வெளியிடப்பட்ட நேரம்: 20:01 (29/09/2017)

கடைசி தொடர்பு:20:38 (29/09/2017)

ரோஹிங்யா முஸ்லிம்கள் இந்துக்களைக் கொன்றார்களா?  - அ.மார்க்ஸ்

சென்ற ஆகஸ்ட் 24 அன்று “அராக்கன் ரோஹிங்யா மீட்புப் படை” (Arakan Rohingya Salvation Army - ARSA) என்னும் மியான்மரில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம் தீவிரவாத அமைப்பு மியான்மரின் வடமேற்குப் பகுதியில் உள்ள ராகைன் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் முப்பது காவல் நிலையங்களைக் குறிவைத்துத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் சுமார் 12 காவலர்களும் 59 தீவிரவாதப் படையினரும்  கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அதை ஒட்டி இராணுவம் ரோஹிங்யா மக்களின் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடங்கியது. தாக்குதலுக்குத் தப்பி ஓடி வரும்  அப்பாவி முஸ்லிம்களையும் இராணுவம் சுட்டுத் தள்ளிய செய்திகள் பத்திரிகைகளில் வந்தன. இதுவரை கிட்டத்தட்ட 400 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. மொத்தத்தில் இன்று சுமார் 1,50,000 ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் இன்று இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்தியாவில் சுமார் 40,000 பேர் உள்ளனர். அவர்களை அகதிகளாக ஏற்க முடியாது எனவும், அவர்கள் சட்ட விரோதக் குடியேறிகள் எனவும் சொல்லும் இந்திய அரசு, ஐ.நா அகதிகள் ஆணையத்தின் வேண்டுகோளையும் மீறி, அவர்களை வெளியேற்றுவதில் உறுதியாக உள்ளது.

இதற்கிடையில் சென்ற செப்டம்பர் 13 அன்று ஒரு செய்தி பத்திரிகைகளில் வெளியானது. ஆகஸ்ட் 26, 27 தேதிகளில் ரோஹிங்யா தீவிரவாதிகள் ‘எபாவ்கியா’ எனும் கிராமத்திலிருந்து தொண்ணூறுக்கும் மேற்பட்ட இந்துக்களைக் கொண்டு சென்று ஒரு மலையில் ஏற்றி ஒவ்வொருவராக 86 பேர்களைக் கொன்று விட்டு, மீதமுள்ள எட்டு இந்துப் பெண்களைக் கட்டாயமாக முஸ்லிம் மதத்திற்கு மாற்றினர் என்பதுதான் அச்செய்தி. மியான்மர் இராணுவத்திடமிருந்துதான் இந்தச் செய்தியும் வந்தது. 

இதை உடனடியாக ரோஹிங்யா தீவிரவாதப் படையான ‘அர்சா’ மறுத்தது. தாங்கள் சிவிலியன்களைக் கொல்லவில்லை என அது கூறியது. ஆனாலும் அப்பாவி இந்துக்களைக் கொன்றது அர்சாதான் என மியான்மர் இராணுவம் தொடர்ந்து சொல்லி வந்தது.

எப்படியோ இந்துக்கள் கொல்லப்பட்டது உண்மை. அங்கு வசித்த சக இந்துக்களும் அதைக் கூறினர். இதை ஒட்டி அப்பகுதியில் வசித்த 165 குடும்பங்களைச் சேர்ந்த 510 முஸ்லிம்கள் வெளியேறி வங்கதேசத்தில் உள்ள காக்ஸ் பசார் பகுதியில் இப்போது அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர். 

இப்படி அப்பாவி இந்துக்கள் மத அடிப்படையில் கொல்லப்பட்டது மற்றும் பெண்கள் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டது ஆகியன இந்திய மக்கள் மத்தியில் வருத்ததத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தின. ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை வெளியேற்றுவது என்கிற மோடி அரசின் கொள்கைக்கு ஆதரவு பெருகியது.

எனினும் இது தொடர்பாகச் சில ஐயங்களும் இருந்தன. தாக்குதலுக்குப் பயந்து தப்பித்தோடிய இந்துக்கள் இவ்வாறு சக இந்துக்கள் கடத்திக் கொல்லப்பட்டதை உறுதி செய்தாலும் அப்படிக் கடத்தியது முஸ்லிம்கள் எனச் சொல்லவில்லை. யாரோ கருப்பு முகமூடி அணிந்தவர்கள் என்று மட்டுமே சொல்கின்றனர். பெண்கள் கட்டாயமாக முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர் என்றும் அவர்கள் குற்றஞ் சாட்டவில்லை. 

கடத்தியவர்கள் யாரையும் இராணுவம் இதுவரை பிடிக்கவுமில்லை. அவர்கள் முகமூடி அணிந்திருந்தார்கள் என்று வேறு சொல்கிறது. பிறகு எப்படி முஸ்லிம்கள்தான் கடத்திக் கொன்றதாகச் சொல்கின்றனர் என்பதை அவர்களால் விளக்க முடியவில்லை.  

சரி இது குறித்து மூன்றாவது தரப்பு எதுவும் சொல்லியுள்ளதா?

சொல்லியுள்ளது.

அது அங்கு செயல்பட்டுவரும் “இந்து, பவுத்த, கிறிஸ்தவ ஒற்றுமை இயக்கம்” (Hindu-Buddhist-Christian Oikya Parishad) தான். இதன் தலைவரும் வழக்குரைஞருமான ராணா தாஸ்குப்தா வங்கதேசத்தில் உருவாகி வரும் முஸ்லிம் தீவிரவாதத்திற்கு எதிராக இந்துக்களின் உரிமைகளுக்காகச் செயல்படுபவர். எல்லோராலும் மதிக்கப்படும் இவரும்கூட,  “யாரோ கருப்பு முகமூடி அணிந்த” பயங்கரவாதிகள்தான் இந்துக்களைக் கொன்றதாகச் சொல்கிறாரே ஒழிய முஸ்லிம் தீவிரவாதிகள்தான் அதைச் செய்ததாகச் சொல்லவில்லை. தவிரவும் தற்போது தப்பிவந்து அடைக்கலம் புகுந்துள்ள இந்துக்களைப் பாதுகாப்பாக காக்ஸ் பசாருக்குக் கொண்டு வந்து விட்டதும் முஸ்லிம்கள்தான் எனவும் அவர் கூறுகிறார்.

“யாரோ கருப்பு முகமூடி அணிந்த சிலர்தான் கொன்றார்கள்” என்பதோடு நிறுத்திக் கொள்ளும் அவர் அது யார் என்பதை அறிய சர்வதேச அளவில் நடுநிலையான ஒரு குழுவை அமைக்க வேண்டும் எனவும் சொல்லியுள்ளார். மிகக் கொடூரமான மியான்மர் இராணுவமே இதைச் செய்திருக்க எல்லாச் சாத்தியங்களும் உண்டு என்பதால்தான் ஒரு மூன்றாம் தரப்பு விசாரணையை அவர் கோருகிறார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

அப்படி ஒரு விசாரணையை அமைப்பதில் மியான்மர் அரசுக்கு என்ன தயக்கம்?

இந்நிலையில் சென்ற செப் 24 அன்று அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கல்லறைகளில் இந்துக்களின் சடலங்கள் ஒட்டு மொத்தமாகப் புதைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்தன. 24 அன்று தோண்டப்பட்ட கல்லறையில் 28 சடலங்களும் 25 அன்று தோண்டப்பட்ட கல்லறையில் 17 சடலங்களும் கண்டெடுக்கப்பட்டதாக இராணுவம் அறிவித்தது.
 
இந்நிலையில் மியான்மர் அரசு என்ன செய்திருக்க வேண்டும்? இது போன்ற பெருந்திரள் புதைகுழிகளில் புதைக்கப்பட்டோரை அடையாளம் காண்கிற அல்லது காணாமற் போனோர் குறித்த ஆய்வுக்கான ஆணையம் போன்ற பன்னாட்டு அமைப்புகளில் (International Forum for Mass Grave Victim Identification or the International Commission on Missing Persons)  ஒன்றை அழைத்து அவர்களைக் கொண்டு அந்தச் சடலங்களை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்க வேண்டும்.  அப்படிச் செய்வதற்கு அறம் சார்ந்த இரண்டு நியாயங்கள் உள்ளன. ஒன்று: காணாமற் போனவர்கள் குறித்து அவர்களின் உறவினர்கள் உண்மைகளை அறிந்து கொள்ளல் என்பது ஒரு அடிப்படை மனித உரிமை. இரண்டு: ஒரு வேளை அவர்கள் கொல்லப்பட்டிருந்தால் அவர்களுக்குத் தம் வழமைப்படி இறுதிச் சடங்கு செய்வதுதான் இரத்த சொந்தங்களுக்கு அளிக்கப்படுகிற ஒரே ஆறுதல்.

ஆனால் மியான்மர் அரசும் இராணுவமும் என்ன செய்துள்ளன? 

மேற்குறிப்பிட்ட அமைப்புகளை மட்டுமல்ல தங்கள் நாட்டில் உள்ள பிறநாட்டுத் தூதரக அதிகாரிகள் யாரையும் கூட அழைத்துக் காட்டாமல் நிமார் என்கிற ஒரு இந்து குருக்களை வைத்துச் சடலங்களை நேற்று (செப் 28) அவசர அவசரமாக எரித்துச் சாம்பலாக்கியுள்ளது. இதன் மூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கத் தேவையான ஒரு முக்கிய ஆதாரம் அழிக்கப்பட்டுள்ளது. யாரையும் அழைக்காததற்குச் சொல்லப்படும் காரணம் மழையாம். 

அர்சா அமைப்பின் தாக்குதல் நடப்பதற்கு முன்னதாகவே, “ஒரு அந்நிய அரசின் உதவியோடு அர்சா  பயங்கரவாதிகள் மியான்மரில் உள்ள முக்கிய நகரங்களைத் தாக்க உள்ளனர்” என்றொரு முகநூல் பதிவை மியான்மர் இராணுவத் தலைமையகம் செய்தது. அப்படியான ஒரு ஆபத்து இருந்தால் அதை உரிய முறையில் செய்தியாகவும் எச்சரிக்கையாகவும் வெளியிடாமல் இப்படி ஒரு இராணுவத் தலைமை ஒரு முகநூல் பதிவாக வெளியிட்டதன் நோக்கமென்ன? 

அதே நாளில் ‘மிஸ்சிமா’ என்றொரு செய்தி நிறுவனம் இன்னொரு செய்தியை வெளியியிட்டது. சென்ற ஆகஸ்ட் 25 அன்று ரோஹிங்யா தீவிரவாதிகள்  அராக்கன் மாநிலக் காவல் நிலையங்களைத் தாக்கியதுடன் இன்றைய பிரச்சினைகள் தொடங்கியதை அறிவோம். அந்தத் தாக்குதல் முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் (IS) மற்றும் பாகிஸ்தானின் ஆதரவுடன் நடந்தது என்பதுதான் அது. ரோஹிங்யா முஸ்லிம்களை பாகிஸ்தான் மற்றும் பன்னாட்டு ஐ.எஸ் பயங்கரவாதத்துடனும் முடிச்சுப் போடும் செயலாக இது அமைந்தது.

மிஸ்சிமா இன்னொன்றையும் சொல்லியது. வங்கதேசத்தின் சிட்டகாங் பகுதியில் பாகிஸ்தானின் ISI உளவுத்துறை ரோஹிங்யா தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கிறது என்பதுதான் அது. சிட்டகாங் பகுதி என்பது மிகப் பெரிய அளவில் வங்கதேசத்தின் இராணுவம் மற்றும் உளவுத்துறைக் கண்காணிப்புகள் குவிக்கப்பட்ட ஒன்று. அங்கு இப்படியான பயிற்சி என்பதெல்லாம் சாத்தியமே இல்லை என்கிறார் தென் ஆசிய மனித உரிமை ஆவண மையத்தின் ரவி நாயர். எனினும் எந்த ஆதாரமுமின்றி மிஸ்சிமா அப்படிக் கூறியது. 

யார் இந்த மிஸ்சிமா செய்தித் தளத்தை இயக்குபவர்கள்?

இது டெல்லியிலிருந்து இயங்கும் ஒரு தளம். பர்மிய அரசாங்கத்தால் நாடுகடத்தப்பட்டு இந்தியாவிலிருந்து இயங்கும் ஒருவர் தொடங்கியது இது. அவர் மீது விமானக் கடத்தல் குற்றச்சாட்டு ஒன்று இருந்தது. பின் அது “நல்லபடியாக” முடித்து வைக்கப்பட்டது.  இந்தியா  இவருக்கு பாஸ்போர்ட் வழங்கி அவர் பிற நாடுகளுக்குச் சென்றுவர வசதி செய்து கொடுத்தது. 
இந்தியாவிலிருந்து இந்திய அரசு மற்றும் உளவுத்துறையின் உதவிகளுடன் இயங்கும் ஒரு இணையத் தளம் இப்படி ஒரு உலகளாவிய முஸ்லிம் தீவிரவாதத்துடன் ரோஹிங்யா பிரச்சினையை இணைத்து உருவாக்கிய செய்தித் தொகுப்பின் ஓரங்கமாகத்தான் இவை எல்லாம் உள்ளன. 

போரில் முதல் பலி உண்மை என்பார்கள். முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் மட்டுமல்ல சமீபத்திய அமெரிக்கப் படை எடுப்புகளிலும் கூட எத்தனை பொய்கள் அவிழ்க்கப்பட்டுள்ளன. பேரழிவு ஆயுதங்களை சதாம் வைத்துள்ளார் எனக்கூசாமல் புஷ் சொல்லவில்லையா? இன்று மியான்மர் அரசு ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது ஒரு யுத்தத்தை நடத்திக் கொண்டுள்ளது, அது அவிழ்த்து விடும் பொய்களில் ஒன்றாகவே எல்லாம் அமைகின்றன. இதுவரை ஐநாவின் மனித உரிமை உடன்பாடுகள் எதிலும் கையெழுத்திடாத, மிகவும் கொடூரமான மனித உரிமை மீறல்களுக்குக் காரணமான நாடு மியான்மர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய வம்சாவளியினர் எங்கிருந்தாலும் அவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு. அராக்கன் மாநிலத்தில் வாழும் அந்த 86 இந்துக்களையும் கொன்றவர்கள் யார் என்பதைக் கண்டு உரிய நடவடிக்கையை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் குற்றவாளிகளை விட்டுவிட்டு அப்பாவிகளை மேலும் துன்புறுத்த இதை ஒரு சாக்காக வைத்து மோடி அரசு செயல்படக் கூடாது. 


டிரெண்டிங் @ விகடன்