மூன்று வருடங்கள், முடிவில்லா ஆராய்ச்சிகள்… இஸ்ரோ நிகழ்த்திய மங்கள்யான் மேஜிக்! | Mangalyaan completes three years successfully on space

வெளியிடப்பட்ட நேரம்: 09:02 (28/09/2017)

கடைசி தொடர்பு:09:03 (28/09/2017)

மூன்று வருடங்கள், முடிவில்லா ஆராய்ச்சிகள்… இஸ்ரோ நிகழ்த்திய மங்கள்யான் மேஜிக்!

ங்கள்யான் தயாராக இருக்கிறது. எண்கள் தலைகீழாக எண்ணப்படுகின்றன.

10, 9, 8,...

தொலைக்காட்சிகளின் முன்னால் அமர்ந்திருந்த எண்ணற்ற இந்தியர்களின் மனதில் ஒரு வித பதற்றம். நம்மால் முடியுமா?

7, 6, 5…

இந்தியிலும், ஆங்கிலத்திலும் நடப்பதை விளக்கிக் கொண்டிருக்கும் வர்ணனையாளர்கள் குரலிலும் இப்போது ஒரு வித நடுக்கம்.  

4, 3,...

இப்போது அங்குக் கூடியிருந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முகத்திலும் ஒரு வித கலவரம்.

2, 1…

அந்த நீண்ட ராக்கெட் குழலின் கீழ் மஞ்சள் நிற வெளிச்சக் கீற்று. உயிர் காற்றை பெற்று உயிர் பெறுகிறது அந்த ராக்கெட். மஞ்சள் நிற வெளிச்சம், அனல் கக்கும் தீ ஜுவாலையாக வளர்கிறது.

0, +1, +2,...

மங்கள்யான்

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில், வானை நோக்கி தன் அசுர வேகப் பயணத்தை தொடங்கியிருந்தது அந்த ராக்கெட். அதனிடம் இருந்தது மங்கள்யான் எனப்படும் நமது இஸ்ரோவின் மார்ஸ் ஆர்பிட்டர் (ISRO’s Mars Orbiter). இது நடந்தது நவம்பர் 5, 2013. இந்தியா கிரிக்கெட் ஆட்டத்தில் உலகக் கோப்பையை வென்றுவிட்டது என்பதை விடவும் மிகவும் பெருமைவாய்ந்த சாதனை இது. இதற்காக ஆன செலவு 450 கோடி ரூபாய். இது மற்ற நாடுகள் தங்கள் சாட்டிலைட்களுக்காக செலவு செய்வதை விட மிகவும் குறைவுதான்.

அந்த PSLV ராக்கெட் அன்று சுமந்து சென்றது சாதாரண சாட்டிலைட் இல்லை; நூறு கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் கனவு. விண்வெளி ஆராய்ச்சியில் நம்மாளும் சாதிக்க முடியும், முன்னேறிய நாடுகளுக்கு இணையாக நாமும் தொழில்நுட்பத்தில் கில்லிதான் என்று நிரூபிக்க அன்று நம்மிடம் இருந்த ஒரே வாய்ப்பு அதுதான். மங்கள்யான் அந்தச் சாதனையை எட்டிப்பிடிக்கும் முதல் படியை வெற்றிகரமாகத் தாண்டிவிட்டது. 25 நாட்கள் பூமியின் கீழ் வட்டப்பாதையில் சுற்றிவிட்டு செவ்வாய் கிரகத்தை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கியது. சரியாக செப்டம்பர் 24, 2014 அன்று, 718 மில்லியன் கிலோமீட்டர்களைக் கடந்து செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது. முதல் முயற்சியிலேயே பிற கோள்களுக்கு செல்லும் சாட்டிலைட்டை வெற்றிகரமாகச் செயல்படுத்திய முதல் நாடு இந்தியாதான். இது நடந்து மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. ஆறு மாதங்கள் மட்டுமே செயல்படுமாறு உருவாக்கிய மங்கள்யான், மூன்று வருடங்கள் ஆகியும், இன்னமும் அதே வேகத்துடன் எண்ணற்ற தகவல்களை தந்து கொண்டிருப்பதுதான் மிகப்பெரும் ஆச்சர்யம்.

மங்கள்யான் குறித்த சிறப்பு தகவல்கள் மற்றும் இந்த மூன்று வருடங்களில் மங்கள்யான் என்னவெல்லாம் செய்தது, அதைச் சுற்றி என்னவெல்லாம் நடந்தது போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்வோமா?

PSLV

மங்கள்யானை ஏற்றிச் சென்றது, உயிர் கொடுத்தது, செவ்வாய் கிரகத்தில் சரியான பாதையில் சென்று அமர்த்தியது இஸ்ரோவின் பெருமைமிகு படைப்புகளில் ஒன்றான PSLV ராக்கெட்.

மிகக் குறைந்த செலவில், (அதாவது மற்ற முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஒரு சாட்டிலைட்டிற்கு செலவு செய்யும் தொகையில் ஒரு சிறிய பங்கு)   மங்கள்யானை தயாரித்து, முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாகச் செவ்வாய் கிரகத்தைத் தொட்டது இந்தியா மட்டுமே.

மங்கள்யானை வடிவமைத்து, தயாரிக்க இந்தியா விஞ்ஞானிகள் எடுத்துக் கொண்ட கால அவகாசம் வெறும் இரண்டு வருடங்கள் மட்டுமே. இது ஒரு பெரிய செயற்கைக் கோளை தயாரிக்க நாசா போன்ற பெரிய விண்வெளி நிலையங்கள் எடுத்துக் கொள்ளும் நேரத்தை விடக் குறைவான நேரம்தான்.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு புவியியல், உருவகம், வளிமண்டல நிகழ்முறைகள், மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் வளிமண்டலத்தில் இருந்து வெளிப்படும் செயல்முறை போன்ற ஐந்து மிக முக்கியத் தகவல்களை சேகரிக்கவே களம் இறங்கியது மங்கள்யான்.

இந்தத் தகவல்களை சேகரிக்க ஐந்து விதமான நவீன வகை உபகரணங்களை தன்னுடன் கொண்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவை லைமன்-ஆல்ஃபா ஃபோட்டோமீட்டர் (Lyman-Alpha Photometer), மார்ஸ் மீத்தேன் சென்சார் (Methane Sensor for Mars), மார்ஸ் எக்ஸோஸ்பெரிக் நியூட்ரல் காம்போசிஷன் அனலைசர் (Mars Exospheric Neutral Composition Analyser), தெர்மல் இன்ஃப்ராரெட் இமேஜிங் ஸ்பெக்ட்ரோமீட்டர் (Thermal Infrared Imaging Spectrometer) மற்றும் மார்ஸ் கலர் கேமரா (Mars Colour Camera).

ஜூன் 2,  2015 முதல் ஜூலை 2, 2015 வரையிலான காலகட்டத்தில் சூரியன் செவ்வாய்க்கும், பூமிக்கும் இடையில் வந்ததால், அப்போது நமக்கு மங்கள்யானிடமிருந்து எந்தத் தரவுகளும் கிடைக்கவில்லை. இந்த நிகழ்வை ‘பிளாக் அவுட்’ (Blackout) என்று அழைக்கிறார்கள்.

இதே போல், 2016ம் ஆண்டில் மே 18 முதல் 30 வரை சூரியனிற்கும், செவ்வாய்க்கும் இடையில் பூமி வந்ததால் மங்கள்யானிடம் நம்மால் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள முடியவில்லை. இந்த நிகழ்வை ‘வைட் அவுட்’  (Whiteout) என்று அழைக்கிறார்கள்.

மூன்று மாதங்களுக்கு முன், மங்கள்யான் விண்வெளியில் தனது ஆயிரமாவது நாளைக் கொண்டாடியது. அப்போது அதை ஆய்வு செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள் கலத்தில் இன்னமும் 15 கிலோ வரை எரிபொருள் இருப்பதாகவும், எனவே இன்னமும் குறைந்தது ஐந்து வருடங்கள் வரை மங்கள்யான் செயல்படும் என்றும் தெரிவித்தனர்.

மங்கள்யானில் இருக்கும் மார்ஸ் கலர் கேமரா இதுவரை செவ்வாய் குறித்து 750க்கும் மேற்பட்ட வண்ணப் படங்களை படம்பிடித்து அனுப்பியுள்ளது. இதில் செவ்வாயின் வடதுருவ விரிப்பும் அடங்கும்.

மங்கள்யான் வெற்றியின் மூலம் செவ்வாய் கிரகத்தை நெருங்கிய முதல் ஆசிய நாடு, உலக வரிசையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்குப் பிறகு நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்திய இஸ்ரோவிற்கு கடந்த 2014-ம் ஆண்டு அமைதி, ஆயுத ஒழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு வழங்கப்படும் இந்திரா காந்தி பரிசு வழங்கப்பட்டது. 2015ம் ஆண்டில் மங்கள்யானின் வெற்றிக்காக உழைத்த விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழுவிற்கு தேசிய விண்வெளி சங்கம் வழங்கும் அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் விண்வெளி முன்னோடி விருது வழங்கப்பட்டது.

மங்கள்யான் வெற்றியைத் தொடர்ந்து மங்கள்யான் 2 மிஷனிற்கு உண்டான வேலைகளை இஸ்ரோ தொடங்கிவிட்டது. இது செவ்வாயின் வட்டப்பாதையோடு நின்று விடாமல் செவ்வாயில் தரையிறக்கி ஆராய்ச்சி செய்யவும் முடிவு செய்துள்ளது.

செவ்வாய்

இதெல்லாம் விடச் சுவாரஸ்யம் என்னவென்றால், மங்கள்யான் வெற்றிபெற்றபோது ஒரு ஒப்பீடு முன்வைக்கப்பட்டது. ஆங்கிலத்தில் “Gravity” என்ற பெயரில் வெளிவந்த ஹாலிவுட் படமொன்று ஏழு ஆஸ்கார் விருதுகளை வென்று வசூல் சாதனை படைத்தது. படத்தின் மொத்த பட்ஜெட் இந்திய மதிப்பில் 650 கோடியாம். அதை விடக் குறைந்த செலவில் இந்தியா செவ்வாய் கிரகத்தையே தொட்டுவிட்டது. இந்த ஒப்பீடு பாராட்டத்தக்கது என்றாலும், இவ்வளவு பெரிய விண்வெளி சாதனையை நாம் குறைந்த செலவில் நடத்திக் காட்டி விட்டாலும், இன்றும் பல்வேறு தலைவர்களின் சிலைகளை நிறுவ, அரசு ஆயிராயிரம் கோடிகள் வரை இறைத்துக் கொண்டுதான் இருக்கிறது. இதற்குப் பதிலாக அந்தந்த தலைவர்கள் பெயரில் ஒரு நலத்திட்டமோ அல்லது அறிவியல் ஆராய்ச்சி திட்டங்களோ அறிவித்து அதை வெற்றிகரமாகச் செய்து முடித்தால், நாட்டிற்கும் நன்மை; அந்தத் தலைவர்களுக்கும் பெருமைதானே?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close