கானா பாடலை இழிவுபடுத்தினாரா சீமான்?- கொந்தளித்த படைப்புலகம் | Did Seeman insult Gana songs?

வெளியிடப்பட்ட நேரம்: 20:25 (28/09/2017)

கடைசி தொடர்பு:11:30 (29/09/2017)

கானா பாடலை இழிவுபடுத்தினாரா சீமான்?- கொந்தளித்த படைப்புலகம்

சீமான்

சீமான்.. தமிழ்நாட்டின் ஆதி இசைப்பாடல் வகைகளில் ஒன்று இறப்பின்போது பாடப்படும் ஒப்பாரி என்றால், தலைநகர் சென்னையின் சாவுப்பாடலாக கானாவும் மக்கள் இசைப்பாடலாக காற்றினிலே வலம்வருகிறது. துள்ளல் இசையோடு செவிப்பறைகளில் மோதும் கானா பாடல்களில் எள்ளல் இல்லாமல் இருந்தால், அது அதிசயம்தான்! 

சாவு வீட்டில் மட்டுமல்லாமல் சகல இடங்களிலும் சென்னையின் இளைஞர்கள், பேருந்து, தொடர்வண்டிப் பயணங்களிலோ தாங்கள் நினைத்த சங்கதியைப் பாட்டாகக் கட்டி உடனுக்குடன் சூடாக அரங்கேற்றமும் செய்துவிடுவார்கள். மனதுக்குப் பிடித்த சூழலில் மயங்கும் இசையில் மண்டையைப் போட்டு உடைப்பதெல்லாம் இந்த கானாப் பாடலாசிரியர்களுக்குப் பழக்கம் இல்லை; படைப்பு, பாட்டு, தாளம் எல்லாமே எளிமைதான் இவர்களுக்கு! 

இருட்டு அடர்ந்த குளுகுளு நட்சத்திர ஓட்டல்களில் மின்னலாய் வெட்டிமறையும் கணநேர விளக்கொளியில் கூச்சலோடு பாய்ந்துவரும் ஓசையிசையில் ஆட்டம் ஆடும் பிரிவினர் அல்ல, கானா பாட்டிசைப்பவர்கள். சென்னையின் பூர்வீகத்தோடு தொடர்புடைய குடியிருப்புப் பகுதிகள், அடையாறு, கூவம் ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாயின் கரையோரம் முழுக்க நீண்டிருக்கும் எளிய மக்களே, கானாவோடு கலந்தவர்கள். அவர்களின் சுக, துக்கங்கள் அனைத்தும் கானா இல்லாமல் இல்லை! 

ஆக்கிரமிப்புக் குடியேற்ற வரலாற்றைக் கொண்ட சென்னையில், ஆங்கிலேயர்களும் டச்சுக்காரர்களும் பாரசீகர்களும் தெலுங்கர்களும் தமிழ் மொழியில் தங்கள் மொழியைக் கலக்கவும் செய்தனர். பல தலைமுறைகளைக் கடந்தும் தலைநகர்வாசிகளிடம் அந்தக் கலப்பின் மிச்சசொச்சங்களும் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக, கானாவில் சென்னையின் மொழிக்கலப்பு வரலாறே அடக்கம்! 

தலைநகர் சென்னையைத் தாண்டி தமிழ் பேசும் மக்கள் இருக்கும் இடங்களுக்கும் திரைப்படங்கள் மூலம் பரவி, வேறொரு பரிமாணத்தையும் கானா பாட்டிசை தொட்டு, சில பத்தாண்டுகள் கடந்துவிட்டன. இந்த நிலையில், கானா பாடல்களுக்கு எதிராக திரைப்பட உலகத்திலிருந்து பிரபலமான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கூறிவிட்டார் என கடந்த இரண்டு நாள்களாக கானா ரசிகர்கள் குறிப்பாக கலைஞர்கள், இலக்கியவாதிகள் மத்தியில் கடுமையான கண்டன முழக்கம் வந்தபடி இருக்கிறது! 

அறுபடும் விலங்கு, கருப்பு விதைகள், கருப்பர் நகரம், வருகிறார்கள், ஒற்றைப் பல் ஆகிய நூல்களின் எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான கரன் கார்க்கியின் விமர்சனத்தில், கானா மீதான பற்றும் சீமான் மீதான கோபமும் தெறிக்கிறது. 

கரன் கார்க்கி“ பாவம் அருமையான அரசியல் அறிவாளி இயக்குநர் மணி வண்ணன். உனக்கு எதையாவது முழுசா கத்து குடுத்துட்டு போயிருக்கலாம் அரைகுறையா கத்துகிட்டு பாவம் நீ பண்ற கூத்து.... நல்ல வேளை அந்த யோக்கியர் இந்த அளப்பறைய பார்க்கல.... சென்னை மொழிய பற்றி உனக்கெல்லா என்ன தெரியும்ன்னு பேசற ... வா மே .....போமே பின்னாடி 375 வருட அரசியல் இருக்குது வா சொல்லித் தர்றோம்.” என்றும், 

“சென்னைக்கு பிழைக்க வரும்போது எவனும் அவங்க மொழி சரியில்ல... குழி சரியில்லன்னு சொல்றதில்ல, கஞ்சி வெங்காயமெல்லாம்.....ஆடு ஊடுன்னு ஆன பிறகு சென்னைல மொழி சரியில்ல , கானா சரியில்லன்னு புலம்புவது ஒன்றும் புதுசு இல்ல... எத்தனையோ காபியும், காரா பூந்தியும், புலம்பி தீர்த்ததுதான் .... அரசியலும், மொழிக்குமான பரிணாம பண்பு விதி தெரியாத ஆட்கள் இப்படியெல்லாம் உளறதான் செய்வார்கள்” என்றும் தன் முகநூலில் பதிவிட்டிருந்தார், எழுத்தாளர் கரன் கார்க்கி. 

முன்னதாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைப்பொதுச்செயலாளர் கருணா கூறியிருந்த கருத்தையொட்டியே, பரவலாக சீமானையும் அவருடைய கட்சியையும் பற்றி கிண்டலாகவும் மோசமாகவும் கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். இன்னும் இந்தப் பதிவுகள் தொடர்ந்துவருகின்றன. 

”கானா பாடலால் தமிழ் சிதைகிறது. எங்கள் தாய்மொழியை நரிக்குறவ பாஷையாக ஆக்கிடாதீங்கடா: சீமான்” என்பது கருப்பு கருணா முதலில் இட்டிருந்த பதிவு. 

கருப்பு கருணாஅத்துடன் அவர் நிற்கவில்லை, சீமானைப் பற்றியே ஒரு கானா பாடல் எடுத்துவிட்டார். அதை வைத்து சீமானின் அரசியல் எதிர்ப்பாளர்கள் இணையத்தில் கொண்டாடி எடுத்துவிட்டார்கள். 

த.மு.எ.க.ச.வின் துணைப்பொதுச்செயலாளர் கருப்பு கருணாவிடம் தொலைபேசியில் பேசியபோது, தனக்கு நம்பகமான ஒருவர் பதிவிட்டதை நம்பியே தான் சீமானைப் பற்றிப் பதிந்ததாகக் கூறியவர், ”சீமான் அப்படிப் பேசக்கூடியவர்தானே?” என்று எதிர்க்கேள்வியும் போட்டார். திருத்துறைப்பூண்டியில் சீமான் இப்படிப் பேசியதாகத் தகவல் என்றும் அவர் கூறினார். 

நம்பிக்கையானவர் என அவர் குறிப்பிட்ட முகநூல் பதிவரைத் தொடர்புகொண்டு விளக்கம்பெற முயன்றோம். அவரிடமிருந்து நமக்கு எந்த பதிலும் வரவில்லை. 

எழுத்தாளர் கரன் கார்க்கியைத் தொடர்புகொள்ள இரண்டு முறை முயன்றபிறகு, பிடிக்கமுடிந்தது. “ அவர்(சீமான்) பேசிய நேரடித் தகவல் என்னிடம் இல்லை. தமிழை, கானாவை விமர்சிப்பவர்களை பொதுவாக எழுதினேன்” என்று அவர் விளக்கம் அளித்தார். 

அடித்தட்டு மக்களின் பாடுகளை படைப்புகளாக ஆக்கும் மதிப்பிற்குரிய கலைஞர்களும் எழுத்தாளர்களும் பொதுவெளியில் கருத்துக்கூறும் ஒரு பொருளைப் பற்றி இந்த அளவுக்குதான் அக்கறையுடன் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. 

நாம் தமிழர் பாக்கியராசன் இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சே.பாக்கியராசனிடம் கேட்டதற்கு,”விமர்சனங்கள் இல்லாமல் அரசியல் இல்லை. ஆனால், தொடர்ச்சியாக சீமான் அவர்கள் சொல்லாத ஒன்றை சொல்லியதாக இணையத்தில் பரப்பப்பட்டு விமர்சிக்கப்படுகிறது. பரப்பப்படும் எல்லா உண்மையற்ற செய்திகளுக்குப் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. இதனால் எங்களை வீழ்த்திவிடலாம் என்று எண்ணி செய்கிறார்கள். உண்மை வெல்லும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் இதை எல்லாம் கடந்து நாங்கள் மக்களிடம் செல்வோம்” என்றார் அவர்.

கடைசியாக, எழுத்தாளர் கருப்புகருணா சர்ச்சைக்குரிய தன் கருத்தை முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார்.


டிரெண்டிங் @ விகடன்