ஜெயலலிதா மரணம்... விடை கிடைக்கா சில கேள்விகளும் விசாரணை கமிஷனும்!

ஜெயலலிதா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் விசாரணை கமிஷன் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வின் நீதித்துறை உறுப்பினராக உள்ளார். ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பான விவகாரம் 2013-ல் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தபோது, ''கர்நாடக நீதிமன்ற முடிவுகளில் சென்னை நீதிமன்றம் தலையிட முடியாது'' என்று கூறியவரும் இவரே. 'கமிஷனின் விசாரணை அறிக்கை மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்படவேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவருக்கு இருந்த ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு குறித்த மெடிக்கல் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, ஒருவருடத்துக்கு முன்பு இதே போன்றதொரு செப்டம்பர் மாதத்தில்தான், அன்று அவர் அனுமதிக்கப்பட்டது தொடங்கி டிசம்பர் 2016-ல் ஏற்பட்ட  திடீர் இறப்பு வரையான சில கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்காமலேயே இருக்கின்றன.   

1.சர்க்கரை நோய் தாக்கம் இருந்ததாகக் கூறப்பட்ட ஜெயலலிதாவுக்குத் திடீரென நுரையீரல் மற்றும் இருதயக் கோளாறு ஏற்படக் காரணம் என்ன?

2. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ரிச்சர்ட் பியெல், செப்ஸிஸ் நோய் சிகிச்சை நிபுணர். செப்ஸிஸ் தாக்கத்திலிருந்து ஒருவர் குணமடைந்தாலும், அவரின் 25 சதவிகித உடல் ஆரோக்கியத்தைத்தான் திரும்பப் பெற முடியும் என்பது உண்மையா...? செப்ஸிஸ், குணமடைவதற்கான சிகிச்சைகள் உள்ளனவா... சிகிச்சை இல்லையென்றால், ஜெ. உடல்நிலை தேறி வருகிறார் என்று மருத்துவர்கள் தொடர்ந்து கூறி வந்தது ஏன்? 

3. அப்போலோ மருத்துவமனையின் ஒரு தகவலில், முதல்வர் ‘pulmonary edema’ நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்குப் பிறகான பத்திரிகையாளர்களுடனான மருத்துவர்கள் சந்திப்பில்... ''ஜெயலலிதா செப்ஸிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்'' என்றார் டாக்டர் ரிச்சர்ட். இந்த முரண்பட்ட கருத்து ஏன்?

4. தமிழக மருத்துவச் சிகிச்சை வரலாற்றில், ‘எக்மோ’ என்னும் கருவி பற்றிச் சாமான்யர்கள் கேள்விப்பட்டது ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் வழியாகத்தான். எக்மோ கருவியின் செயல்பாடு என்ன... வென்டிலேட்டர் கருவியைவிட, அது மேம்பட்டதா... எக்மோ கருவியின் உதவியுடன், ஒரு நோயாளியை எவ்வளவு நாள்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்திருக்கலாம்?

5. எக்மோ உதவியுடன் மீண்டும் குணமடைவது சாத்தியமா? எக்மோ பொருத்தப்பட்ட ஒருவருக்கு தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமா? எக்மோ பொருத்துவதால் குணமடைவது சாத்தியம் இல்லையென்றால் அந்த சிகிச்சை அவருக்கு அளிக்கப்படக் காரணம் என்ன?

6. 4.12.2016 அன்று திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்படுவதற்கு முந்தைய நிமிடங்கள் ஜெயலலிதாவின் உடல்நிலை எப்படி இருந்தது?

7. ரிச்சர்ட் முதன்முதலில் அவரை மருத்துவமனையில் சந்தித்தபோது... அவரால் பேச முடிந்ததா?, அவர் ரிச்சர்டிடம் என்ன சொன்னார்?

8. ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக சிகிச்சை அளிக்க வேண்டி ரிச்சர்டை முதன்முதலில் தொடர்புகொண்டது யார்?

9. ஜெயலலிதா உடல்நிலை தொடர்பான ரிச்சர்டின் முதற்கட்டத் தகவலறிக்கை என்னவாக இருந்தது?

10. ஜெயலலிதாவுக்குத் தர வேண்டிய தீவிர சிகிச்சை தொடர்பாக... என்னென்ன ஆலோசனைகள் ரிச்சர்டால், அப்போலோ டாக்டர்களுக்கு வழங்கப்பட்டன? அவை அத்தனையும் சரிவரப் பின்பற்றப்பட்டனவா?

11. ரிச்சர்ட், கடைசியாக ஜெயலலிதாவைச் சந்தித்தபோது... அவரது உடல்நிலை எப்படி இருந்தது?

12. கண் இமைக்கும் நேரத்தில், அத்தனையும் நிகழ்ந்தேறி உள்ளன. இது எதிர்பார்த்ததுதானா?

13. ''காப்பாற்ற முடியாது என்று தெரிந்ததும் டாக்டர்களே முடிவுசெய்து கருவியை அகற்றினோம்; செயலாளர்களுக்குத் தகவல் தெரிவித்தோம்'' என்றார் டாக்டர் பாபு ஆபிரகாம். மாநில முதல்வரின் உயிர் பற்றி முடிவெடுக்க அப்போலோ நிர்வாகத்துக்கு அனுமதி யார் தந்தது? எப்போதும் அந்த அறையில் உடனிருந்ததாகக் கூறப்படும் மன்னார்குடி குடும்பத்தினர் அப்போது எதுவுமே சொல்லவில்லையா?

14. ''டிசம்பர் 4-ம் தேதி மாலை, திடீர் மாரடைப்பு ஏற்பட்டது; உடனடியாக, எக்மோ கருவி பொறுத்தப்பட்டது; ஆனால், கருவி மட்டுமே இயங்கியது; ஜெ-யின் இதயம் இயங்கவேயில்லை'' என்றது பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவர்கள் தரப்பு. அப்படியென்றால், ஜெ. இறந்தது எப்போது? 4-ம் தேதியா அல்லது 5-ம் தேதியா? 4-ம் தேதியென்றால் அவரது இறப்பை அறிவிக்கத் தாமதம் ஏன்? அவரது நலனுக்காகவா அல்லது சிலரின் அரசியல் நலனுக்காகவா?

15. ''செப்சிஸ் நோய்த் தாக்கம் ஏற்பட... நீண்ட நாள்கள் எடுத்துக்கொள்ளாது, இரண்டு நாள்களில்கூடப் பரவும்'' என்கிறார் டாக்டர் ரிச்சர்ட். அப்படியென்றால் நீர்ச்சத்துக் குறைவு மற்றும் காய்ச்சல் என்றே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, செப்சிஸ் நோய்த் தாக்கம் ஏற்பட்டது எப்போது? எதனால்?

இறுதியாக,

16. ''அம்மாவை (ஜெ-வை) மருத்துவமனையில் நாங்கள் யாரும் பார்க்கவேயில்லை'' என்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். ''நாங்கள் எல்லோருமே பார்த்தோம்'' என்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு. ''அக்டோபருக்குப் பிறகு நாங்களுமே பார்க்கவில்லை'' என்கிறது தினகரன் தரப்பு. யாருமே பார்க்காத ஜெயலலிதாவிடம் எவர் வழியாக ஒப்புதல் பெறப்பட்டு அரவக்குறிச்சி , தஞ்சை மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் அவரது கைநாட்டு வைக்கப்பட்டது?

நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணையில் இதற்கான பதில்கள் கிடைக்குமா? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!