்விக்கு எனும்போது தமிழகம் மட்டும் அல்ல... இந்தியா முழுவதும் கல்விக்கான கட்டணம் சில ஆயிரத்துக்கும் குறைவதில்லை. அதுவும் ஆய்வுப் படிப்புகள் எனும்போது கல்லூரிகள், மாநிலப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள் என எதுவான போதும் கட்டணம் ஆயிரத்துக்கும் குறைவாக இல்லை. ஆனால், இந்தியாவில் ஜே.என்.யு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஒரு பருவத்துக்கான கல்விக்கட்டணம் வெறும் 128 ரூபாய் மட்டுமே. 

கட்டணங்களும் பிற வசதிகளும்!

இந்தியப் பல்கலைக்கழகங்களில் முதன்மையானது, சிறந்த பல்கலைக்கழகத்துக்கான ஜனாதிபதி விருது எனப் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இந்தப் பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணம், பருவத்துக்கு 128 ரூபாய் மட்டுமே. ஆம், கல்வி வியாபாரம் ஆகிவிட்ட இந்தச் சூழலில், இந்த அளவுக்குக் குறைந்த கட்டணத்தில்... கல்வி, உலகின் எந்தப் பகுதியிலும் இருக்க வாய்ப்பில்லை. கல்விக் கட்டணம் மட்டும் அல்ல, சான்றிதழ்கள் வாங்க 100 ரூபாய்க்குமேல் கட்டவேண்டியதில்லை. இதை எல்லாம்விட முனைவர்பட்ட ஆய்வேடு சமர்ப்பிக்க வெறும் 100 ரூபாய்தான். இந்தியாவின் ஏனைய பல்கலைக்கழகங்களில் இதற்காக ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படும்போது இத்தொகை எவ்வளவு குறைந்தது என்பது புரியும்?

இவ்வளவு குறைவான கட்டணம் வசூல் செய்யும் பல்கலைக்கழகத்தில் ஏனைய வசதிகள் எவ்வாறு இருக்குமோ என்ற கேள்வி எழுவது இயல்புதான். இது ஓர் உறைவிடப் பல்கலைக்கழகம் ஆகும். அதாவது, இங்கே சேரும் மாணவர்களுக்கு ஒரு மாதத்துக்கும் குறைவான காலகட்டத்திலேயே தங்குவதற்கு விடுதி கிடைத்துவிடுகிறது. இப்பல்கலையில் மொத்தம் 14-க்கும் மேற்பட்ட விடுதிகள் உள்ளன. விடுதியின் ஒவ்வோர் அறைக்கும், இருவர் என்பதாகவும் முனைவர்பட்ட ஆய்வாளர்களுக்குத் தனி அறை என்பதாகவும் ஒதுக்கப்படுகின்றன. பருவத்துக்கு விடுதிக்கான கட்டணம் இருவர் இருக்கும் அறை என்றால் 690 ரூபாயும், தனி அறை என்றால் 720 ரூபாயும் கட்டணமாகப் பெறப்படுகிறது. இது தவிர்த்துக் கட்டணமாக உணவுக்கு மாதம் 2,100 முதல் 2,400 வரை மட்டுமே  இருக்கிறது.

சேர்க்கை, தங்குமிடம் என்பது மட்டும்தான் இங்கே சிறப்பு என்றால், இவற்றை எல்லாம்விடச் சிறந்தது இங்கே இருக்கும் நூலகம். நூலகம் 9 தளங்களை உடையது. தரைத்தளத்தில் ஒரேநேரத்தில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வசதி உள்ளது. ஆனால், காலை 9.30-க்குப் பிறகு போகும் எவருக்கும் இங்கே இடம் கிடைப்பதில்லை. இது, தவிர்த்துச் செய்தித்தாள், வாரமாத இதழ்கள் வைத்திருக்கும் பகுதி உள்ளது. ஜெ.என்.யு-வின் நூலகத்தில், மாதம் லட்ச ரூபாய்க்கும் அதிகமாக இதற்காக ஒதுக்கப்படுகிறது. 

தேர்தல் முறை!

ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான அமைப்பு செயல்படுகிறது. இம்மாணவர் அமைப்பு 1971-ம் ஆண்டில் மாணவர்களால் உருவாக்கப்பட்டது. அதாவது, இந்தப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கப்பட்டது. இதற்கான விதிமுறைகள் எல்லாம் மாணவர்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இது, நிர்வாகத்தின் தலையீடு இல்லாமல் இயங்கும் ஓர் அமைப்பாகும். இதற்கான தேர்தல் ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்திலும் நடைபெறும். தேர்தலில் பொதுக்குழுவுக்கான தலைவர், துணைத்தலைவர், பொதுச் செயலாளர், இணைச் செயலாளர் என்ற 4 பதவிகளுக்கான உறுப்பினர்களும் ஒவ்வொரு துறைக்குமான ஆலோசகர்களும் வாக்கெடுப்பின்மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இத்தேர்தலை நடத்தும் தேர்தல் குழுவும் மாணவர்களாகவே இருப்பர். இத்தேர்தலின் முக்கியமான சிறப்பம்சம் போட்டியாளர்கள் மாணவர்களின் முன்னிலையில் பொதுவெளியில் தங்களது வாக்குறுதிகளைக் கொடுப்பார்கள்.  மாணவர்கள் அவர்களிடம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். குறிப்பிட்ட மாணவ அமைப்பின் மீதான விமர்சனங்கள் அவ்வமைப்பின் சார்பாகப் போட்டியிடும் மாணவரிடம் கேட்கப்படும்.  ஒவ்வொரு பதவிக்கும் போட்டியிடுவோர் பிற அமைப்புகளின் மீதான விமர்சனங்களையும் கேள்விகளையும் வைப்பர். அது தொடர்பான பதில்களையும் விளக்கங்களையும் அம்மேடையிலேயே பகிர்ந்துகொள்வர். இத்தகைய விவாதங்களே அவ்வாண்டின் மாணவத் தலைவரைத் தேர்தெடுப்பதில் அடிப்படையாக அமையும். இத்தகைய தன்மையானது பொது அரசியலில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நிகழ்வு.

தற்போது ஜே.என்.யு-வில் வரும் கல்வியாண்டின் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு ஆறு மாதம் முன்பே நடக்கவிருக்கும் தேர்வுக்கான பதிவு இணையதளத்தின்மூலமே செய்ய இயலும். அதற்கான விவரம்

இணையத்தில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் - 13.10.2017

தேர்வு நடைபெறும் நாள்கள் - 27 – 30.12.2017

தமிழகத்தில் தேர்வு நடைபெறும் இடங்கள் - சென்னை, மதுரை, கோவை.

இணைய முகவரி - https://admissions.jnu.ac.in/


டிரெண்டிங் @ விகடன்