காவிரி நதியின் தூய்மையை மீட்டெடுக்கும் மாணவர்கள்.... | students in action to protect the cleanliness of river cauvery

வெளியிடப்பட்ட நேரம்: 15:27 (29/09/2017)

கடைசி தொடர்பு:15:27 (29/09/2017)

காவிரி நதியின் தூய்மையை மீட்டெடுக்கும் மாணவர்கள்....

காவிரி

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

காவிரியில் கடந்த 12ம் தேதி முதல் 23ம் தேதி வரை 144 ஆண்டுகளுக்குப்பின் மஹாபுஷ்கரம் விழா கொண்டாடப்பட்டது. நடந்து முடிந்த மகா புஷ்கரம் விழாவின்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். குறிப்பாக மயிலாடுதுறையை அடுத்து ஶ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியில் இந்த விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. ஶ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே உள்ள காவிரியில் புனித நீராடிய பக்தர்கள் விட்டுச் சென்ற ஆடைகள் மற்றும் கழிவுப் பொருள்கள் கடந்த சில நாள்களாக கேட்பாரற்று கிடந்தன.

திருச்சி மாநகராட்சியின் சார்பில் துய்மை திட்டத்தின் மூலம் அம்மாமண்டபம் காவேரிகரையில் ஆண்டவன் கல்லூரி, இந்திராகாந்தி கல்லூரி, எஸ்,ஆர்,சி கல்லூரி, ஜோசப் கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த 600 மாணவ, மாணவிகள் மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்100 பேர் இணைந்து தூய்மைபணியை மேற்கொண்டார்கள்.

திருச்சி ஆணையர் இரவிச்சந்திரன் தலைமையில், மாவட்ட கலெக்டர் ராசாமணி தூய்மைப்படுத்தும் பணியைத் தொடங்கி வைத்தார். அவர், கையில் உறை அணிந்துகொண்டு கொஞ்ச நேரம் குப்பைகளை அள்ளினார். அதைப்பார்த்துப் பதறிய பல அதிகாரிகள் குப்பைகளை அள்ளுவதுபோல், போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். பிறகு கலெக்டர் அங்கிருந்து கிளம்பவே, அதிகாரிகளும் அங்கிருந்து கிளம்பினர்.

மாணவர்களின் தூய்மைப் பணி

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

பிறகு மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 600 பேர், இணைந்து அம்மாமண்டபம் காவேரிக்கரை மற்றும் காவிரி ஆறு உள்ளிட்ட பல பகுதிகளில்,  உடைகள், மாலைகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி தூய்மைப்பணியை மேற்கொண்டனர். அதில், சுமார் 10 டன்னுக்கும் மேற்பட்ட குப்பைகளை லாரிகள் மூலம் அகற்றினர். காவிரி புஷ்கரம் விழாவுக்கு வந்த பக்தர்கள் பல ஆயிரம் ரூபாய் செலவழித்து பூஜைகள் செய்தனர். ஆனால், எந்தவித செலவுமின்றி, அந்தக் குப்பைகளை எடுத்து உரிய இடத்தில் போட்டிருக்கலாம் என்பதுதான் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து. திருச்சி மாநகராட்சி சார்பில் காவிரியை கல்லூரி மாணவர்கள் தூய்மைப்படுத்தியது சமூக ஆர்வலர்கள் பலராலும் பாராட்டப்படுகிறது.

ஸ்ரீரங்கத்தில் மட்டுமன்றி, காவிரி புஷ்கரம் விழா நடைபெற்ற காவிரிக் கரையோரங்களில் எல்லாம் மாணவர்கள், தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் காவிரி  நதியை மீட்டெடுக்க முடியும். கர்நாடகா மாநிலம் தண்ணீர் தராததாலும், காவிரியில் அளவுக்கு மீறி மணற்கொள்ளை நடந்ததாலும் நீர் வளம் குன்றிப்போயிருக்கிறது. இது தவிர காவிரியில் புனித நீராடும் பக்தர்கள் குப்பைகளைப் போடுவதாலும் நீர் வளம் குன்றுகிறது. மழை வராதா, நதியில் தண்ணீர் ஓடாதா என்று ஏங்கித் தவிக்கும் இந்த நாள்களில் நதியின் நீரோட்டத்தைப் பாதிக்கும் குப்பைகளைப் போடுவது நல்லதல்ல என்று சுற்றுச்சூழலியலாளர்கள் கூறுகின்றனர். நதியைக் காக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல, நதியில் இறங்கி நம்மைத் தூய்மைப்படுத்திக்கொள்ளும் நம் ஒவ்வொருவரின் கடமையும்கூட. நம்மைத் தூய்மைப் படுத்தும் நதியை நாம் அசுத்தம் ஆக்குவது நல்லதல்ல. மனிதர்களின் அழுக்கை நீக்கிக்கொண்டு, நாள்தோறும் ஓடிக்கொண்டிருக்கும் நதியை அதன் போக்கில் விடுவோம். அதுதான் நாம் இயற்கைக்குச் செய்யும் மரியாதை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்