“மூழ்கிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு மின்வாரியம்!” - அதி்ர்ச்சியளிக்கும் பொறியாளர் | TN electricity board is going to poor condition

வெளியிடப்பட்ட நேரம்: 11:51 (28/09/2017)

கடைசி தொடர்பு:13:13 (28/09/2017)

“மூழ்கிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு மின்வாரியம்!” - அதி்ர்ச்சியளிக்கும் பொறியாளர்

 காற்றாலை மின்சாரம்

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து பயன்படுத்திய வார்த்தை, “தமிழகம் மின்சாரத்துறையில் தன்னிறைவு பெற்றுத் திகழ்கிறது” என்பதுதான். 

“ஒரு மாநிலம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக இருக்குமானால், மின்சாரத்துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலம் என்றாகி விடுமா?" இப்படியான கேள்வி எழாமல் இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய மின்துறை அமைச்சராக நத்தம் விஸ்வநாதன் பதவி வகித்தபோது, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்சாரம் கொள்முதல் செய்ததில், சுமார் 96 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

அந்த ஊழல் என்பது முறையற்ற மின்திட்டங்களைத் தீட்டியதால் ஏற்பட்ட நஷ்டமா? அப்படியானால், எதற்காக அந்தத் திட்டம் தீட்டப்பட்டது? அதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன? போன்ற கேள்விகளை வைத்தே சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினர். அப்படி இருக்க, தற்போது மின்வெட்டு இல்லாமல் இருப்பதால், ‘மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்றுவிட்டது' என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. நமக்கு  வழங்கக்கூடிய மின்சாரத்தில் மத்திய அரசு கொண்டுள்ள கொள்கைமுடிவு போன்றவற்றை அலசி ஆராயவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதுபோன்று மின்சாரத்துறையில் நடக்கும் ஊழல்களை ஆவணப்படம் மூலம் அம்பலப்படுத்தினார் பொறியாளர் காந்தி. 

தற்போதைய நிலையில் தமிழகத்தின் மொத்த மின்தேவை எவ்வளவு? மின்சாரத்தில் தமிழகம் தன்னிறைவு பெற்று விட்டோமா? போன்ற கேள்விகளோடு நாம் பொறியாளர் காந்தியிடம் பேசினோம்.

"எரிசக்தி வளம் கொண்ட பகுதி தமிழகம். மரபுசாரா எரிச்கதி வளம் என்பது தென்னகத்தில் அதிகளவில் இருந்தாலும், அதைப்பற்றி நாம் பேசுவதில்லை. உதாரணமாக, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தமிழகத்தில் அமைந்திருந்தாலும், அவற்றின் பயன்பாடு என்பது மிகவும் குறைவானதே. சுற்றுப்புறச்சூழலைப் பாதிக்கும் அந்த நிறுவனத்தால் தமிழகத்திற்கு பெரிய அளவில் எந்தப்பயனும் இல்லை.

அரசின் சார்பில் தமிழகத்தில் ஆறு அனல் மின் நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. வடசென்னை அனல் மின் நிலையத்தில் 1,800 மெகாவாட் மின் உற்பத்தியும், வல்லூர் அனல் மின் நிலையத்தில் 1,550 மெகாவாட் மின் உற்பத்தியும் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் 2,800 மெகாவாட் மின் உற்பத்தியும், தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 1,050 மெகாவாட் மின் உற்பத்தியும் நடைபெறுகின்றன. மேலும் துணை மின்நிலைங்களின் மூலம் தமிழ்நாடு மின் வாரியத்தேவைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இங்குள்ள அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி வெளிமாநிலங்களிலிருந்து பெறப்படுகிறது. அதாவது 2 கோடியே 30 லட்சம் டன் நிலக்கரியை நாம் இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம். சுமார் ஒரு டன் நிலக்கரிக்கு 4000 ரூபாய் வரை செலவு செய்கிறோம். இதனால், நிதிச்சுமை நமக்கு அதிகரிக்கிறது. இங்கு உற்பத்தியாகும் நிலக்கரியை வெளிமாநிலத்துக்கு மத்திய அரசு விற்பனை செய்கிறது.

நிலம், சுற்றுச்சூழல் எனத் தமிழகத்தின் வளத்தால் கிடைக்கிற நிலக்கரி மற்றும் மின் உற்பத்தியை மத்திய அரசு வேறு மாநிலங்களுக்கு பொறியாளர் காந்தி விற்கிறது. ஒரு வருடத்திற்கு இரண்டு கோடியே 60 லட்சம் டன் எரிபொருளை மத்திய அரசு எடுக்கிறது. ஆனால், மாநிலத்திற்கு மத்தியத் தொகுப்பிலிருந்து வழங்கக்கூடிய மின்சாரம் மிகவும் குறைவாகவே உள்ளது. இப்படியான பிரச்னைகள் ஒருபுறம் இருக்க, தமிழகத்திலிருந்து எரிசக்தி மூலம் கிடைக்கும் மின் உற்பத்தியில் 400 மெகாவாட்டை தனியாருக்கு மத்திய அரசு தாரைவார்க்கிறது. ஆனால், தமிழகத்துக்கு 400 மெகாவாட்டுக்குக் குறைவான மின்சாரமே நெய்வேலியிலிருந்து சப்ளை ஆகிறது. இதுபோன்றதொரு அரசியலைத்தான் தமிழகத்துக்கு வழங்கக் கூடிய மின் உற்பத்தியில் செய்துகொண்டிருக்கிறது மத்திய அரசு. காற்றாலை மூலம் ஏழாயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. இந்தத் திட்டங்களை எல்லாம் தனியாரிடம் கொடுத்துள்ளது மத்திய அரசு. தமிழகத்திற்கு இதனால் எந்தப் பயனும் இல்லை.

மாறாக, தனியாரிடம் ஒரு யூனிட் நான்கு ரூபாய் விலைகொடுத்து மின்சாரத்தை வாங்கிக் கொண்டிருக்கிறோம். அதற்காக தனியாரிடம் போடப்பட்ட  ஒப்பந்தங்களுக்காகவும், அதிக விலைகொடுத்து வாங்கியதற்காகவும் தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு 96 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதில் 22 ஆயிரம் கோடியைத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டது. எஞ்சியுள்ள கடனை எப்படி தமிழ்நாடு மின்சார வாரியம் அடைக்கப் போகிறது என்பது தெரியவில்லை. இந்த பிரச்னையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தின் எதிர்காலத் தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி இருந்தாலும், 15 வருடங்களுக்கும்மேல் தனியாரிடம் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்குச் செலவு செய்ய வேண்டிய மோசமான நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளது. எனவே, தமிழகம் மின்சார உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது என்று சொல்வதைவிட, மூழ்கிக்கொண்டிருக்கிறது மின்சாரவாரியம் என்பதுதான் உண்மை" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்